Homeசெய்திகள்கட்டுரைபெரியார் மண்ணன்று, மலை! - பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

பெரியார் மண்ணன்று, மலை! – பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

-

- Advertisement -

“மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை” – என்பார் கவிஞர் சுரதா!

இந்த வரிகளை இன்று பலருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது! இது பெரியார் மண் இல்லை, பெரியாரே ஒரு மண் என்று பேசித்திரியும் ஒரு களிமண்ணை இன்று நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது! பெரியார் மண்ணன்று, மலை! - பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

சமூக நீதிக்குப் பெரியார் என்ன செய்தார்? என் பெரும்பாட்டன் பாரதிதான் ஒரு தலித் தோழனின் சாதியையே மாற்றினான் என்பது போன்ற உளறல்கள் இன்று உலவுகின்றன. 1913 ஆம் ஆண்டு கனகலிங்கம் என்னும் பட்டியலின இளைஞனுக்குப் பாரதியார் பூணூல் போட்ட செய்தியைத்தான் இப்படிப் பெருமை பேசுகின்றனர் என்பது புரிகிறது!

பூணூலை அகற்றித்தான் சமத்துவத்தைக் கொண்டுவர முடியுமே தவிர,  பூணூலைப் போட்டு எப்படிச் சமமாக்க முடியும்? எவ்வளவு பேருக்குப் பூணூல் போட முடியும்? பூணூல்  போட்டால் அந்த இளைஞனுக்குப் பெருமை வரும் என்றால், ஒருவனின் கல்வி, அறிவு, திறமை எதற்கும் இல்லாத பெருமை பூணூலுக்கு உள்ளது என்பதுதானே பொருள்  பெரியார் எல்லோருக்கும் கல்வி கொடுங்கள் என்றார். பெயரில், உடையில், இருப்பிடத்தில் சாதி அடிப்படையில்  வேறுபாடு கூடாது என்றார். அதுதானே சமதத்துவம்! இந்தப் பூணூல் விவகாரம் பற்றி 1925 ஆம் ஆண்டே குடி அரசு ஏட்டில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அந்தக் கட்டுரைக்குப் பூணூல் என்றே பெயர்.

“இந்தியாவின் முன்னேற்றத்திற்குத்  தீண்டாமை ஒழிய வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அது போலே இந்தப் பூணூல் தத்துவமும் ஒழிய வேண்டியது அதைவிட முக்கியமானதாகும்!   ஒரு மூட்டை அரிசியில் ஒரு படி கல்லிருந்தால், கீழே கொட்டி அதிலுள்ள ஒரு படி கல்லைப்  பொறுக்கி  எறிவது சுலபமா அல்லது கல்லை விட்டுவிட்டு, ஒரு மூட்டை  அரிசியையும்  பொறுக்கிக் கொண்டு இருப்பது சுலபமா?” (குடி அரசு 27.12.1925)  இந்த வரிகள் பூணூலை எதிர்ப்பது போல் தோன்றும். ஆனால் இதன் உண்மையான உட்பொருள் எல்லோரையும்  சமமாக்க வேண்டும்  என்பதே ஆகும்!

இப்படித்தான் பெரியார் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்தார். அவருடைய அடிப்படை நோக்கமும், அவர் கருத்துகளின் சாரமும், சமத்துவம் என்பதே ஆகும்! ஒற்றை வரியில் சொல்வதானால், சாதி ஒழிப்பும், பாலினச் சமத்துவமும் பெரியாரியம் என்று கூறி விடலாம். சாதியையும், பெண் அடிமைத்தனத்தையும் காப்பாற்றிக் கொண்டிருப்பவை மதம், கடவுள் ஆகியனவே என்பதால் அவற்றையும் பெரியார் எதிர்த்தார்.

சாதியை எதிர்த்த பெரியார் ஏன் சாதிச் சங்க மாநாடுகளில் கலந்து கொண்டார் என்று கேட்கின்றனர். ஆம், அவர் அப்படிக் கலந்து கொண்டது உண்மைதான்!ஆனால் அங்கே போய் அவர் என்ன பேசினார் என்று பார்க்க வேண்டும்! சாதியை விட்டொழியுங்கள் என்றார். பார்ப்பனர்களைப் போலவே நீங்களும் சாதிப்  பெருமை பேசுவதை நிறுத்துங்கள் என்றார்.

பெரியார் மண்ணன்று, மலை! - பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

“பஞ்சமன் பட்டம் போகாமல், சூத்திரன் பட்டம் போகாது” என்பதை இடைச் சாதியினருக்கு உணர்த்தினார்.  அதே நேரம், ஆதி திராவிடர்கள் மாநாடு நடத்தத்  தங்களின் சுயமரியாதை மாநாட்டுத் திடலிலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.   இவ்வாறு பார்ப்பனரல்லாத சாதியினரை ஒற்றுமைப்படுத்த அவர் முயற்சிகள் செய்தார். சாதிக் சங்கங்கள், தங்களின் சாதிப்  பெருமை பேசுவதை விட்டுவிட்டு, குறைந்தது அந்தந்த சாதியில் உள்ள ஏழைப்  பிள்ளைகள் முன்னேற அதே சாதி என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதை வற்புறுத்தினார். பார்ப்பனர்களும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து விட்டு, சமமாக வாழ முன்வந்தால் அவர்களும் நம் சகோதரர்களே என்று அவர் 1962 ஆம் ஆண்டு பேசிய பேச்சு மிகப் புகழ் பெற்றது!

பெண்ணுரிகைக்குப் பெரியார் என்ன செய்து விட்டார்? அவருக்கு முன்பே பாரதியார்தானே பெண் விடுதலை குறித்துப் பாடினார் என்கின்றனர்!  ஏன், வேதநாயகம் பிள்ளையை மறந்து விட்டனர் என்று தெரியவில்லை. பெரியார், பாரதியார் போன்றோர் பிறப்பதற்கு முன்பே, 1876 ஆம் ஆண்டே பெண் விடுதலை பேசியவர் அவர். யார் முன், யார் பின் என்பதன்று, யாருடைய எழுத்தும், பணியும் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தின என்பதே முதன்மையானதாகும்! மற்றவர்களும் எழுதியும், பேசியும் இருக்கலாம். ஆனால் பெரியார்தான், அதனைத் தன் இயக்கத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே ஆக்கியவர்.

பெண்விடுதலை பற்றி பாடியுள்ள பாரதியார், தன் உரைநடையில், “உடன்கட்டை ஏறுவோர் உத்தம ஸ்த்ரீகள் “என்றும் எழுதியுள்ளார் என்பதை மறந்துவிடக் கூடாது! பெரியார் பெண்களை பார்த்துத் தங்கள் கர்ப்பப்பையை அறுத்து விடுங்கள் என்று சொன்னாரே, அது சரியா என்று சிலர் (அதே களிமண்தான்) பொங்குகின்றனர்! அவர்களை பார்த்த்துப் பரிவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த முறை தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்றால், ‘கொன்றுவிடுவேன்’ என்று தந்தை ஒருவர் கூறினால், அவர் மீது இ.பி.கோ 302 இன் கீழ் வழக்கு தொடுபவர்கள் இவர்கள்! அது ஒரு மிரட்டல், அவ்வளவுதான்! நோக்கத்தை விட்டுவிட்டு, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள்தேடும் புத்திசாலிகள் இவர்கள்!

போகட்டும், பெண்களுக்குப் பெரியார் என்ன செய்தார்? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு,  1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே, பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார்.  அன்றைய காலகட்டத்தில், அப்படி ஒரு தீர்மானத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!  “தனியுடைமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாகப்  படிக்க வைக்க வேண்டும். தாய், தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல், பெண்ணாகவே பார்த்து தகுந்த வயதும், தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்”  (பெரியார் ஈ.வெ .ரா சிந்தனைகள், பக்.108) என்றார் பெரியார். அதாவது, பெண் என்பவள் அறிவும், சுதந்திரமும் உடையவளாக வாழ வழி செய்வதே அவரது நோக்கமாக இருந்தது!

ஒரு வலையொளியில் , திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் Enjoyment without responsibility என்று பெரியார் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார். அது எதற்காக, எங்கே , என்ன பொருளில் சொல்லப்பட்டது என்பதைப்  புரிந்து கொல்லாமல்,  சமூக ஒழுக்கத்தைப் பெரியார் கெடுத்து விட்டார் என்று இந்த “ஒழுக்க சீலர்கள்” குரல் எழுப்புகின்றனர்.

பெரியார் மண்ணன்று, மலை! - பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

குடும்பக் கட்டுப்பாட்டை நோக்கிச் சொல்லப்பட்டது அது!1951 ஆம் ஆண்டுதான், இந்திய அரசு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முன்வைத்தது. ஆனால் பெரியாரோ 1929 ஆம் ஆண்டே அது குறித்துப் பேசியுள்ளார். பெண்கள் பிள்ளை பெரும் இயந்திரங்கள் இல்லை என்பதை உணர்த்துவதற்காகவே அப்படிச் சொன்னார். அதைத்தான், புரட்சிக்கு கவிஞர் பாரதிதாசனும்,

“காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?” –  என்று கேட்டார்.

காதலுக்கு வழிவைப்பது enjoyment , கதவொன்று கண்டறிவது கர்ப்பத்தடை without responsibility! அவ்வளவுதான். பெரியாரை எதிர்க்கும் இவர்கள் ஏன் புரட்சிக் கவிஞரை எதிர்க்கவில்லை? எங்கள் புரட்சிப் பாவலன் என்று அவரை மட்டும் கொண்டாடுவது வெறும் அறியாமை மட்டுமன்று. அது பிரித்தாளும் சூழ்ச்சியாம் …..!

பெரியாரையும், வ.உ.சி யையும் பிரிப்பது, பெரியாரையும், ஆனைமுத்துவையும் பிரித்துப் பார்ப்பது என்று பல்வேறு கோமாளித்தனங்களை அரங்கேற்ற இந்தக் கோமாளிகள் முயற்சி செய்கின்றனர். அது சரி, 1929 ஆம் ஆண்டே, குடுமபக் கட்டுப்பாடு பற்றி பெரியாருக்கு எப்படித் தோன்றியது? அவரே விடை சொல்கிறார்…. பெண்கள் விடுதலைக்கு அது ஒரு வழி என்று எனக்குத் தோன்றியது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து நாட்டில் மேரி ஸ்டோப்ஸ் என்று ஒரு மருத்துவரும் இப்படி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார் என்கிறார்.

தேடிப்  பார்த்தால், 1921 ஆம் ஆண்டு லண்டனில் அப்படி ஒரு கருத்தை அந்த மருத்துவர் கூறியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இன்றைய அறிவியல்,  தொழில்நுட்ப உலகத்தில் இதனைக் கண்டறிவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் எப்படிப் பெரியார் தெரிந்து கொண்டார் என்பது வியப்பாக உள்ளது!  பெரியாரைப் புரிந்து கொள்வது அறிவாளிகளுக்கே கடினம் என்கின்ற போது, இந்த மூடர் கூடங்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று நாம் கவலைப்பட்டு என்ன பயன்?  என கூறியுள்ளாா்.

இதை முதலில் படியுங்கள் – ஈ.வெ.ராமசாமி என்கிற நான்…

MUST READ