Homeசெய்திகள்கட்டுரைதிமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!

திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!

-

- Advertisement -

திமுகவை முழுநேரமாக எதிர்க்கும் பாண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் என்று  பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

umapathy

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திமுகவை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது : முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஏறி பேசியுள்ளது, திமுகவினர் இடையே பெரிய அளவில் ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கால திமுகவில் இதுபோன்ற பல நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. கிராமத்து திருவிழாக்களில் உள்ளுர் ஆட்டக்காரர்களை மதிக்க மாட்டார்கள். வெளியூர் ஆட்டக்காரர்களை கொண்டுவந்து ஆட வைக்கும்போது மக்கள் அனைவரும் ரசிப்பார்கள். அதுபோன்ற ஒரு மனநிலையில் தான் திமுக உள்ளது. ஊரு திருவிழா நடத்தி இருந்தால் வெளியூர் ஆட்டக்காரர்களை கொண்டு வந்து ஆட வைத்திருக்கலாம். ஆனால் திமுக என்பது ஒரு அரசியல் கட்சி.

வருடத்தின் 365 நாட்களும் திமுகவை அழிக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இந்தியை தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ரங்கராஜ் பாண்டே. தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்தவர் பாண்டே. தம்மை வாழ வைத்த தமிழ்நாட்டிற்கு அவர் நன்றி சொல்ல வேண்டும். இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போன்றவர்கள், தங்கள் வசிக்கும் அமெரிக்க நாட்டிற்கு உண்மையுடன் இருக்கிறார்கள். ஆனால் பாண்டேவை போன்று பிழைக்கச் சென்ற இடத்தையே குழிதோண்டி புதைக்க நினைக்கும் ஒரு ஜீவனை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த விவகாரத்தில் பாண்டேவை குற்றம் சொல்லக் கூடாது. அவரை நிகழ்ச்சிக்கு அழைத்த திமுகவினரை தான் கேள்வி எழுப்ப வேண்டும். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கும், பாண்டேவுக்கும் என்ன தொடர்பு உள்ளது.

வருடம் முழுவதும் தமிழை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் இந்தியை, சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருப்பவர் ரங்கராஜ் பாண்டே. நிகழ்ச்சிக்கு முதல் நாளில் தான் திமுகவினரை விமர்சித்து வீடியோவை போட்டிருந்தார். அடுத்தநாள் அவரை கூட்டிவந்து முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளனர். அப்போது நீங்கள் எல்லாம் திமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்களா? இதில் அமைச்சர்கள் வேறு?. தமிழ்நாட்டில் எத்தனையோ பிராமணர்கள் இருக்கிறார்கள். பல திமுககாரர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கூப்பிட்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள். ஆனால் காசை வாங்கிக்கொண்டு திமுகவை அழிக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டேவை கூப்பிட்டு என்ன பாராட்டு விழா நடத்த வேண்டும்?. அரசியல் கருத்து வேறுபாடு என்பது வேறு. ஆனால் கொள்கை ரீதியாகவே தமிழர்களை நசிக்க துடிக்கும் பாண்டேவை கூப்பிட்டு வந்து, திமுக மேடையில் பேச வைக்கிறீர்கள்.

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார். அவரை எதிர்த்து திமுகவினர் பெரியளவில் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டாமா? ஒருபுறம் விஜய் ரசிகர்கள் முதலமைச்சர் குறித்து அருவருக்கத்தக்க அவதூறுகளை பரப்பி வருகின்றனர். முன்பெல்லாம் சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர் திமுகவை விமர்சித்து பதிவுகளை போட்டிருந்தார். இப்போது விஜய் ரசிகர்கள் அரசை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுகவினர் கடும் ஆதங்கத்தில் உள்ளனர். நாகரிக அரசியல் என்பது ஓரளவுக்குதான் இருக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போதே திமுகவை இவ்வளவு விமர்சிக்கிறார்களோ, ஆட்சியில் இல்லாவிட்டால் கட்சியையே அழித்துவிட மாட்டார்களா?. பாண்டே, திமுக மேடையில் சென்றும் திராவிட எதிர்ப்பைத்தான் பேசி இருக்கிறார். திராவிட எதிர்ப்பாளரான அவரை அழைத்து வந்தால், அதைதான் அவர் பேசுவார். சோன்ப்படி வியாபாரியான பாண்டே எங்கே சென்றாலும் அதைதான் பேசுவார். அவரை உங்கள் தெருவுக்கு அழைத்துச்சென்றது நீங்கள்தான். முதலமைச்சர் நிகழ்ச்சியில் பேச வைக்க தமிழ்நாட்டில் திராவிட கொள்கைகளை பேசும் பத்திரிகையாளர்களே இல்லையா?

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திமுக நிகழ்ச்சிக்கு பாண்டேவை அழைத்ததை அரசியல் நாகரிகம் என்று சிலர் சொல்கிறார்கள். அது திமுக, பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுக்குத்தான் பொருந்தும். சீமானுக்கும், பாண்டேவுக்கும் எந்த வித்தியசமும் கிடையாது. பாண்டே முதல் நாளில் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று வீடியோ போடுவார். இன்னொரு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி செய்திருக்கக்கூடாது என்று வீடியோ போடுவார். 4வது நாளில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்பார். 5வது நாளில் 2026 உடன் திமுக அழியப்போகிறது என்று வீடியோ போடுவார். தற்போது பாண்டே தன்னை ஒரு நடுநிலையாளர் என்று சொல்லிக்கொள்ள திமுகவினரே வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். இனி அவர் நான் திமுக மேடையிலேயே பேசியுள்ளேன் என்று சொல்லிக்கொள்வார்.

முதலமைச்சர் நிகழ்ச்சியில் நக்கீரன், காந்தராஜ் போன்றோர் திராவிட இயக்க ஆதரவாளர்கள் பேசினால் போதாதா? தனியார் தொலைக் காட்சியில் பாண்டே பொறுப்பாளராக இருந்தபோது என்ன நடைபெற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியும். ஒரு பக்க சார்புடன் விவாதம் நடைபெறுவதால் அந்த டிவிக்கு விவாத நிகழ்ச்சிக்கு திமுகவினர் செல்லக் கூடாது என்றே உத்தரவிட்டார். அதற்கு முழு காரணம் பாண்டே தான். அவரை கூட்டி வந்து நிகழ்ச்சியை நடத்தினால், உங்களை ஆதரித்தவர்கள் எல்லாம் முட்டாள்களா? கலைஞர் பிறந்த சமுதாயத்தை விமர்சித்தவர் பாண்டே. அன்றாடம் திமுகவை கரித்துக்கொட்டிக் கொண்டு முதலமைச்சரையும், அவரது குடும்பத்தினரையும் விமர்சித்துக்கொண்டிருக்கும் ரங்கராஜ் பாண்டேவை கூப்பிட்டு பாராட்டு விழா நடத்துவது என்பது மிகவும் கேளிக்குரியது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ