புதிதாக கட்சி ஆரம்பித்த ஒருவர் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாம். ஆனால் 5 வருடம் நல்லாட்சி நடத்திய ஒருவர் 200 சீட் வெல்வோம் என கூறினால் அது ஆணவப் பேச்சாம் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் மாநில திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய புலம்பெயர் தொழிலாளர்கள் (தமிழ், ஆங்கிலம்) வாகன உற்பத்தியில் தமிழ்நாடு (தமிழ், ஆங்கிலம்) என 4 நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூல்களை திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது:- சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தாம்பரத்தில் டி.வி.எஸ் பைக் ஏஜென்சி வைத்திருந்தனர். அவர்கள் ஒரு கார்ப்பரேட் ஃபிலிம் எடுக்க வேண்டும் என என்னை அழைத்தனர். எனக்கு அது குறித்த எந்த புரிதலும் இல்லை. டிவிஎஸ் பைக் உற்பத்தி முதல் விற்பனை வரை படம் எடுக்க வேண்டும். அதனை டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்பதற்காக. அப்போது தான் நான் வாகன உற்பத்தி குறித்து முதன் முதலில் படித்தேன். இதனை கொண்டு 15 நிமிட ஸ்கிரிப்ட் ரெடி செய்தேன். கான்ஃபரன்ஸ் ஹாலில் டிவிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கதையை சொல்லி முடித்தேன். அப்போது, டிவிஎஸ் நிறுவன தலைமை அதிகாரி சீனிவாசன் என்னை பாராட்டினர். அதன் பின்னர் தான் சத்ய ஜோதி பிலிம்ஸ் பட வாய்ப்பு வழங்கினர். இதனை ஏன் சொல்ல வந்தேன் என்றால் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு நன்றாக படிக்க வேண்டும் என்று நாம் தான் நினைக்கிறோம். அதனை ஜெயரஞ்சன் அசராமல் செய்கிறார்.
இந்த நாட்டில் மத்திய தமிழராய்ச்சி நிறுவனத்திற்கு துணை தலைவராக சுதா சேஷய்யன் இருக்கலாம். ஆனால் ஸ்டார்ட் அப் குறித்து பழ கருப்பையா பேசக் கூடாதா?. மத்திய தமிழராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் தினம் கொண்டாடி உள்ளனர். அவர் யார் என்றால் தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவராம். அப்போ தொல்காப்பியர் தமிழ் இலக்கணத்தை உருவாக்க வில்லையா?. மொத்த சங்கப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் எங்கும் அகத்தியரின் பெயர் இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக அகத்தியரின் பெயரில் சேர்க்கின்றனர். இப்போது அந்த பொய்களை எல்லாம் நாம் சென்று மறுக்க வேண்டும். இந்த நேரத்தில்தான் தொடர்ச்சியாக இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிற சுப.வீரபாண்டியனையும், ஜெயரஞ்சனையும் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஏன் என்றால் அவர்கள் தரவுகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டே உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை குறித்து ஜெயரஞ்சன் புத்தகம் விரிவாக பேசுகிறது. வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்கள், திருமணம் செய்துகொண்டு தங்களது மனைவி, பிள்ளைகளுடன் இங்கே வசிக்கின்றனர். அவர்களுடைய குழந்தைகளை இங்குள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்க வைக்கின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் அந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்வழியில் படித்த குழந்தைகளுக்கான ரூ.1,000 கிடைக்கும். அந்த ஆயிரத்தை பெறுபவர் ஒரு வடமாநில தொழிலாளி. இந்த மாற்றம் இன்னும் 5 ஆண்டுகளில் நிகழ போகிறது. அப்போது, யார் தமிழர் என்று பரிசோதனை செய்ய முடியாது.
கோவிட் 19 லாக்டவுன் காலத்தில் ஒரு பெண் அரசு அதிகாரி நாள்தோறும் பாதிப்பு விவரங்களை தெரிவிப்பார். அந்த அம்மா ஏன் பேசுகிறது. ஓட்டு வாங்கியவன் எங்கே சென்றான். அவர் வரமாட்டாரா என ஜெயரஞ்சன் கேட்பார். அவர் ஐஏஎஸ் அதிகாரி என்று சொன்னால், என்ன ஐஏஎஸ், அந்த வருச பரிட்சையில் முதல் மார்க் வாங்கியவர் அவ்வளவுதானே என்பார். அவரை சடார் என திரிப்பில் ஒருவரை உதிர்ப்பது என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அவன் சும்மா இருப்பான். இல்லாவிட்டால் வாட்ஸ்ஆப் ஃபார்வர்டுகளை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
எவ்வளவு தைரியமாக இன்று சொல்ல முடிகிறது பாருங்கள். 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என்று. செல்ல முடிகிறது அல்லவா. நடக்குமா அது. அவ்வளவு பெரிய கொலை நடைபெற்று, அந்த பழி திமுகவின் மீது விழுந்தபோதும் கூட திமுக டெபாசிட் இழக்காதது. முதல்வரை போல நாம் சென்று பேசும் மேடைககளில் எல்லாம் சொல்லி சொல்லி என்ன ஏற்ற வேண்டும் என்றால் 200 சீட் கண்டிப்பாக ஜெயிப்போம் என்பது தான். கலைஞரை வெல்வேன், தாண்டுவேன் என சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நீங்கள் ஆட்சியில், திட்டங்களில் எல்லாவற்றிலும் கலைஞரை அவர் தாண்ட வேண்டிய காலம் வழங்கி இருக்கும் வாய்ப்புதான் என்று நினைக்கிறேன். 183 சீட்டுகள் ஜெயிச்ச திமுக. அதுதான் பெரிய வெற்றி. அந்த வெற்றியை தாண்ட வேண்டிய இடத்தில் நாம் பொறுப்பில் இருக்கிறோம். கட்சி ஆரம்பித்த ஒருவர் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாமா?. எப்படி ஆரம்பித்த வருடமே நீங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவீர்களா?. அது ஆணவ பேச்சு இல்லையாம். ஒருவர் 5 வருடம் வேலை செய்வார்களாம். நல்ல திட்டங்களை கொண்டுவருவார்களாம். அந்த திட்டங்களை இந்தியா முழுவதும் காப்பி அடிப்பார்களாம். ஆனால் நாங்கள் 200 சீட் ஜெயிப்போம் என கூறினால் அது ஆணவப்பேச்சாம். உறுதியாக ஜெயிப்போம் 200 சீட். அதற்கான வேலை செய்துதான் முக்கியம். நமக்கு இதுபோன்ற அரசு சார்ந்த மனிதர்களும் உடனிருப்பது பெரிய மகிழ்ச்சி, இவ்வாறு அவர் தெரிவித்தார்.