Homeசெய்திகள்கட்டுரைதிராவிட வரலாற்றுத் தடத்தில்...

திராவிட வரலாற்றுத் தடத்தில்…

-

- Advertisement -

கோவி. லெனின்

அந்த அதிகாலைப் பொழுது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்துடன் விடிந்தது. திராவிடம் என்கிற மானுட உரிமைக்கான தத்துவத்தைப் பயில்கின்ற திராவிடப் பள்ளியின் மாணவர்களுடன் மொழிப்போர்க் களம், தமிழ்நாடு பெண்கள் மாநாடு, அதில் பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஒற்றைவாடை அரங்கம், மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து நடராசன் நினைவிடம், பெண்கள் மாநாட்டை முன்னெடுத்து மொழிப் போர்க்களத்தில் பெண்களின் பங்களிப்பிற்குத் தூண்டுகோலாக இருந்த டாக்டர் தர்மாம்பாள் நினைவிடம் என, காலை நேர நடைப்பயிற்சியை வரலாற்றுத் தடத்தின் வழியே மேற்கொள்ளும் வாய்ப்பை பிப்ரவரி 2ஆம் நாளன்று உருவாக்கியிருந்தார் திராவிட இயக்கச் சிந்தனையாளர்எழுத்தாளர் வெற்றிச்செல்வன்.திராவிட வரலாற்றுத் தடத்தில்...சென்னையின் வெள்ளை மாளிகை எனப்படும் பெருநகர மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை வளாகத்தில், பொழுது விடிவதற்கு முன்பே திராவிடப் பள்ளியின் இருபால் மாணவர்கள் கூடிவிட்டனர். திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னா ரெசு பெரியார், வெற்றிச்செல்வன் ஆகியோ ருடன் இந்த வரலாற்று நடைப்பயணத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

திராவிட வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை நாளான – ஆகஸ்ட் 22, நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளான நவம்பர் 20, தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட பல நாள்களில் சென்னையில் உள்ள திராவிட இயக்க அடையாளங்களை முன்வைத்து வரலாற்று நடை மேற்கொள்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக திராவிடப்பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று நடை கடந்த ஆண்டில் தியாகராய நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்தமுறை வடசென்னை பகுதியில் அமைந்தது.

ரிப்பன் மாளிகையின் முன்புறத்தில் உள்ள வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர் சிலை முன்பு அனைவரும் திரண்டிருந்த வேளையில், பொழுது மெல்ல விடியத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகால சமுதாயப் பண்பாட்டு இருளை நீக்கி, உரிமை வெளிச்சம் கிடைக்கச் செய்த நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயரின் முயற்சிகளையும் அவருடன் டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றவர்கள் இணைந்து நின்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்திற்கான சமூகநீதியை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகள், இரட்டையாட்சி முறையில் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்பில் நீதிக்கட்சி நிறைவேற்றிய திட்டங்கள் சட்டங்கள் குறித்த அறிமுகத்துடனும் வரலாற்று நடைப்பயணம் தொடங்கியது. மாநகராட்சிக் கட்டடத்தில் அமைந்துள்ள ரிப்பன் சிலை, சத்தியமூர்த்தி சிலை, மேயர் ராஜா சர் முத்தையா சிலை ஆகியவற்றின் கீழ் நின்று வரலாற்று நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டு, அருகிலிருந்த விக்டோரியா ஹால் சென்றோம்.

ஜஸ்டிஸ் பார்ட்டி அல்லது நீதிக்கட்சி என்ற பெயர் நிலைத்துவிட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் கூட்டம் நடந்த இடம், சென்னை மாநகராட்சிக் கட்டடத்திற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள விக்டோரியா ஹால்தான். தற்போது சீரமைக்கப்பட்டு வரும், ஐரோப்பிய கட்டட பாணியிலான அந்த ஹாலின் முன் நின்று, நூற்றாண்டுக்கு முன் நடந்த நீதிக்கட்சியின் முதல் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர்கள், முஸ்லிம்கள், பெண்கள் என அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளும் பங்கேற்ற செய்தியையும் பகிர்ந்து கொண்டோம்.திராவிட வரலாற்றுத் தடத்தில்...1938ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டின் ஊர்வலம் வடசென்னையில் உள்ள பெத்துநாயக்கன் பேட்டையில் தொடங்கி, வால்டாக்ஸ் சாலை யில் நிறைவடைந்து, அங்குள்ள ஒற்றைவாடை அரங்கில் மாநாடு நடைபெற்றது. பெத்து நாயக்கன்பேட்டை குப்பு தெருவில் உள்ள கோயில் வளாகத்தில் ஊர்வலம் தொடங்கியதால் திராவிடப்பள்ளி மாணவர்களை அங்கு அழைத்துச் சென்றோம்.

தமிழ்நாடு பெண்கள் மாநாட்டின் சிறப்புகளையும், அதை முன்னின்று நடத்தியவர்களையும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் குடிஅரசு இதழ்களின் பதிவுகளுடன் மாணவர்களுக்கு விளக்கினார் வெற்றிச் செல்வன். இந்த மாநாட்டிற்குப் பிறகு, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றதையும் 70க்கும் மேற்பட்ட பெண்கள் கைதாகி சிறைப்பட்டதையும் அவர் ஆதாரங்களுடன் தெரிவித்தார். தங்கசாலையில் டாக்டர் தர்மாம்பாள் வீடு இருந்த இடத்திற்கும் மாணவர்களை அழைத்துச் சென்று, தமிழ்நாடு பெண்கள் மாநாட்டின் தலைமைச் செயலகமாக அந்த இடம்தான் இருந்தது என்ற வரலாற்றுத் தகவலையும் எடுத்துரைத்தார்.திராவிட வரலாற்றுத் தடத்தில்...இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய களமாக இருந்த இந்து தியாலஜிக்கல் பள்ளிக்கும் சென்று, மொழிப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாக அது விளங்கியதையும், அணி அணியாக நாள்தோறும் மொழிப்போர் வீரர்கள் அங்கு களமிறங்கியதையும் எடுத்துரைத்தோம். வால்டாக்ஸ் சாலையில் ஒற்றைவாடை அரங்கம் இருந்த இடம் தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாறியுள்ள நிலையில், அந்த இடத்தையும் அடையாளம் காட்டினோம். அங்கு அரசின் சார்பில் ‘பெரியார் பட்டம் வழங்கப்பட்ட தமிழ்நாடு பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம்’ என்று அரசின் சார்பில் ஒரு கல்வெட்டு அமைக்கலாம் என்ற ஆலோசனையும் பகிரப்பட்டது.

1937-39 மொழிப்போர்க்களத்தில் தங்கள் உயிரை ஈன்ற தியாகிகளான தாளமுத்து, நடராசன் இருவரின் உடலும் எரியூட்டப்பட்டு, ஒன்றாக நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ள மூலக்கொத்தளம் மயானத்திற்கு மாணவர்களுடன் சென்றோம். அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளான ஜனவரி 25 அன்று திறந்து வைக்கப்பட்ட அந்த நினைவிடத்தைக் காண்பதற்கும் வீரவணக்கம் செலுத்துவதற்கும் தி.மு.க.வின் சென்னை வடக்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் தோழர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மொழிப்போர்த் தியாகிகளின் நினைவிடத்தில், தோழர் நடராசன் உடல் எரியூட்டப்படுவதற்கு முன் மயானத்தில் அண்ணா ஆற்றிய இரங்கலுரையின் உணர்ச்சிமிக்க பகுதி கல் வெட்டாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் நெஞ்சில் பதித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.திராவிட வரலாற்றுத் தடத்தில்...அதே மயானத்தில் அமைந்துள்ள டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மாணவர்கள் வீரவணக்கம் செலுத்தினர். அருகில் இருந்த இந்தி எதிர்ப்பு வீராங்களை தனலட்சுமி வேலாயுதம் அவர்களின் கல்லறையையும் அதில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டில் இருந்த வரலாற்றுக் குறிப்பையும் அறிய முடிந்தது.

1937-39 இந்தி ஆதிக்க எதிர்ப்பு காலகட்டத்தில். வேலாயுதம் அவர்களின் வாழ்விணையர் பத்மாவதி என்பவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையை முழங்கியதுடன், தமிழ் வாழ்க என்ற சொற்களுடனான சேலையையும் அணித்திருந்ததால், அன்றைய அரசின் காவல்துறையால் சித்திரவதைக்குள்ளாகி உயிர் இழந்தார்.

அதன்பின், 1948இல் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற வேலாயுதம் அவர்களின் இரண்டாவது வாழ்விணையர் தனலட்சுமியை, கர்ப்பிணி என்றும் பாராமல், போலீசார் தங்களுடைய வாகனத்தில் ஏற்றி 40 மைல் தொலைவுக்கப்பால் விட்டுவிட்டு, அவர் தன் இருப்பிடம் வர முடியாமல் பல நெருக்கடிகளைக் கொடுத்த நிலையில், அவருடைய கருக்கலைந்து, உடல்நலன் குன்றி இறந்து போனார். தாய்மொழி காத்திட ஒரே குடும்பத்தில் இரண்டு தாய்மார்கள் தங்கள் உயிரைக் கொடுத்த வரலாற்றை கல்லறைக் கல்வெட்டு திராவிடப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, வரலாற்று நடைப்பயணத்தை ஒருங்கிணைத்த எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தது.

அறிய வேண்டிய அரிய வரலாற்றுத் தகவல்கள் நிறைய உள்ளன. நடந்தவற்றை அறிந்து கொள்ள இன்னும் நடக்கவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. பயணத்தைத் தொடர்வோம்.

MUST READ