இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜெவிபி) என்ற இடதுசாரி இயக்கத்தின் தலைவர் அநுரா குமார திசநாயக்க புதிய அதிபராக பதிவி ஏற்றுக் கொண்டார்.
இலங்கையில் கடந்த 2022 ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இலங்கையின் ஒட்டுமொத்த மக்களும் லட்சக் கணக்கானோர் திரண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை முழுக்க முழுக்க முன்னின்று நடத்தி அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை நாட்டை விட்டு வெளியேற காரணமாக இருந்தவர் அநுர குமார திசநாயக்காதான். அதன் விளைவாக கடந்த 2019 ல் நடந்த தேர்தலில் வெறும் 4 சதவீதம் ஓட்டுகள் மட்டும் வாங்கிய அநுர குமார திசநாயக்க, தற்போது 2024 ல் நடந்த தேர்தலில் 42 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று அதிபர் நாற்காலியை பிடித்திருக்கிறார்.
இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க இடது சாரி இயக்கத்தை சேர்ந்தவர். தற்போது அவருடைய நிலைபாடு இந்தியாவிற்கு ஆதரவாக இருக்குமா? சீனாவிற்கு ஆதரவாக இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
இலங்கையில் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என்று மூன்று இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் தமிழர்கள் பெரும்பான்மையுடன் வாழும் பகுதியை தனியாகப் பிரித்து “தமிழ் ஈழம் தனி நாடு” கோரிக்கையை முன்வைத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக போராடி வந்தனர். இறுதியில் விடுதலைப் புலிகள் தலைமையில் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி ஆதரித்தார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி, தமிழ்நாட்டை புலிகளின் பயிற்சி களமாக மாற்றி கொடுத்தார். இலங்கையின் வடகிழக்கு பகுதி தமிழர்களின் பூர்வீக தாயகம் என்ற வரலாற்று உண்மையை சொன்னவர் இந்திரா காந்தி.
அன்னை இந்திரா மறைவிற்கு பின்னர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நிலைபாடு தலைகீழாக மாறிப்போனது.
இந்திரா காந்தி, இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கண்டித்தார். அதன் பின்னர் அதிகாரத்திற்கு வந்த இந்திராவின் மகன் ராஜீவ்காந்தி இனப் படுகொலையை ஆதரித்தார். தமிழர்களுக்கு எதிராக நின்றார். இலங்கை தமிழர் பிரச்சனையில் தாய் இந்திராகாந்தியின் கொள்கைக்கு துரோகம் செய்கிற விதத்திலும், இந்திராவின் காங்கிரஸ் அரசுக்கு நேர் எதிரான திசையில் ராஜீவ்காந்தி பயணம் செய்தார். அந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திய தமிழர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருவதை நம்மால் உணரமுடியும்.
இந்தியாவின் மிக அருகில் 26 கிலோமீட்டர் தொலைவில் தமிழர்களுக்கான தனி நாடு கோரிக்கை நிறைவேறியிருந்தால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக அமைந்திருக்கும். அதுபோன்ற நல்லது நடக்காமல் பார்த்துக் கொண்டதில் பெரும் பங்கு வகித்தவர்கள் சுப்பிரமணியசாமி, சோ.ராமசாமி போன்ற பிராமணர்கள். இந்தியாவின் வெளியுறவுக் அமைச்சகம் எப்போதும் அவர்கள் வசமே இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை உலகளவில் தமிழர்களுக்கென்று தனி நாடு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள், இருக்கிறார்கள், அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம், திரிகோணமலை பகுதியில் ராணுவம் மற்றும் விமான தளம் அமைக்க சீனா அனுமதி கேட்டது. அந்த கோரிக்கையை பிரபாகரன் ஏற்று கொண்டால் தனி ஈழம் பெற்றுத் தருவதற்கு சீனா போதிய உதவி செய்யும் என்று உறுதியளித்தது. அப்போதே அதனை பிரபாகரன் நிராகரித்தார். இந்தியா என் தொப்புள் கொடி உறவுகள் வாழும் பூமி. அந்த நிலத்திற்கு எதிராக ஒரு நாளும் சிந்திக்க மாட்டேன் என்று உறுதியுடன் நிராகரித்தார் பிரபாகரன். ஒரு வேளை திரிகோணமலையை அப்போது சீனாவிற்கு விட்டு கொடுத்திருந்தால் “தனி ஈழம்” கிடைத்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெரும் இன்னல்களில் முடிந்திருக்கும். அதை தொலை நோக்கு பார்வையுடன் பிரபாகரன் தவிர்த்தார்.
இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையினால் விடுதலைப் புலிகளின் போராட்டம் 2009 ல் முடிவிற்கு வந்தது. தனி ஈழம் கோரிக்கையும் நீர்த்து போனது. ராஜபக்சேவின் அதிகார பலம் வென்றது. ஆனால் ராஜபக்சேவின் அதிகார பலம், ஆணவப் பலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி 2022 ல் ராஜபக்சேவை நாட்டை விட்டே விரட்டியது.
இந்த நிலையில் தற்போது இலங்கையின் புதிய அதிபராக அநுர குமார திசநாயக் பதவியேற்றுள்ளார். அவருக்கு அந்த மண்ணில் மூன்று சவால்கள் காத்திருக்கிறது. 1 பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது, சரிசெய்வது. 2 சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்ற இனங்களின் பிரச்சினை. 3 இலங்கையின் அருகில் உள்ள இந்தியாவின் பக்கம் நிற்பதா? சீனாவிற்கு ஆதரவாக நிற்பதா என்ற சவால்கள் காத்திருக்கிறது.
இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக் இடது சாரி சிந்தனைவாதி என்பதால் சீனாவின் பக்கமே நிற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அது இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.