ராஜசங்கீதன்
இந்திய துணைக்கண்டத்தை அரசியல் சாசனத்தில் வரையறுப்பது குறித்து முக்கியமான விவாதம் அரசியல் சாசன சபையில் நடந்தது.அமெரிக்கா போல United States of India அல்லது Soviet Union போல Inidian Union அல்லது கூட்டமைப்பு என்ற அர்த்தம் தொனிக்கும் Federation போன்ற வார்த்தை பிரயோகங்கள் ஆலோசிக்கப்பட்டன.
ஆனால் ஒன்று நிச்சயம்!
இந்தியாவை நாடு என அழைப்பதில் பெரும் தயக்கம் இருந்தது. ஏனெனில் அதற்கு முன்தான் இந்திய துணைக்கண்டத்தின் பல ராஜ்ஜியங்கள், சமஸ்தானங்கள் போன்ற தனி அரசாட்சிகளை பெரும்பாடு பட்டு இந்தியாவுடன் இணைத்திருந்தார்கள். நாடு என அறிவித்திருந்தால் ரத்த ஆறு ஓடியிருக்கும். எனவே அரசியல் சாசன சபையில் Union என்கிற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே நேரத்தில் பாரத் என்கிற வார்த்தையும் தக்க வைக்கப்பட்டது.
Union of States என வார்த்தைப்பிரயோகத்துக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது. United என்ற ஐக்கியம் என்ற வார்த்தைக்குள் பிரிந்து செல்வதற்கான சாத்தியமும் ஒளிந்திருக்கிறது என காரணம் சொல்லப்பட்டது. குறிப்பாக, இத்தகைய சாத்தியம் இருந்த காரணத்தால்தான், அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் பிரிந்து செல்ல முயன்று பெரும் உள்நாட்டு போர் வெடித்த உதாரணம் சொல்லப்பட்டது. அந்த காரணத்தால்தான் இந்தியாவுக்கு கூட்டமைப்பு என்று பெயரிட கூடாது என தீர்மானிக்கப்பட்டது. Union of States என்கிற வார்த்தைகளின் பிரயோகத்தின் வழியாக சமஸ்தானங்கள் விரும்பி வந்து இந்தியாவுடன் சேர்ந்து கொண்டதாகவும் மீண்டும் பிரிந்து செல்ல முடியாத நிலையில் ஒருங்கிணைந்து விட்டதாகவும் அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
எனவே இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசாக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து ஒரு விஷயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. Union of States என்பதை ஒரு nation ஆக, தேசம் ஆக மாற்றும் வேலை. தேசத்துக்கான அடிப்படை தேவைகள் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சிந்தை ஒரு பூகள வரையறை போன்றவை. இவை எதுவும் இல்லாத இந்திய துணைக்கண்டத்தில் இவை அனைத்தையும் செயற்கையாக உருவாக்கும் பணியைத்தான் ஒன்றிய அரசுகள் இதுவரை செய்து வத்திருக்கின்றன.
தேசம் என்பதற்கான கோட்பாடு பிரஞ்சு புரட்சி காலத்தில் தோன்றியது. மையப்படுத்தப்பட்ட அரசு, ஒற்றைத்தன்மை போன்றவை நெப்போலினிய காலத்தில் இருந்து நடை முறைப்படுத்தப்படும் சித்தனை. பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்களில் அதிக வேறு பாடுகள் இல்லாததால் இத்தகைய தேசங்களாக அவை எளிதில் பரிணமிக்க முடிந்தன. அத்தகைய சூழலில்கூட அயர்லாந்து தனி நாடாக போராடி விடுதலை பெற்றது வரலாறு.
பிரஞ்சு புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவம், தனக்கான பெரிய ஒற்றை சந்தைகளை உருவாக்கும் தேவை இருந்ததாலும், காலனியாதிக்க முறை காலாவதி ஆகிக் கொண்டிருந்ததாலும் தேசம் பற்றிய சிந்தனை வெகுவாக வளர்த்தெடுக்கப்பட்டது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துடனான பிரதிநிதிகள் சபை ஒன்று. ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளும் முறை உருவாக்கப்பட்டது.
அந்த நிலப்பரப்பு அதிகாரத்தை தோக்கி மேலும் மையப்படுத்தப்படவும் சந்தை வணிகத்துக்கு எளிய வழிகளை உருவாக்கிடவும் பல ஒற்றைத்தன்மைகளை அங்கிருக்கும் அதிகார வர்க்கங்கள் செய்யத் தொடங்கின. சொல்ல போனால் அதிகார வர்க்கங்களின் பிரதான வேலையாக அதுவே இருந்தன.
தனிக் கூறுகளாக இருந்த மொழி, பண்பாடு, மக்கள் தொகுப்புகளின் சிந்தை ஆகியவை இயல்பாகவே இந்த ஒற்றைத்தன்மைக்கு எதிர்ப்பு கட்டத் தொடங்கின. இந்த எதிர்ப்பை புரிந்துகொண்டு உட்செரித்ததன் விளை வாகத்தான் உலகம் கொண்ட முதல் புரட்சி, தன்னை தேசமாக கட்டமைத்துக் கொள்ளாமல் சோவியத் ஒன்றியமாக கட்டமைத்துக் கொண்டது. உலகிலேயே முதன்முறையாக சுயநிர்ணய உரிமையை அரசியல் ஆக்கும் வாய்ப்பை சோவியத் ஒன்றியம்தான் பெற்றுத் தந்தது.
தேசம் என்கிற முதலாளித்துவ கருத்தாக்கம் ஒற்றைத்தன்மையுடன் வன்முறையாக நிலை பெற்றுக் கொண்டிருக்கையில், சுயநிர்ணய உரிமை என்கிற நியாயத்தை சோசலிசம் வழங்கியது. சோவியத் ஒன்றியம் உடைக்கப்பட்ட பிறகு, சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் மாற்றும் சர்வதேச அரசியல் சிந்தையில் இருந்து அழிக்கப்பட்டது. இந்தியாவில் இன்று சுய நிர்ணய உரிமை என்பது அரசியல் கெட்ட வார்த்தை.
சோவியத்துக்கு பிறகு, 90களின் உலகமய நவதாராளமய காலத்தில், இன்னும் அதிகமான சந்தையாக்கம் செயல்படுத்தப்பட்டது. ஒற்றைத்தன்மை என்பது எல்லா முனைகளில் இருந்தும் அசுரவேகத்துடன் நிறுவப்பட்டு தேச அடையாளத்துக்குள் உலகின் எல்லா நிலப்பரப்புகளும் தள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய துணைக்கண்டத்திலும் காலனிய காலத்துக்குப் பிறகு இத்தகைய ஒற்றைத் தன்மையை நோக்கி தள்ளும் பணியை பார்ப்பனியமும் ஆளும் வர்க்கமும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் துணையோடு இந்தித் திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு, இந்து மதப் பரவலாக்கம் போன்றவற்றின் வழியாக செய்து வந்த போதிலும், உலகமய 90களின் காலத்துக்குப் பிறகு வந்த பாஜக, பாசிச முதலாளித்துவத்தின் முகம். அது இன்னும் வேகமாக இந்திய பார்ப்பன அஜெண்டாவுடன் சேர்த்து ஒற்றையாக்கத்தை வீம்புடன் வேகமாக செய்து வருகிறது.
இன்று தாமேந்திர பிரதான் பேசும் அகங்காரப் பேச்சுகள் யாவும், பாஜக பெரும்பான்மை பெற்றிராத நிலையில் நடந்து கொண்டிருப்பதை நாம் மறந்துவிட வேண்டாம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும் இத்தனை திமிராக பாஜக பேசுவதற்கு காரணம், அதற்குப்பின் இருக்கும் பார்ப்பனிய பீடமும் கார்ப்பரேட் மூலதனமும்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய துணைக்கண்டத்தை ஒற்றையாக்கும் பணியை, இந்திய தேசக் கட்டுமானத்தை, சடுதியில் முடித்துவிட உலக மூலதனம் விரும்புகிறது. கூட்டாட்சி, ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்றெல்லாம் பேசி லாபத்துக்கான நேரத்தை விரயப்படுத்த அது விரும்பவில்லை. எனவே அது இந்தியா பல நூற்றாண்டுகளாக அறிந்து பழக்கப்பட்ட பண்பாட்டு பாசிசத்தை கையில் எடுத்துக்கொண்டு தன் இலக்கை வேகமாக அடையத் துடிக்கிறது.
ஒன்றிய அரசு திணிக்க முயலும் புதிய கல்விக் கொள்கை என்பதே கூட ஏற்கனவே இங்கு இருக்கும் 10+2 என்கிற பள்ளிக் கல்வி முறையை ஒழித்து, 5+3+3+4 என்கிற சர்வதேச முறையுடன் இணைக்கும் வழியே ஆகும். பல கட்ட தேர்வுமுறையை உருவாக்கி, அதற்கான பயிற்சிகளில் தனியார் மூலதனத்தை ஊக்கு வித்து, உலகப் பொருளாதார ஒற்றை ஒழுங்குடன் இணைக்கும் முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை. கூடுதல் special ingredient ஆக, நம்மூர் local spice ஆன பார்ப்பனியமும் கலந்து இன்னும் இந்தக் கொள்கை காரசார மாக்கப்பட்டிருக்கிறது.
ஒற்றையாக்கம் என்பது புதிய கல்விக் கொள்கையுடன் நிற்கப் போவதில்லை. மாநிலங்களின் உரிமை பறிப்பு, மாநிலங்களின் அரசியல் அழிப்பாக (ஜம்மு காஷ்மீர் போல) பரிணமிக்கும். மாநிலக் கட்சி என்பது ஒரே நாடு ஒரே தேர்தல் வழியாக இல்லாமல் ஆக்கப் படும். மொழி வழி அடையாளம் என்பது அழித்தொழிக்கப்படும். மைய அரசு இன்னும் அதிக வலிமையுடன் கூடியதாக மாற்றப்படும்.
இவற்றை தடுப்பதற்கான அரசியலை மொழி உணர்வை கூர்மைப்படுத்தி, சுயநிர்ணய உரிமைக்கான அரசியலை முன்னகர்த்தி, ஒன்றிய அரசுக்கான எதிர்ப்பை, கட்சிகள் தாண்டிய வெகுமக்களின் எதிர்ப்பாக மாற்றி பெரும் போராட்டமாக்கப்பட வேண்டும். ஒற்றைத்தன்மையை முன்னிறுத்தும் கட்சியும் தலைவர்களும் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
முக்கியமாக உலகமயத்துக்கு முன்னான அரசியல் முறையிலிருந்து விலகி வேகமெடுத்திருக்கும் முதலாளித்துவ பாசிசம் போல, நாமும் 90 களுக்கு முன்னான அரசியல் எதிர்ப்பு முறைகளைத் தாண்டி வேகம் எடுக்க வேண்டும்.