Homeசெய்திகள்கட்டுரைஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

-

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சமஸ் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

மூத்த பத்திரிகையாளர் சமஸ்

நேரு மீது தொடர் விமர்சனங்களையும், அவதூறூகளையும் மோடி வைத்து வருகிறார். நேரு என்பவர் சில விழுமியங்களின் தொகுப்பு. நேரு என்றால் தேசத்தின் கட்டமைப்பு, சோசலிசம், பொதுத்துறை நிறுவனம் நினைவிற்கு வருகிறது, கல்வி, உயர்கல்விக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் நினைவிற்கு வருகிறது. மதச்சார்பின்மை, முற்போக்கு கொள்கைகள் எல்லாம் நினைவிற்கு வரவேண்டும்.

நரேந்திர மோடி முன்னெடுக்கும் பாதை முற்றிலும் நேருவிற்கு நேர் எதிரானவை. இதை முற்றிலுமாக வரலாற்றில் இருந்து நிராகரிப்பது அல்லது பழைய வரலாற்றை அழித்துவிட்டு புதியதாக ஒரு வரலாற்றைக் கட்டமைக்க முயற்சி செய்கிறார். அதனால் நேருவை விமர்சனம் செய்து வருகிறார் என்று நினைக்கிறேன் என்றார். மேலும் 1947 ம் ஆண்டு ஜூலை மாதம் 30 தேதி நேரு அவர்கள் ராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் நீதிகட்சியில் உள்ள சண்முகம் செட்டியாரிடம் பேசி விடுங்கள். நான் அம்பேத்கரிடம் பேசிவிட்டேன் என்று ஒரு சிறிய கடிதத்தை எழுதியுள்ளார்.

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

எதற்காக என்றால் இரண்டு வாரங்களில் நாடு சுதந்திரம் பெறப் போகிறது. அப்போது அமைய போகும் இடைக்கால அரசாங்கத்தில் கேபினெட் அமைச்சரவையில் சில ஆளுமை மிக்க நபர்களை இடம்பெற செய்ய வேண்டும் என்பது நேருவின் நோக்கம். அதுவும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அம்பேத்கரை அமைச்சரவையில் இடம்பெற செய்ய நேரு விரும்பினார்.

அதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள சண்முகம் செட்டியார் நீதிக்கட்சியில் இருக்கிறார். ஆனால் அவர் ஒரு பொருளாதார மேதை. அதனால் அவரை கட்சிக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் மீது அக்கறை இருப்பவரால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும். நேருவின் தொலைநோக்கு பார்வைக்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஆனால் மோடி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிக்கான தலைவர் பதிவியைக் கூட கொடுக்க மனமில்லாமல், எதிர்கட்சிக்கான மரியாதைக்கூட கொடுக்காமல் இருந்து வரும் மோடியால் நேருவை ஏற்றுக்கொள்ள முடியாது.

காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நேரு மீது மோடி தொடர்ந்து விமர்சனம் வைக்கிறாரா என்ற கேள்விக்கு சமஸ் அளித்த பதில், பண்பாட்டு தளத்தில் காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் வேறு வேறு அல்ல, இந்தியா என்பது இன்று எப்படி இருக்கிறதோ அது காங்கிரஸோடு சேர்ந்து உருவானது. தற்போது காங்கிரஸ் கட்சி என்னவா மிச்சம் இருக்கிறதோ அது இந்தியாவின் மிச்சம். அதனால் காங்கிரஸ் எவ்வளவு தரை மட்டத்திற்கு தோல்வி அடைந்தாலும் பாஜகவிற்கு எதிராக களத்தில் சவால் விடும் கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றார். பல மாநிலங்களில் பாஜக வுடன் நேருக்கு நேர் போட்டிபோடும் கட்சி காங்கிரஸ் கட்சி என்பதை மறந்து விடக்கூடாது.

டெல்லியில் நேருவின் சமாதிக்கு பலதரப்பட்ட மக்களும் வந்து செல்கின்றனர். அவர்கள் எல்லோரும் சமாதியை பார்ப்பதற்காக மட்டும் வரவில்லை. சமாதியில் விழுந்து அழுகிறார்கள், கண்ணீர் சிந்துகிறார்கள். இந்த நெகுழ்ச்சி எதனால் வருகிறது என்றால் நேருவின் தியாகத்தில் இருந்து வருகிறது.

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

 

நேருவிற்கு 1916ல் திருமணம் நடைபெறுகிறது. அப்பொழுது கமலா நேருவிற்கு 20 வயது. அவர் 1936ல் இறந்து விடுகிறார். நேருவின் குடும்ப வாழ்க்கை என்பது வெறும் 20 ஆண்டுகள் மட்டுமே. அதில் நாட்டின் விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். தனது இளமை காலத்தை நாட்டிற்காக தியாகம் செய்தவர் நேரு. அவருடைய தியாகம் எல்லாம் நாட்டு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

மேலும் நமது பிரதமர் மோடி அவர்கள் வரலாறை முறையாக படிக்காதவர். 1947ல் சுதந்திரம் பெறப்படுகிறது. 1950ல் குடியரசு பெற்ற நாடாக வழிநடத்த வேண்டும். 1943- 46 ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்பட்ட வங்கத்து பஞ்சத்தில் 30 லட்சம் பேருக்கு மேல் இறந்து விட்டார்கள் என்று அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார். கற்பனை செய்ய முடியாத பஞ்சம். அதிலிருந்துதான் இந்த நாட்டை நேரு மீட்டு கொண்டுவந்தார்.

1946ல் இந்தியாவில் இருந்த மருத்துவ கல்லூரியின் எண்ணிக்கை வெறும் 15 மட்டும். நேரு என்பது என்ன? நேரு என்பது எய்ம்ஸ், நேரு என்பது ஐஐடி, நேரு என்பது எல்ஐசி, நேரு என்பது ஐஈஎம், நேரு என்பது இஸ்ரோ, நேரு என்பது இண்டியன் ஆயில். நேரு என்பது இந்தியாவின் அடித்தளம். அதனால் நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் முத்த தலைவர்களை, மூதாதையர்களை மதிப்பீடு செய்வதில் சரியான முறையில் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி குடும்பக் கட்சி என்ற விமர்சனம் குறித்து பேசிய சமஸ், நேருவிற்கு பின்னர் நேரு குடும்பத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் பிற தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் பட்டேலை ஆர்எஸ்எஸ் தலைவரைப் போன்று அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் நேரு குடும்பம் செய்த பெரும் தியாகத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

1991ல் ராஜீவ்காந்தி இறந்த பின்னர் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அரசியல் வேண்டாம் என்று சோனியாகாந்தி ஒதுங்கி இருந்தார். ஆறு ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார். அவரை அரசியலுக்கு இழுத்து வந்தவர்கள் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் சீதாராம் கேசரி. தானாக விரும்பி அரசியலுக்கு வந்தவர் அல்ல சோனியாகாந்தி, அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார்கள். அதனால் போரப்போக்கில் குடும்பக் கட்சி என்று குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

நேருவின் வரலாற்று பின்னணியில் இருந்து பாஜக போரிட்டு வெற்றி பெறுவது மிகவும் கடினம். நரேந்திர மோடியால் ராகுல்காந்தியுடன் போரிட்டு வெற்றி பெறமுடியும். ஆனால் அவரால் நேருவோடு போட்டிப்போட முடியாது. அதில் வெற்றிப்பெறவும் முடியாது என்று சமஸ் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

நேருவின் மதச்சார்பற்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மோடியின் விமர்சனம் உள்ளதா என்ற கேள்விக்கு, மதச்சார்பின்மை என்பது நாட்டின் மிகமுக்கியமான மையம். இதுகுறித்து மகாத்மா காந்தியிடம் உங்கள் அரசியல் நோக்கம் என்ன என்று கேட்டபோது முதலாவது இந்து முஸ்லீம் ஒற்றுமை அதாவது மத நல்லிணக்கம் என்றார். இரண்டாவது தீண்டாமை ஒழிப்பு முன்றாவது சுதேசி பொருளாதாரம் என்றார். அதையே நேரு தனது அரசியல் வாழ்க்கையில் தார்மீகமாக ஏற்றுக்கொண்டு தனது கட்சிக்குள் நடைமுறை படுத்த முயற்சி செய்தார்.

அயோத்தியில் ராம ஜென்ம பூமி பிரச்சினை முதன்முறையாக எழுந்தபோது அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கோவிந்த் பல்லப் பந்த் அவர்களுக்கு 1949ல் டிசம்பர் மாதம் 26 கடிதமும் 1950 ஏப்ரல் 17 அன்று ஒரு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களிடமே மதவாதம் இருக்கிறதா என்று அந்த கடிதத்தின் வாயிலாக கேள்வி எழுப்புகிறார். மதவாதம் என்பது பக்கவாத நோய்க்கு இணையானது என்று குறிப்பிடுகிறார். ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தூக்கி போட்டுவிட்டு மதவாதத்திற்கு எதிராகவே என் வாழ்க்கையை அறப்பணிக்கலாம் என்று தோன்றுவதாக தனது கட்சியின் முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்.

முதலமைச்சர் கோவிந்த் பல்லப் பந்த்

இது பிரதமர் ஒரு மாநில முதல்வருக்கு எழுதும் கடிதம். அந்த கடிதத்தில் “மதவாதம் என்பது ஒரு பக்கவாத நோய்” என்று கூறுகிறார். உத்தரப்பிரதேசத்தில் இப்பொழுது இருக்கும் அரசியல் இதுவரை நான் பார்க்காத நிகழ்வு. இது மிகமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் கட்சிக்குள் மதவாத நோய் தாக்குகிறது என்று குறிப்பிடுகிறார். இதுதான் ஒரு உயர்ந்த தலைவரின் பண்பு. தனது கட்சிகாரர்கள் தவறு செய்தால் கூட நாட்டிற்காக தவறு என்று சுட்டிக்காட்டும் தன்மை நேருவிடம் இருந்து என்று சமஸ் கூறுகிறார்.

மேலும் தற்போது நாடுமுழுவதும் வேலையின்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான சூழல். இவற்றையெல்லாம் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமஸ் தெரிவித்துள்ளார்.

MUST READ