மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் ஒரே இயக்கம் திமுக என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் கல்விக்காகவும் திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்வதற்கான விடியல் பயணம் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் என எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற பல்வேறு பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் அழைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றந்தாய் மனப்போக்குடன் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பாஜக அளும் உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பெருமளவு வரி வருவாய் வழங்கும் தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பேரிடர் நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாநில அரசு தனது சொந்த நிதியில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் கல்விக்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை ஒதுக்கிய நிலையில், தமிழ்நாட்டிற்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ.573 கோடியை இதுவரை வழங்கவில்லை. இதனால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய தொகையையும் விடுவிக்கவில்லை.
இதேபோல், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. வழக்கமாக பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்து தகுதியான நபரைதேர்வு செய்யும். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய பல்கலைக் கழக மானியக்குழுவின் உறுப்பினரை அந்த குழுவில் சேர்க்க வலியுறுத்தி துணை வேந்தர் நியமன விவகாரத்தில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று தற்போது உயர் கல்வித்துறையை மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் விதமாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் யுஜிசியின் விதிகளை ஏற்காத பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் அதிகாரம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கிறது. இதனால் பல்கலைக் கழகங்களை உருவாக்கி, அவற்றை நடத்தி வரும் மாநில அரசுகளின் அதிகாரங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தமிழ்நாட்டின் நன்மைக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். இப்படி கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பல்வேறு வகைகளிலும் திமுக அரசுக்கு, மத்திய பாஜக அரசு தொடர் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2025ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வு குறித்தோ, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தோ எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதேபோல், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடோ , தமிழ்நாட்டில் புதிய ரயில்வே அல்லது நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கான அறிவிப்போ வெளியாகவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தபோதும், மத்திய பட்ஜெட்டில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கும், பேரிடர் மேலாண்மைக்கும் வழங்க வேண்டிய நிதி குறித்து அறிவிக்கவில்லை. அத்துடன் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. ஆனால் பாஜக தனது கூட்டணி கட்சி மாநிலமான பீகாருக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தது.
இதன் காரணமாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என்றும், தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? எனவும் வினவி இருந்தார். எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8 சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தான் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதிலும், திட்டங்களை ஒதுக்குவதிலும் தொடர்ந்து இரட்டை வேடம் போடும் மத்திய பாஜக அரசின் செயலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக இறுதிவரை போராடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார் என்றால் அது மிகையல்ல!