புதிய தொடக்கங்களுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !
2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம்!
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரத்தை, இலக்கை இன்றிலிருந்து முடிவு செய்தாலும் சாதிக்க முடியும். வெற்றியை சுலபமாக எட்டிவிட முடியும்.
ஆனால் நாம் நமது இலக்கையோ, லட்சியத்தையோ கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.
புத்தாண்டு என்பது 365 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. இதேபோன்று கடந்த ஆண்டும் வந்தது. குடித்தோம், கொண்டாடினோம், செய்யக்கூடாத, அறிவுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத காரியத்தை எல்லாம் செய்தோம். அதனால் என்ன மாற்றம் அடைந்தது. ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இந்த ஆண்டும் அதே கூத்து, கும்மாளம்.
இந்த நாள், கிழமை, வாரம், மாதம்,ஆண்டு அனைத்தும் மனிதனால் மனிதனின் வாழ்க்கைக்காக முறைப்படுத்தப்பட்டது. ஆனால் நாம் ஒவ்வொரு நாட்களுக்கும், கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான பெயரை வைத்து, அதில் சடங்குகளை புகுத்தி வீன் செலவுகளை செய்து பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். கடனாளியாகி வாழ்க்கையில் சிக்கலை அனுபவிக்கிறோம்.
இதை ஏன் செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? இந்த கொண்டாட்டத்தினால், இந்த சமூகத்திற்கு என்ன சொல்லப் போகிறோம்? இதே ஆரவாரம், கூத்து, கொண்டாட்டம் அனைத்தும் காலா காலமாக, யுகம் யுகமாக கொண்டாடிதான் வருகிறோம். அதனால் இதுவரை இந்த சமூகம் அடைந்த மாற்றம் என்ன? நம் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் தான் என்ன?
கடல் அலை கடலுக்குள் போவதும் சிறிது நேரம் கழித்து அந்த அலை மேலெழுந்து கரையை நோக்கி வேகமாக திரும்ப திரும்ப வருவதில் கூட ஒரு அறிவியல் காரணம் இருக்கலாம். ஆனால் மனிதன் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு காரணத்தை கண்டுபிடித்து அதற்கு நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதற்கு ஏதாகிலும் அறிவுப் பூர்வமான காரணம் இருக்கிறதா?
இயற்கை அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இயங்குகிறது. அனைத்து உயிரினங்களையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்துகிறது. அதில் மனித இனம் மற்ற உயிரினங்களை விட மிகவும் வித்தியாசமான, விசேஷமான, சிந்திக்கும் தன்மை கொண்ட உயிரினம் என்பதில் பெருமை கொள்கிறோம். அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் தனி சிறப்புக் கொண்ட மனிதர்களாகிய நாம் சிந்தனையை பயன்படுத்தி செயல்படுகிறோமா? ஒரு கனம் நிதானமாக யோசிக்க வேண்டும்.
காலத்தை கணக்கிட்டு, காலண்டர் அடித்து மாட்டி கடந்த 2023 ஆண்டுகளாக கிழித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விசேஷபடைப்பு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த மனித சமூகம் சாதி,மதம்,மொழி, நாடு என்று பிளவுப் பட்டு சிறு சிறு துண்டுகளாக சிதறி கிடக்கிறோம். நம் கண்களுக்கு தெரிகின்ற வெளியுலகம் எப்படி சிதறிகிடக்கிறதோ அதைவிட பலமடங்கு கண்களுக்கு தெரியாத மனிதனின் அகமும், மனமும் சுருங்கி பிளவுப் பட்டு இருக்கிறது.
ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை காட்டுவதும், ஒரு கருத்தின் மீது வன்மத்தை விதைப்பதும் வாழ்க்கையின் முக்கிய மான செயலாகவே கருதி செயல்பட்டு வருகிறோம். நம் அருகில் இருப்பவர்கள் மீது வெறுப்பைக் கொட்டி மன நோயாளியாகவே மாறி வருகிறோம்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் பிடித்தவர்கள் மட்டுமே ஒற்றுமையுடன் இருப்பதற்கு விரும்ப மாட்டார்கள்.
மனித வாழ்வின் அடிப்படை தத்துவமே அன்புடன் இருப்பது. மற்றவர்களை அன்பாக நடத்துவது. இயன்றதை கொடுத்து உதவுவது. ஆனால் அப்படியா இருக்கிறோம். மனதில் வெறுப்பை தேக்கி வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக் காரர்களையே எதிரியாக பார்க்கிறோம். “அவங்க வேற ஆள், நாங்க வேற ஆள்” என்று தனக்குள் அழுக்குகளை சுமந்து கொண்டு வாழ்கிறோம். இதுபோன்ற கொடும் நோயிலிருந்து வெளியே வருவது எப்படி என்று நமக்குள் நாம் சிந்திப்பதே இல்லை.
நமது வீடுகளில் கணவன், மனைவி, குழந்தைகள் எல்லோரும் ஒரு புரிதலான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறோமா, வாழமுடிகிறதா? என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். குடும்ப தலைவன் ஒரு கருத்தோடும், குழப்பத்திலும் தலைவி வேறொரு வெறுப்பிலும் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். நாளுக்கு நாள் வெறுப்பு, வன்மம் அதிகரித்து வருவதால் நீதிமன்றங்களில் குடும்ப வழக்குகள் மட்டும் குவிந்து வருகிறது.
நம் மனதில் அன்பு இல்லாமல் போனதால் அழகான மலரை, குழந்தையை, அதன் அழகை, அதன் தன்மையை உணர முடியாமல் இறுக்கமான முகத்தோடு பார்க்கிறோம். அன்பு என்றால் என்ன என்று தெரியாமல் வயதான தாய், தந்தையிடம் அன்பு செலுத்த தெரியவில்லை. வெறுப்பும், வன்மமும் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும், குழந்தைகளிடத்திலும் ஊடுருவி பரவிவருகிறது. அதுவே அனாதை ஆசிரமும், முதியோர் இல்லமும் அதிகரிக்க காரணமாக இருப்பது நமக்கு தெரியும். வெறுப்புணர்வு இருப்பதாலேயே முதியோர் இல்லங்களை உற்பத்தி செய்து வருகிறோம்.
இரவு கண்விழித்து, கடவுளை வணங்கி, குடித்து, கூத்தடித்து புத்தாண்டு கொண்டாடுவதால் நம் மனதில் தோன்றும் வெறுப்பு, வன்மம் போய்விடுகிறதா? இல்லையே! மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் நம் மனதளவில் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. மனதில் தோன்றும் அந்த விஷ விதையை அழிக்க வேண்டும் என்று நாம் சிந்திக்கவும் இல்லை. அது அடுத்த தலைமுறையினருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணரவும் இல்லை.
மற்றவர்கள் மீதோ, ஒரு கருத்தின் மீதோ, கோட்பாடுகளின் மீதோ இன்னும் பல எந்த வழியில் வெறுப்பு உணர்வு தோன்றினாலும் அதனை விழிப்போடு கவனித்து அது தோன்றிய இடத்திலேயே அழிக்க வேண்டும்.
இப்போதே நமது எண்ணங்களை, சிந்தனைகளை, அதன் செயல்பாடுகளை விழிப்புணர்வுடன் கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் எதை சிந்திக்கிறோம் என்று நமக்குள் நாம் கவனிக்க வேண்டும். நமது எண்ணம் வெறுப்பை நோக்கி சிந்திக்கிறது என்றால் அதன் காரணத்தை ஆராய வேண்டும்.
அப்படி தொடர்ந்து நமது எண்ணத்தை கண்கானித்து வந்தோம் என்றால் அப்பொழுதே வெறுப்பு, வன்மம் ஒரு முடிவிற்கு வந்து விடும். ஆனால் பாரபட்சம் இல்லாமல் நமக்குள் நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த எண்ணம் நம் மனதில் ஏன் தோன்றுகிறது? தோன்றுவதற்கான காரணம் என்ன? என்று பாரபட்சம் இல்லாமல் நமக்குள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால் வெறுப்பு தோன்றுவதற்கு நியாயத்தை கண்டுபிடித்து வாதம் செய்வதால் மனித சமூகத்திற்கு ஆபத்தை தான் விளைவிக்கும். வெறுப்பு, வன்மம் போன்ற தவறான எண்ணங்களை தோன்றும் இடத்திலேயே அழித்து அன்பை விதைக்க வேண்டும். அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தேவை. நாம் ஒவ்வொரு வரும் அன்பை விதைப்போம்.
மற்றவர்களிடம் அன்புடன், கருணையுடன் நடந்துக் கொள்வோம். நம்மிடம் நம் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட கண்டிப்புடன் நடந்துக் கொள்வோம்.
விழிப்புணர்வு என்பது கவனமாக சிந்திப்பது! கவனமாக பேசுவது!!கவனமாக செயல்படுவது!!!
(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி…
ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம்… இந்திய அணியின் தேவை என்ன? கடுப்பாகும் சீனியர்கள்..!