பாஜகவுக்கு தமிழ்நாடு ஒரு தடைக்கல்லாக திகழ்வதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழர்கள் செலுத்தும் ஆதிக்கம் குறித்தும், அதனால் பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம் குறித்தும் பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு என்ற பெயரை கேட்டலே டெல்லி அதிர்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து புதிதாக மத்திய அமைச்சர் ஆகி போகும் நபர்களுக்கு டெல்லியில் உள்ள சூழல்களே புரியாது. அவர்களுக்கு துறை செயலாளர்கள் தான் அனைத்து விவகாரங்களையும் எடுத்துச் சொல்வார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் துறை செயலாளர்கள் மூலம் பேசி அமைச்சருக்கு சொற்ப தொகையை கொடுத்துவிட்டு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி பெறுவார்கள். அந்த நிறுவனங்கள் அளிக்கும் ஆடம்பர விருந்துகளிலும், மாதந்தோறும் பெறும் பணத்திலேயே அவர்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சராக செல்பவர்கள் அப்படி செயல்படுவதில்லை. அவர்களிடம் சென்று துறை செயலாளர்கள் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களை நேரில் வரச் சொல்லுங்கள் என்று கராராக உத்தரவிடுவார்கள். இதனால் வேறு வழியின்றி தொழிபதிபர்கள், திமுக அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவார்கள். அப்போது திட்டத்தின் மொத்த மதிப்பீடு உள்ளிட்ட மொத்த விஷயங்களை கேட்டு முழுமையாக அறிந்த பின்னரே அதற்கு ஒப்புதல் வழங்குவார்கள். இப்படி தமிழர்கள் விவரமாக கேட்கும்போது வடஇந்தியர்கள் மிரல்கிறார்கள். இவர்கள் இருந்தால் நமக்கு ஆபத்து என்று தான் ஆ.ராசா மீது வழக்குகளை தொடர்ந்தார். அதிலும் சம்பந்தப்பட்ட ஆ.ராசாவே, வழக்கறிஞராக மாறி சிபிஐ அதிகாரிகளை கேள்விகளால் துளைத்துவிட்டார். சிறையில் போட்ட உடனே அவர்கள் பாஜகவினரிடம் உதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆ.ராசா நேரடியாக அடித்ததை பார்த்து தமிழர்களை கண்டு மிரண்டு ஓடுகிறார்கள்.
பாஜகவால் தமிழ்நாட்டில் உள்ளே நுழைய முடியவில்லை. இங்கே அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. எல்.முருகன் என்ற ஒரு மத்திய அமைச்சர் உள்ளார். தமிழ்நாட்டில் ராமர் என்று சொன்னால் எடுபடாது என்று, அவர் முருகர் என்று வேலை கையில் தூக்கி கொண்டு சென்றார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவுக்கே அவர் செல்லவில்லை. ஒரு செயல்திட்டத்தை கையில் எடுக்கும் அவர்கள் பாதியிலேயே அதை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள். ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்று பரப்பி விட்டார்கள். அப்படி போட்டியிட்டால் அவர் 18 ஆயிரம் வாக்குகள் கூட பெற்றிருக்க மாட்டார்கள்.
பாஜகவுக்கு தமிழ்நாடு ஒரு தடைக்கல்லாக நிற்கிறது. பாஜகவால் தமிழ்நாட்டை ஒரு காலத்திலும் தொடவே முடியாது. கார்ப்பரேட் நிறுவனம் என்ற கொள்கையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள். அறுநூற்று ஒருவர் நிறுவனம், ஆயிரத்து ஒருவர் நிறுவனம் என்றெல்லாம் பண்டைய காலத்தில் இருந்துள்ளது. இந்த நிறுவனங்களில் ஒரு தலைவரின் கீழ் எண்ணிலடங்காதவர் இருப்பார்கள். இவர்கள் உற்பத்தி பொருளை கப்பல்களில் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து, லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். கார்ப்பரேட் கம்பெனி அமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் யாரிடம் போய் பேசினாலும் பலரும் உலக அரசியல் பேசுவார்கள். ஆனால் வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்திய அரசியலே தெரியாது.
அந்நிய நாடுகளுடன் வாணிபம் செய்தவர்கள் தமிழர்கள். முத்துக்களை வெளி நாடுகளில் கொடுத்து விட்டு கிலோ கணக்கில் தங்கத்தை வாங்கி வந்துள்ளனர். பாண்டிய நாட்டில் இல்லாத பொன்னும் பொருளையும் உலகத்தில் வேறு எங்கும் பார்த்தது இல்லை என்று சீன பயணி யுவான் சுவாங் சொல்லியுள்ளார். தமிழ்நாட்டிற்கு சர்வதேச அரசியல் தெரியும். பல அறிவுஜீவிகள் இங்கே உள்ளனர். ஆனால் வடநாட்டில் 10 சதவீதம் கூட இல்லை. இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் முன்னால் வந்து நிற்பார்கள். ஆனால் பாஜக சொல்கிற தேச பக்தி என்பது உண்மையான தேச பக்தி கிடையாது. மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து மொத்தமாக ஒருவரிடம் கொண்டு கொடுப்பது தேச பக்தி இல்லை. அது குஜராத் பக்தி. அந்த பக்திக்கு உள்ளுர் மக்கள் போடட்டும். தேசத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழ்நாடு பார்த்துக்கொள்ளும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.