மக்களவை தேர்தல் 2024 முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பின்னரும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் நீடித்த வண்ணமே உள்ளன. அதாவது கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. அதேபோன்றதொரு குளறுபடி தற்போதும் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் (2024) கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1 தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநேரம் 10 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எனப்படும் EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகள் இடையே வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் ஒரு தொகுதி, இரண்டு தொகுதி அல்ல 140 க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் இந்த குளறுபடி நடந்துள்ளது. சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் அதிகமாகவும், எண்ணப்பட்ட வாக்குகள் குறைவாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குறைவாகவும், எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாகவும் உள்ளன.
நடப்பாண்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 5,54,598 வாக்குகள் எண்ணப்படாமல் விடுபடுள்ள தெரியவந்துள்ளது. அதேபோல் 176 தொகுதிகளில் EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக 35,093 பதிவாகியிருப்பதாக வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த வித்தியாசம் தேர்தலில் குளறுபடி நடந்திருப்பதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
EVM Data Mismatch
Two sets of data released by the Poll Body — first on voter turnout or the the absolute number of votes polled on the EVMs and the second on the number of EVM votes counted in each constituency on the result day — has found discrepancies in 538 out of 542… pic.twitter.com/iHiR14hpZc
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) June 10, 2024
குறிப்பாக, அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மக்களவை தொகுதியில் மொத்தம் 11,40,349 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் EVM இயந்திரத்தில் பதிவான வாக்குகளோ 11,36,538 ஆகும். சுமார் 3,811 வாக்குகள் வித்தியாசப்படுகின்றன.
அதேபோல் ஆந்திர பிரதேசம் மாநிலம் ஓங்கோல் தொகுதியில் 13,99,707 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், மொத்தம் 14,01,174 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையே 1467 வாக்குகள் வித்தியாசம்.
தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மண்ட்லா தொகுதியில் மொத்தம் 15,31,950 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் அங்கு 1089 வாக்குகள் குறைவாக, அதாவது 15,30,861 வாக்குகள் மட்டும் EVM இயந்திரத்தில் பதிவாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க சில தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட, குறைவாக எண்ணப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வாக்குகள் விடுபட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதியில் 14,13,947 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் EVMல் பதிவான வாக்குகளோ 14,30,738. சுமார் 16 ஆயிரத்து 791 வாக்குகள் விடுபட்டுள்ளன.
இதேபோல், அஸ்ஸாமின் கோக்ராஜர் தொகுதியில் மொத்தம் 12,40,306 வாக்குகள் EVM இயந்திரத்தில் பதிவாகியிருந்தன. ஆனால் 12,29,546 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. மீதமுள்ள 10,760 வாக்குகள் மாயமாகியுள்ளன.
மேலும், ஒடிசாவின் தேன்கானல் தொகுதியில் மொத்தம் 11,93,460 வாக்குகள் EVMல் பதிவாகியிருந்தன. ஆனால் எண்ணப்பட்ட வாக்குகள் 11,84,033 வாக்குகள் மட்டுமே ஆகும். சுமார் 9,427 வாக்குகள் குறைந்துள்ளன.
தபால் வாக்குகளும், EVMல் பதிவான வாக்குகளும் தனித்தனியாக எண்ணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தனது தரவுகளில் குறிப்பிட்டுள்ளது. அப்படியிருந்தும் இத்தகைய குளறுபடி ஏற்பட்டிருப்பது ஏன் என்கிற கேள்வியெழுந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்ததே, பதிவான வாக்குகளைக் காட்டிலும் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளும் தவறுதலாக எண்ணப்பட்டதாலும் இந்த குளறுபடி ஏற்பட்டதாக ஒரு மேம்போக்கான பதிலையே தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எப்படி அதிக அல்லது மாதிரி வாக்குகள் எண்ணப்பட்டன என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிக வாக்குகள் மாயமானது எப்படி? என்கிற கேள்விக்கான தேர்தல் ஆணையத்தின் விளக்கம் முற்றிலும் திருப்திகரமாக இல்லை.
ஏனெனில் இந்த குளறுபடியால் பல இடங்களில் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. முக்கியமாக 4 தொகுதிகளில் முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக முதலில், மகாராஷ்டிராவின் மும்பை வடமேற்கு தொகுதியில் மொத்தம் EVMல் 9,51,580 வாக்குகள் பதிவாகின, ஆனால் 9,51,582 வாக்குகள் எண்ணப்பட்டன. அதாவது இரண்டு வாக்குகள் கூடுதலாக உள்ளன. வெறும் 2 வாக்குகள் தானே என்று தோன்றலாம். ஆனால் அங்கு போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் அமோல் கஜானனை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசேனாவின் ரவீந்திர தத்தாராம் வைகர் தோற்கடித்திருக்கிறார்.
அதேபோல் இரண்டாவதாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 12,38,818 வாக்குகள் EVMல் பதிவாகியிருந்தன. ஆனால் 12,37,966 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன, அதாவது 852 வாக்குகள் எண்ணப்படவில்லை. ஆனால் அங்கு பாஜகவின் ராவ் ராஜேந்திர சிங் 1,615 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மூன்றாவதாக, சத்தீஸ்கரில் உள்ள கான்கேரில் மொத்தம் 12,61,103 வாக்குகள் பதிவாகின. ஆனால் 12, 60,153 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. அதாவது 950 வாக்குகள் எண்ணப்படாமல் அறிவிக்கப்பட்டுவிட்டன. அங்கு போட்டியிட்ட பாஜகவின் பிரோஜ்ராஜ் நாக் 1,884 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நான்காவதாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத்தில் 10,32,244 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 10,31,784 வாக்குகளே எண்ணப்பட்டன. அதாவது 460 வாக்குகள் எண்ணப்படவில்லை. அதேபோல் அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முகேஷ் ராஜ்புத் 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சில இடங்களில் வாக்கு வித்தியாசத்துடன் ஒப்பிடுகையில், எண்ணப்படாத வாக்குகள் குறைவாகவே இருப்பதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை அவசியம் இல்லை என்று கருதலாம். ஆனால் பல இடங்களில் எண்ணப்படாத வாக்குகளின் எண்ணிக்கையானது , வாக்கு வித்தியாசத்தில் 50% க்கும் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இது ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி விகிதாசாரங்களை சந்தேகிக்கும்படியாக அமைந்துள்ளது. இதுபோன்ற இடங்களில் 100% வாக்குகளை எண்ண வேண்டும் என தோல்வியடைந்த வேட்பாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விவி பேட் சீட்டுகளை எண்ணி கணக்கை சரிபார்க்கலாம்.
பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு (EVMs) இயந்திரங்கள் செயலிழந்திருந்தாலோ அல்லது தலைமை அதிகாரியால் எழுத்து பிழை ஏற்பட்டாலோ விவிபேட் (VVPAT) சீட்டுகளை எண்ண வேண்டும். இந்த குளறுபடிக்கு தேர்தல் ஆணையம் மேம்போக்கான பதிலை அளித்திருந்தாலும், சில முக்கிய கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் வேண்டும்.
1. எண்ணப்பட்ட கூடுதல் வாக்குகளை தேர்தல் ஆணையம் எப்படி விளக்குகிறது. அதாவது, பதிவானதை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டனவா?
2. தேர்தல் ஆணையம் ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடுவதற்கு பதிலாக குறைவான அல்லது கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக ஏன் விளக்கம் அளிக்கவில்லை.
3. போலி வாக்கெடுப்பு தரவுகளை நீக்காததே பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட வித்தியாசத்திற்கு காரணம் என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் எப்படி வந்தது?
4. படிவம் 17C இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் மற்றும் சில தொகுதிகளில் உள்ள விவிபேட்-களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் முரண்பாடுகள் இருப்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்கிறதா?
5. ஒரு வாக்குச் சாவடியில் சராசரியாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 700 முதல் 800 வாக்குகள் வரை பதிவாகும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஏன் சில தொகுதிகளில் EVMல் 20-30 வாக்குகள் குறைவாக உள்ளது?
6. வாக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து EVM வாக்குகளையும் தேர்தல் ஆணையம் ஏன் கணக்கிடவில்லை, தேவைப்பட்டிருந்தால், வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக உள்ள இடங்களில் VVPAT ஸ்லிப்களை ஏன் கணக்கிடவில்லை?
7. எத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, எதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு தெரிவிக்குமா?
8. இந்த 2024 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் முழுமையான விவரங்களை வெளியிட தயக்கம் காட்டுவதில் இருந்தே தேர்தல் ஆணையத்தின் (EC) நேர்மை தன்மை சந்தேகத்திற்குள்ளாகிறது.
இந்த குளறுபடி வெற்றி தோல்வியை பாதிக்காதா? என்கிற கேள்வியும் எழுகிறது. மேற்கண்ட இந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து எந்த முறையான விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: The Wire ஆங்கில செய்தி தளத்தின் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.