Homeசெய்திகள்பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - AVADI PRESS CLUB...

பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை

-

- Advertisement -

பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று AVADI PRESS CLUB (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டுமனை அல்லது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சலுகை விலையில் வீடு ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்று ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் (AVADI PRESS CLUB) துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள முன்னணி காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் நிருபர்களை நியமிக்கின்றனர். அவர்களை இரவு பகல் பாராமல் வேலையும் வாங்குகின்றனர். ஆனால் அந்த நிருபர்களின் வாகனத்திற்கு பெட்ரோல், செல்போன் ரீ சார்ஜ் மற்றும் அவர்களின் குடும்ப சூழ்நிலை குறித்து நிறுவனங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. (தினத்தந்தி) போன்ற முன்னணி நாளிதழில் பணிப்புரியும் மாவட்ட நிருபர்களுக்கு மாதச் சம்பளம் 5000 ரூபாய். வட்டார அளவில் பணிப்புரியும் நிருபர்களுக்கு 3000 ரூபாய். இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு ஒருவரின் குடும்பம் எப்படி உயிர் வாழும் என்ற அக்கறை அந்த நிறுவனத்திற்கு துளியும் இல்லை. தினமலர், தி இந்து தமிழ் போன்ற சில பத்திரிகைகளை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் இதே நிலைதான் கடைபிடிக்கிறது. ஊரில் உள்ள குறைகளை எல்லாம் சுட்டிக் காட்டும் பாலிமர் தொலைக்காட்சியில் பணிப்புரியும் மாவட்ட, வட்டார நிருபர்களின் ஊதியத்தை கேட்டால் கண்ணீரை வரவழைக்கும்.

ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணிப்புரிகின்ற ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், நிருபர்களுக்கு தொடக்க சம்பளம் 50,000 முதல் மூன்று லட்சம் வரை ஊதியம் பெறுகிறார்கள். ஆனால் மாவட்ட , வட்டார நிருபர்களை பற்றி துளியும் கவலைப் படுவது இல்லை. சில அரசியல் வாதிகள், அதிகாரிகளின் தயவில் பல வட்டார நிருபர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை.

இந்த நிலையில் இருக்கும் சில நிருபர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த வேண்டிய தேவையில் உள்ளனர். அது சில நேரங்களில் தவறுதலாக அமைந்து விடுகிறது. அதற்கு ஊடக நிறுவனங்களும் மறைமுகமாக உடைந்தையாக இருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு ஓரிரு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டும் இருந்தபோது நிருபர்களுக்கு என்று மரியாதை இருந்தது. ஆனால் தற்போது ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் நிருபர்களை கண்டாலே அரசியல் பிரமுகர்கள் வெறுக்க தொடங்கி விட்டார்கள். பத்திரிகையின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் இருந்த மரியாதை என்பது முற்றிலும் காணாமல் போய்விட்டது.

ஒரு மாவட்டத்திற்கு 100 முதல் 150 நிருபர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 3000 பேர் இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை தரம் மோசமான நிலையில் தான் உள்ளது. இவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு துணை முதலமைச்சரிடம் உள்ளது.

ஏன் துணை முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்?

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள ஊடகங்களை விட தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் பகுத்தறிவு சிந்தனை கொண்ட நிருபர்கள் அதிகமாக உள்ளனர். அவர்கள் எல்லோரும் திமுக அரசை மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரித்து வருகிறார்கள். அதனால் தான் அண்ணாமலை, சீமான் போன்ற தலைவர்கள் பத்திரிகையாளர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்கள். அறிவாலயத்தில் 200 ரூபாய், 300 ரூபாய் கவர் வாங்கக் கூடியவர்கள் என்று ஆத்திரத்துடன் பேசுகிறார்கள். அவர்கள் எளிதாக வெற்றி பெற முடியாததற்கு பகுத்தறிவு மிக்க ஊடகவியலாளர்கள் தான் காரணம். அவர்கள் தான் பகுத்தறிவுக்கு எதிராக மத்தியில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் வரும் கருத்துகளை உடனுக்குடன் எதிர்த்து விவாதத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஊடகவியலாளர்களின் செயல்பாடுகள் அனைத்தும் திமுக அரசுக்கு ஆதரவாகவும், அரணாகவும் இருக்கிறது.

அதனால் தமிழ்நாடு ஊடகவியலாளர்களை, பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இயல்பாகவே திமுக அரசிடம் உள்ளது என்று ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் கருதியதின் அடிப்படையில் கடந்த 27-11-2024 அன்று மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டோம். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு இலவச வீட்டு மனை அல்லது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் சலுகை விலையில் வீடு ஒதுக்கி தருமாறு (ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்) AVADI PRESS CLUB சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு துணை முதல்வர் அவர்களும் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

MUST READ