புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.
பி.எம் ஸ்ரீ திட்டம் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூறு 41 என்ன கூறுகிறது என்றால், அரசின் பொருளாதாரம் மேம்பட மேம்பட கல்வியை அரசு உரிமையாக வழங்க வேண்டும் என சொல்கிறது. தேசிய கல்விக்கொள்கை 2020-ல் அரசுப்பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக் கழகங்கள் தங்களுக்கான தேவையான நிதியை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்பு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்கிறது. கல்வி நிறுவனங்களுக்கு அரசு செலவு செய்யாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர் எதிராக தேசிய கல்விக்கொள்கை உள்ளது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு பிரிவாக வந்துள்ள பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி. அது கல்வி மாவட்டமா அல்லது வருவாய் மாவட்டமா? என்று பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 40 ஆயிரம் அரசுப்பள்ளிகள் உள்ளது என்றால் அவற்றில் சில நூறு பள்ளிகள் மட்டும் தான் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளாக இருக்கும். பி.எம். பள்ளிகள் என்பது ஆகச்சிறந்த பள்ளிகள் என்றால் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகச்சிறந்த கல்வியை வழங்க மாட்டார்கள்.
மத்திய அரசு சட்டப்படி எதையும் செய்வது கிடையாது. கஸ்தூரி ரங்கன் குழு அளித்துள்ள அறிக்கையில் உயர்கல்வியில் போர்டு ஆப் கவர்னன்ஸ் பற்றி பேசியுள்ளார்கள். அதில் இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று சொல்கிறார். அப்படி இன்றால் இன்றைக்கு உள்ள சட்டங்களை வைத்து இதனை நிறைவேற்ற முடியாது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமையை பறிக்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். கல்வி ஒத்திசைவு பட்டியல் வரிசை 25ல் இருந்தால் கூட, மத்திய பட்டியலில் உள்ள 66க்கு உட்பட்டது என்கிறார்கள். அப்படி என்றால் கல்வியில் உயர் கல்வி, உயர் ஆய்வில் ஒருங்கிணைப்பதற்கான உரிமைகள் தான் உங்களுக்கு. மற்ற உரிமைகள் எல்லாம் மாநில அரசுக்குதான். பள்ளிக் கல்வி, பல்கலைக் கழகங்கள் முழுமையாக நடத்துவது மாநில அரசுதான். எனவே நாம் செய்வது எல்லாமே இன்று சட்டப்படி சாத்தியம். அதனால்தான் மிரட்டுகிறாரகள், ஆசைக்காட்டுவது, தனியார் பல்கலை.கழகங்களை ஏற்றுக்கொள்வது. மக்களை குழப்புவது என பல்வேறு யுக்திகளை கையாள்கிறார்கள். மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
மத்திய அரசு 12 ஆண்டு பள்ளிக்கல்வி முறையில் மாற்றம் கொண்டுவருவது என்றால், அதற்கு நீங்கள் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளீர்களா? ஏதேனும் குறைகள் உள்ளதா என கேள்வி எழுப்பும்போது, அவர்களால் இதுவரை எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. பட்டப் படிப்பில் நீங்கள் செய்கிற மாற்றங்களில் எதாவது வைத்துள்ளீர்களா என்று கேட்டோம். அதற்கும் எந்த ஆய்வுகளோ தரவுகளோ அவர்களிடம் இல்லை. ஒட்டுமொத்தமாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இந்திய அளவில் இன்னும் கல்வி வளர்ச்சி பெறவில்லை. தேசிய அளவில் 27 சதவிகிதம் தான் உள்ளது. அதை 50 சதவிதமாக உயர்த்தப் போகிறோம். சரி எப்படி உயர்த்தப் போகிறார்கள் என்றால் ஆன்லைன் மூலம் ஆக்க போகிறார்கள். நீங்கள் வழக்கமான முறைப்படி நேரடியாக வகுப்பில் வந்து படிக்க தேவையில்லை. ஆன்லைனில் பதிவு செய்தாலே அது கணக்கில் வந்துவிடும். இதுதான் அவர்களது கொள்கை. நவீன இந்தியாவில் கல்வியை இந்த அளவிற்கு சிதைப்பது வேறு யாரும் இல்லை. நாட்டில் எந்தந்த மாநிலங்களில் கல்வி வலுவாக உள்ளதோ அதை சிதைக்கிறார்கள். இது இந்தியாவில் கல்வியே இல்லாமல் செய்துவிடும்.
புதிய கல்விக் கொள்கை -2020ல் எண்ணறிவு, எழுத்தறி, வேலைத்திறன் என்று சொல்கிறார்கள். உலகத்தில் எங்கேயும் கல்விக்கொள்கையில் இதனை பேசவில்லை. தொடக்கப்பள்ளிகளிலே எழுத்தறி கொடுத்துவிடுகிறோம். அதற்கு பிறகு கல்விதான். கல்வி என்பது ஒருவரது சுய சிந்தனையை ஊக்குவிப்பது. அதன் வாயிலாக ஆய்வுகள், தனிமனித உரிமைகள் எல்லாம் வருகிறது. ஆனால் பாஜகவினர் வேலைக்கான ஆட்களை தயார் செய்கிறார்கள்.3 வருட பட்டப்படிப்பில் ஓராண்டு அப்ரண்டீஸ் ஆகும். அப்படி என்றால் பி.ஏ வரலாறு, பி.காம் போன்ற பாடம் படிப்பவர்கள் எங்கே சென்று அப்ரண்டீஸ் வேலை செய்வார்கள். அவர்களுக்கு கல்வியிலும், வேலையிலும் முழுமையான திறமை ஏற்படாது. இது இந்தியா எனகிற கோட்பாட்டை உடைக்கும் செயலாகும்.
மும்மொழி கொள்கையை செயல்படுத்த முயற்சிப்பதற்கு பாஜகவிடம் எந்த தரவுகளும் இல்லை. காரணம் என்ன என்றால் இதனை உத்தரபிரதேசம் நடைமுறைப்படுத்தி உள்ளதா? பிகார் நடைமுறைப்படுத்தி உள்ளதா என்பதுதான்? உலகில் வேறு எந்த நாட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் படிக்கும் நடைமுறை இல்லை. ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் தாய்மொழியில் தான் பாடம் கற்பிக்கின்றன. வியாபாரத்திற்கு செல்லும்போது, அவசியம் ஏற்பட்டால் அவர்கள் அந்த மொழியை படிக்க வேண்டும்.
பாஜகவினர் இந்திய மொழிகள் மீதும், தாய் மொழி மீதும் மிகுந்த பற்று கொண்டவர்கள். எனவே அவர்கள் தமிழகத்தில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என அறிவித்துவிடுங்கள். தமிழ்நாட்டில் சிபிசிஎஸ்சி பள்ளிகள் எல்லாம் தாய்மொழியில் தான் தொடங்க வேண்டும். நீங்கள் சொல்கிறீர்கள் அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் 3 மொழிகள் படிக்கிறார்கள் என்று. அப்போது அந்த பள்ளிகளை எல்லாம் இந்திய பள்ளிகள் ஆக மாற்றிவிடுங்கள். ஷாமா கிருஷ்ண சாஸ்திரி, மொழிகளுக்கான அமைப்பின் தலைவராக இருந்தவரிடம், ஆங்கில வழி கல்வி குறித்து கேட்கப்பட்டது. அப்போது, அவர் அந்த பள்ளிகளை எல்லாம் இந்தி வழி பள்ளிகளாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள மொழிகளை எல்லாம், இந்தி விழுங்கியது. அந்த இந்தியை விழுங்குவதற்கு சமஸ்கிருதம் தயாராக உள்ளது.இதுதான் அவர்களது மொழிக்கொள்கை. மும்மொழி கொள்கையுடன் அவர்கள் நிற்கவில்லை. 9ஆம வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புக்குள் நீங்கள் இன்னொரு மொழி படிக்க வேண்டும் அவர்கள் இந்திய மொழியை அழித்துவிட்டு,சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஒற்றை பண்பாட்டு தேசத்தை கட்டமைக்கும் சூழ்ச்சி. அறிவியல் பூர்வமாக நாம் வைக்கும் கேள்வி என்ன என்றால் தாய்மொழி, சூழலியல் மொழி ஆகிய 2 மொழிகள்தான் கற்றலுக்கான மொழியாகும். இன்னொரு மொழியை கட்டாயப்படுத்துவத வன்முறையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்