சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் எந்த விதமான சமரசத்திற்கும் நடிகை தயாராக இல்லை என்றும், இதனால் வழக்கில் சீமான் சிக்கப் போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது நடிகை அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:-தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியிருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கவில்லை. சீமான் கிட்டத்தட்ட அந்த கட்சியை கலைக்கும் நிலைக்குதான் கொண்டு சென்றுள்ளார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ் தேசியத்திற்கான தேவை என்பது தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. அதனை ஒட்டி பிறந்த கட்சிதான் நாம் தமிழர். இந்த கட்சியின் பிறப்புக்கு செவிலியர் வேலை செய்தவர்கள் யார் என்றால்? கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகள், முற்போக்குவாதிகள் ஆவர். ஜெகத் கஸ்பர், நடிகர் மணிவண்ணன் போன்றோர் நாம் தமிழர் கட்சியின் தோற்றுவாயாக இருந்தனர். இவர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். தமிழ் ஈழம் என்பது ஒரு இனத்தின் கனவாகும். அந்த வீரம் செறிந்த போராட்டத்தை போய் பார்த்துவிட்டு வந்து, இன அழிப்பின் விளைவுகளை தமிழ்நாட்டில் எடுத்துச் சொல்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். அதற்காக தோன்றிய ஒரு மாபெரும் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி. அந்த கட்சியின் உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விற்பனர்கள், நல்லவர்கள்தான் இருந்தனர்.
ஆனால் அந்த கட்சியின் தலைமை பொறுப்பு சீமானிடம் சென்றது தான் மிகப் பெரிய தவறாக முடிந்தது. இதன் காரணமாக மிகவும் மோசமான விளைவுகளை இன்று நாம் தமிழர் கட்சி சந்தித்துள்ளது. எப்படி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இல்லாமல் இயங்குமோ, அதுபோல நாம் தமிழர் கட்சியும் சீமான் இல்லாமல் செயல்படும். நாம் தமிழர் என்ற கட்சியும், தமிழ் தேசியமும் சீமானோடு நின்று விடாது. தமிழ் தேசியத்திற்கு தலைமை தாங்கும் தகுதியை சீமான் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு எனக்கு கிடைக்கும் தகவல்களின்படி சீமானால் அவரது சொந்த வீட்டில் கூட இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சீமானுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டை விட்டு வெளியே போய் கட்சி நிகழ்ச்சிகளில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். சீமான் மீது நடிகை தொடர்ந்துள்ள பாலியல் வழக்கும் அவருக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரயன், வழக்கை முழுக்க முழுக்க ஆராய்ந்து, கிட்டத்தட்ட ஒரு தீர்ப்பு போலவே உத்தரவிட்டார். சீமான் காதலிப்பதாக நடித்து, நடிகையை ஏமாற்றியுள்ளார் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு காரணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள் ஆகும். உதாரணத்திற்கு மதுரை செல்வம் என்பவர் நடிகையிடம் பெரிய அளவில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். அப்போது சீமான் நடிகைக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் பேசுகிறார். அந்த வாய்ஸ் மெசேஜில் நிறைய இடங்களில் சீமான் இருவருக்கும் உள்ள தொடர்பை ஒப்புக்கொள்கிறார். அதனை எல்லாம் நடிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அவற்றை குறித்து எல்லாம் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது. உதாரணத்திற்கு கருக்கலைப்பு எங்கு நடைபெற்றதோ, அந்த மருத்துவமனையில் சென்று மருத்துவர்களிடம் அறிக்கை பெற்றனர். இந்த வழக்கில் அந்த அளவிற்கு விரிவான விசாரணை நடைபெற்றது. நடிகை தாக்கல் செய்த பதில் மனுவில் சீமான் தன் வாயாலே ஒப்புக் கொள்ளக்கூடிய பர்சனல் விஷயங்கள், கருக்கலைப்புக்கு சீமான் கையெழுத்து போட்டது போன்றவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு தான் நீதிபதி வழக்கில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதங்கள், நடிகை தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டதா? இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் அணுகும்போது பாஜகவின் வழக்கறிஞர் நிர்நிமேஷ் துபே உள்ளே வருகிறார். பாஜகவின் லாபி உள்ளே வருகிறது. உச்சநீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வருகிறபோது நடிகை தரப்போ, தமிழ்நாடு அரசு தப்பிலோ ஆஜராகவில்லை. மேலும் காவல்துறையின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்ன என்றால் நீதிமன்றத்திற்கு வெளியே இருவரும் சமரசத்திற்கு போங்கள். விசாரணைக்கு 2 மாதம் தடை விதிப்பதாக தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணையின்போது எப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு புலனாய்வு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோ, அதேபோல உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அடுத்தபடியாக நடிகை தரப்பில் பெரிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆஜராகி விஜயலட்சுமிக்காக வாதாடுவார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் பெரிய அளவுக்கு தீர்ப்பு வழங்கியவர் ஆவார். அடுத்தபடியாக இந்த வழக்கில் அவர் நடிகை தரப்பு வாதங்களை கேட்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதற்கு நடிகையும் தயாராக இல்லை. சீமானும் தயாராக இல்லை. அதேவேளையில் நீதிமன்றத்திற்கு வெளியே நடிகையுடன் சமரச தீர்வு மேற்கொள்வதற்கு சீமான் தரப்பில் இருந்து அவரது உறவினரான லூயிஸ் என்பவர் நடிகையிடம் பேசினார். அந்த ஆடியோவும் வெளியாகியுள்ளது. லூயிஸ் பேசும் போதும், நடிகை சமரசத்திற்கு ஒப்புக்கொள்ள வில்லை. இந்த வழக்கில் சமரசமாக செல்வது என்றால் அது நீதிமன்றம் வாயிலாகவே நடைபெற வேண்டும், நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் நடிகை திட்டவட்டமாக கூறிவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை நீதிமன்றம் சொல்லட்டும். அப்படி நீதிமன்றம் சொல்லும் இழப்பீட்டை சீமான் வழங்கட்டும். இதன் மூலம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சீமான் ஒப்புக்கொள்வதாக அர்த்தம் என்று நடிகை கூறுகிறார். இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் சீமான் மது பாட்டிலால் நடிகையை தாக்கிய காயங்கள் உள்ளன. மேலும் அவரை நிலைப்படியில் இழுத்து மோதி நெற்றியில் காயப்படுத்தியதற்கான எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளும் உள்ளன.
சீமான் குற்றம்சாட்டுவது போன்று நடிகை ஒன்றும் விலைமாது எல்லாம் கிடையாது. அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அதை கடந்து அவரது குடும்பம் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் தொடர்புடைய குடும்பமாகும். சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, நடிகையின் குடும்ப பிரச்சினைக்காக சீமானிடம் செல்கிறார். அப்போது சீமான் கலைஞருடன் நெருக்கமாக இருந்தார். அதன் காரணமாக தமிழச்சி தங்கபாண்யனின் உறவினர் எஸ்.எஸ்.பி சந்திரசேகர் மூலம் சீமான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தினார். இதற்கு பின்னர் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடிகையை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என சீமான் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அவர் வெளியிடும் வீடியோ பதிவுகள் அனைத்திலும் மிகவும் தெளிவாகத்தான் பேசுகிறார். நாம் அவரிடம் விசாரிக்கும்போது அவர் வழக்கில் எந்த விதமான சமரசத்திற்கும் தயாராக இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. அப்படி நடிகை சமரசத்திற்கு தயார் இல்லை என்கிறபோது, இந்த வழக்கில் சீமான் சிக்கப் போவது உறுதிதானே. ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அப்படி பாலியல் வழக்கில் சிக்கி சீமானுக்கு தண்டனை வழங்கப்பட்டால் இன்று அவருக்காக பேசும் வீரப்பன் மகள் வித்யாராணி என்ன செய்வார்? சாகுல் ஹமீதின் மகள் பர்ஹானா என்ன செய்வார்?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.