இருமொழி கொள்கை என்பது நாட்டிற்கு பொருந்தும் கொள்கை. இந்த விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளின் மோதல் நன்மையில்தான் சென்று முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுரில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கை விவகாரத்தில் உயிரே போனாலும் பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த உரையின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாடு முழுவதும் இந்தி தான் ஆட்சிமொழி என்று இருந்தது. இந்தி பேசாத மாநிலங்களின் வசதிக்காக 15 ஆண்டுகள் ஆங்கிலமும் நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1965 ஜனவரி 26ஆம் தேதி முதல் இந்தி மட்டும்தான் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இது எப்படி வந்தது என்றால் மகாத்மா காந்தியின் வேலைத்திட்டங்களில் ஒன்று இந்தியா முழுக்க இந்தி படிக்க வேண்டும் என்பதும் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார்கள். இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் இருந்த நீதிக்கட்சி, கொஞ்சம் அதிகாரம் இருந்தாலும் போதும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாம் என்று இதனை ஏற்றுக் கொண்டது. அதன் காரணமாகத்தான் நமக்கு இடஒதுக்கீடே கொண்டுவரப்பட்டது.
காங்கிரசை போல, நீதிக்கட்சியும் புறக்கணித்திருந்தால் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறை இல்லாமல் இருந்திருக்கும். வகுப்புவாரி இடஒதுக்கீட்டை பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அறிமுகம் செய்தார். இதனை பெரியார் வரவேற்ற நிலையில்,பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிங்காரவேலரின் மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படியான பல்வேறு மாறுதல்களை நாம் அந்த காலத்தில் செய்திருக்கிறோம். எவற்றை எல்லாம் நாம் கடந்து வந்துள்ளோம் என்பது புரிய வேண்டும். அப்போதுதான் என்ன உரிமைகள். ஏன் தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற முழக்கம் இன்றும் எழுப்பப்படுகிறது என்று தெரியும். தற்போது நாம் எந்த பக்கம் நிக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக உள்ளது. நாம் தமிழ்நாடு 60 வருடங்களாக எந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தோமோ அந்த பக்கம் தான் நிலைப்பாடு எடுக்க முடியும். அதன்படி தற்போது திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தான் நாம் எடுக்க முடியும். திமுக, அதிமுகவையோ அல்லது அவற்றி தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு தற்போது நேரமில்லை. சுருக்கமாக சொல்தென்றால் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் இணைந்து நிற்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும், தமிழ்நாட்டிற்கு இடையே நடைபெறும் மோதல் என்பது வெற்றியில் சென்றுதான் முடியும். 1967ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இதையேதான் செய்தது. இதற்கு காரணம் வடக்கில் இருக்கும் வாக்கு வங்கியாகும். இந்திக்கு எதிராக தர்மேந்திர பிரதானோ, வேறு யாரோ பேசிவிட்டு பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் யாரும் வெற்றிபெற முடியாது. ஜனதா ஆட்சி நடைபெற மிகப்பெரிய மக்கள் புரட்சியே நடைபெற்றது. ஆனால் மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்தபோது இந்தியைதான் கையில் எடுத்தார். உண்மையில் NEP, பிஎம் ஸ்ரீ போன்றவை கல்வித்துறையின் கீழ் வருகிறது. ஆனால் ஆட்சி மொழி, இந்திய மொழிகள் போன்றவை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் இது குறித்து அமித்ஷா கருத்து ஏதும் சொல்ல மாட்டார். காரணம் அதற்கு குஜராத்திலும் எதிர்ப்பு உள்ளது.
நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் வரும்போதே, மொழி சார்ந்த உணர்வு எப்படி வராமல் இருக்கும். தங்கள் மொழி மீது காதல் வராதா? இந்தி தங்கள் மொழியை அழிக்கிறது என்ற உணர்வு இல்லாமல் போய்விடுமா? இதுபோன்ற மாநிலங்களில் இருந்து வருபர்கள் தற்போது வெளிப்படையாக இந்தி ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் மும்பையில் பல்வேறு மக்கள் வசிப்பதால் மராத்தி தேவையில்லை என்று சொன்னார். உடனடியாக முதலமைச்சர் பட்னாவிஸ் அரசின் அனைத்து தகவல் தொடர்புகளும் மராத்தியில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இதேபோன்ற கருத்தை நீங்கள் சென்னைக்கு பொருத்திப்பார்க்கலாம். ஆந்திராக்காரர்கள் கேட்டார்கள் தூக்கிகொடுத்து விட்டோமா? சென்னையை பல மொழி பேசும் நகரம் என்றும் யாரும் சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டிற்கு நிதியை நிறுத்துவது என்பது மிகவும் தவறானது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் அடிபட்டுவிடும். தமிழ்நாட்டிற்கு பிரத்யே விலக்கே உள்ளதால், தாமாகவே நிதி வந்துவிடும். இப்போது விட்டுக்கொடுத்து விட்டோம் என்றால் மீண்டும் நம் மீது ஏறி மிதிப்பார்கள். அதனால் விட்டுக் கொடுப்பதில் அர்த்தம் கிடையாது. காரணம் அது தமிழ்நாட்டின் உணர்வு சார்ந்த விஷயமாகும். தொகுதி மறுவரையரை வேறு, மொழிக்கொள்கை வேறு. தொகுதி மறுவரையரை விவகாரத்தில் நாம் பிரமாநிலங்களை சேர்க்கலாம். ஆனால் மொழி விவகாரத்தில் சேர்த்திட முடியாது. ஆனால் மாநிலங்களில் இந்த எதிர்ப்பு இயல்பாகவே ஏற்படுகிறது. டிடிவி தினகரன் அண்ணா இருந்தால் ஏற்றுக்கொள்வார் என சொல்கிறார். அது மிகவும் தவறனாது. அண்ணா இருந்தால் நிச்சயம் எற்றுக்கொள்ள மாட்டார். ஆளுங்கட்சிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வரலாறு என்கிறபோது இருமொழி கொள்கைதான்.
நீங்கள் ஜெர்மனிக்கு செல்வது என்றால் ஜெர்மனி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் உலகப் பொதுமொழியாகி நீண்டகாலமாகிவிட்டது. இது பிரிட்டிஷ்காரர் சிஸ்டம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இல்லாத அமெரிக்காவின் மொழி ஆங்கிலம் என்று டிரம்ப் புதிதாக சட்டம் கொண்டுவருகிறார். எல்லோருக்கும் 2 விஷயங்கள் முக்கியமானதாகும். முதலாவது தாய்மொழி, 2வது உலகப் பொதுமொழியான ஆங்கிலம். 3வது மொழியை விருமபினால் படித்துக்கொள்ளுங்கள். அதை விடுத்து 3வது மொழியை திணித்தால் மாணவர்களின் பாட சுமை அதிகரித்துவிடும். எந்த பள்ளியில் உள்ள மாணவர்களிடம் போய் கேட்டாலும் அவர்கள் தங்களுக்கு கணிதம், அறிவியியல் ஆசிரியர்களை கொடுங்கள், லேப் வசதியை ஏற்றுத்தி கொடுங்கள் என்றுதான கேட்பார்கள். இந்தியை, தெலுங்கை, மலையாளத்தை கொடுங்கள் என்று யாராவது கேட்கிறார்களா?
அண்ணாமலை வீட்டு பிள்ளைகள் எல்லாம் எந்த பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக அமைச்சர்களின் பிள்ளைகள் 3 மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார்கள். அவர்கள் 30 மொழியைக்கூட கற்றுக்கொள்ளட்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் அரசின் கல்விக்கொள்கை என்ன என்பதுதான் கேள்வி? அது இருமொழி கொள்கை. இது தமிழ்நாட்டிற்கு பொருந்துமா என்றால் இந்தியாவுக்கே பொருந்தும். நீங்கள் பீகாரில் போய் கேட்டாலும் இதைதான் சொல்கிறார்கள்.