மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தென்மாநில அரசியல் கட்சிகளும் களமிறங்கி உள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டை உற்றுநோக்க தொடங்கியுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில அளித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், தர்மேந்திர பிரதான், உங்களை பார்த்து நாகரிகமற்றவர்கள் என்று சொன்னதற்கே இவ்வளவு கோபம் வருகிறேதே, தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெரியாரை நீங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைத்திருக்கிறீர்களே. இது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். கிடிக்கிப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு இதனை அவர் கேட்டுள்ளார். பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை பலமுறை நாங்கள் ஆதாரத்துடன் உடைத்துவிட்டோம். நாங்கள் பலமுறை கேட்டுகும் கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லையே?.
இதே பெரியார் திருகுறள் மாநாடு நடத்தினார். ஆனால் நீங்கள் போற்றி வழிபடக் கூடிய சங்கராச்சாரியார் தமிழ் மொழி குறித்து என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா? திருப்பாவையின் 2வது பாடலான வையத்து வாழ்வீர்கால் என்கிற பாடலில் தீக்குறளை சென்றோதோம் என்கிற வரிகள் வருகிறது. அதன் பொருள் பொல்லாதவற்றை பேசாதே என்பதாகும். ஆனால் சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார் என்றால்? தீக்குறள் என்பது திருக்குறள் என்றும், அதனால் வேதம் படித்தவர்கள் அந்த திருக்குறளை படிக்கக்கூடாது என்று சொன்னார். அப்போது திருக்குறள் மாநாடு நடத்திய பெரியார் தமிழின விரோதியா? அல்லது திருக்குறளை படிக்காதே என்று சொன்ன சங்கராச்சாரியார் தமிழின விரோதியா?
பெரியார் தான் தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தார். பெரியார் தான், தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார். பெரியார் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன வரலாற்று தரவுகள் உங்களுக்கு தெரியும்? இதே சங்கராச்சாரியாரை, ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார் பார்க்க சென்றபோது, மடத்தில் இருந்தவர்கள் சாமி குளித்துவிட்டு பூஜையில் இருக்கிறார். இப்போது, தமிழில் (நீஷ பாஷை) பேச மாட்டார், சமஸ்கிருதத்தில் மட்டும்தான் பேசுவார். உங்களிடம் தமிழில் பேசினால் தீட்டு. மீண்டும் அவர் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். இப்படி தமிழில் பேசுவதையே தீட்டு என்று நினைத்த நீங்கள், பெரியாரை பற்றி சொல்லுகிற கதைகள், கட்டுக்கதைகளை ஒருபோதும் இந்த சமுதாயம் ஒருபோதும் நம்பாது. நீங்கள் யார் என்றும் தெரியும், பெரியார் யார் என்றும் தெரியும். தமிழ்நாட்டிற்கு பெரியார் என்ன செய்தார் என்றும் தெரியும். நீங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதனால் இங்கு வந்து கதைகள் விடும் வேலையை வைத்துக்கொள்ள வேண்டாம்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது, இன்றைய சங்கராச்சாரியார் எழுந்து நிற்க மறுப்பு தெரிவித்தார். நீங்கள் தான் வந்து தமிழை காப்பாற்ற போகிறீர்களா? சங்கரமடம் மட்டும் தமிழுக்கு இழைத்த அநீதிகள் என்ன என்ன என்று எத்தனை முறை எடுத்துச்சொல்லி இருக்கிறோம். இப்படி சொல்வதால் என்னை குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசுவதாக சொல்லக்கூடாது. ஆதிசங்கரரை, ராமாநூஜரை கொண்டாடக் கூடியவர்கள்தான் நாங்கள். ஆதிசங்கரர் தான் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை பாராட்டினார். பிறப்பால் பிராமண சமுதாயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், வேதம், சமஸ்கிருதத்தை மறுத்து, தமிழில் இறைவனை வழிபடலாம் என்று சொன்னவர். நாங்கள் தனிப்பட்ட மனிதர்களை எதிர்க்கவில்லை. உங்களுடைய சித்தாந்தங்களைத் தான் எதிர்க்கிறோம். இந்த சித்தாந்தங்களை வைத்துக்கொண்டு நீங்கள் என்னவெல்லாம், எங்களுக்கு செய்திருக்கிறீர்கள். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி எல்லாம் அழித்தொழிக்க நீங்கள் சதி செய்கிறீர்கள் என்றெல்லாம் தெரியும். தமிழ்மொழி மீது அவ்வவளவு பற்று இருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 25 ஆயிரம் பேர் கூட பேசாத சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ரூ.2,345 கோடி நிதி ஒதுக்கினீர்கள். ஆனால் தமிழ் மொழிக்கு ரூ.160 கோடிகளை தான் ஒதுக்கியுள்ளீர்கள். இப்படி நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை செய்யும் நீங்கள் எங்களை வந்து கேள்வி எழுப்பலாமா?
இந்தியா டுடே செய்தி தொலைக்காட்சி விவாதத்தில் மும்மொழி கொள்கை என்றால், அதில் இந்திதான் உள்ளது என்று சொல்வது எப்படி என்று நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நாங்கள் விரும்பினால் 3 மொழிகளை படித்துக்கொள்கிறோம். அதனை திணிக்க நீங்கள் யார் என்கிறார். மேலும் எதார்த்தமாக கேட்கிறேன் ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியை படிக்க விரும்பினால் 40 ஆசிரியர்களை பணியில் அமர்த்துவீர்களா? என்றும் கேட்கிறார். அப்படி நியமிக்கப்போவது இல்லை. எப்படி இருந்தாலும் 3-வது மொழிக்கு என்று ஒரு ஆசிரியரைத்தான் நியமிக்க போகிறீர்கள். அந்த ஒரு ஆசிரியரும் என்ன மொழி கற்பிப்பார். அவர் பெங்காலி, மராட்டியம், போஜ்புரி மொழியை கற்பிக்க போகிறாரா? இல்லை சமஸ்கிருதம் மொழியைத்தான் கற்பிக்க போகிறார்கள். புதிய கல்விக்கொள்கையில் எப்படி எல்லாம் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்று மத்திய அரசே தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே விவாதத்தின்போது பேசிய பிடிஆர் பழனிவேல் ராஜன், சரி இருமொழி கொள்கையால் தமிழ்நாடு இழந்தது என்ன? என்றும், மற்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கை உள்ளதா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உத்தர பிரதேசத்தில் மும்மொழி கொள்கையின் கீழ் 3வது மொழியாக எதை படிப்பார்கள். அவர்களுக்கு முதல் மொழியாக இந்தி உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதனை அவர்களால் சரிவர கற்கமுடியவில்லை. இந்நிலையில் 3வது மொழியாக தமிழா?, பெங்காலியா?, மலையாயளமா? எதை கற்றுத்தர போகிறீர்களா?, தமிழகத்திற்கு வேலைக்கு வருவார்கள் என்பதால் 3வது மொழியாக தமிழை கற்றுத்தர போகிறீர்களா? என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
ஒருபுறம் பிடிஆர் அடித்து ஆடிக்கொண்டிருக்கிற போது மற்றொருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தென்மாநில அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு திமுகவில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு சென்று, அம்மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, அவர்களையும் பாஜகவுக்கு எதிராக நிறுத்தியுள்ளார். தற்போது அவர்களும் களத்திற்கு வருகிறார்கள். இதுவரை ஸ்டாலின் மட்டும் தனியாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார் என்று நினைத்தோம். இப்போது எல்லோரையும் ஸ்டாலின் களமிறக்கிவிட்டுள்ளார். இனி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். அவர்களின் கேள்விகளுக்க, உங்களால் பதில் சொல்ல முடியுமா? தமிழ்நாடு மத்திய அரசுடன் தனியாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக நாம் நினைக்கும் வேளையில், ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க தொடங்கியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.