நடிகர் விஜயின் வருகையால், தனது வாக்குவங்கி பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சீமான், தவெகவின் கொள்கை தலைவரான பெரியாரை கடுமையாக விமர்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீமானின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளிப்படையாக சீமான் போட்டுடைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களத்தில் தமிழ்தேசிய அரசியலை பேசி வருகிறார். பிரபாகரனை தலைவராக ஏற்று அவர் செய்து வரும் இந்த அரசியலில் பெரியார், திராவிடம் என்ற விவாதம் வரும்போது எல்லாம் தமிழ் சமூகத்திற்கு பெரியார் வழிகாட்டி தான், ஆனால அவர் மட்டும்தான் எல்லாம் முற்போக்கு நடவடிக்கைகளுக்கும், சீர் திருத்தங்களுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. 2010ஆம் ஆண்டு மே மாதம் நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு திராவிட மேடைகளில் பெரியாரின் பெருமைகளை பேசியுள்ளார். கடவுள் மறுப்பு, பெண்ணுரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உணர்ச்சிப்பூர்வமாக பேசி வந்தார்.
எனினும் அரசியல் ரீதியான சிந்தனை மாற்றம், பிரபகரன் உடனான சந்திப்பு உள்ளிட்டவை அவரது பாதையை ஒட்டுமொத்தமாக மாற்றிப்போட்டன. ஈழப் போராட்டத்திற்கு பின்னர் தமிழ் தேசிய அரசியலை தமிழ் நாட்டில் சீமான் அளவுக்கு ஆழமாக பேசியது யாரும் இல்லை. அந்த அளவுக்கு ஆழமான வேட்கையோடு பேசி வந்தார். இப்படியாக பெரியாரை நேசித்தவர், அவரையே எதிர்க்கும் மனநிலைக்கு கடந்த 15 ஆண்டு கால அரசியல் பயணத்தில் மாற்றம் கண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீமானிடம் பெரியார் எதிர்ப்பு சற்று கூடுதலாகவே காணப்படுகிறது. குறிப்பாக தாயுடன் உறவு கொள்வது என்கிற ரீதியில் பெரியார் பேசியதாக சீமானின் சர்ச்சை பேச்சு திராவிட உணர்வாளர்கள் இடையே பெரிதாக வெடித்தது. திராவிடர் கழகத்தினர் சிமானின் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்யக்கோரி புகார் அளித்தனர். பெரியார் விவகாரத்தில் சீமானின் பேச்சை திமுக, விசிக, பாமக, அதிமுகவை கண்டனம் தெரிவிக்க, பாஜக வரிந்துகட்டிக்கொண்டு வரவேற்றது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெரியார் கூறிய கருத்துக்களை அவருக்கு எதிராக முன்வைத்து, காட்டமாக விமர்சித்தார். பெரியார், திராவிடம் போன்றவற்றை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள் அதை என்னிடம் திணிக்காதீர்கள் என்று கூறிய அவர் பெரியார், திராவிடத்தை ஒழித்தே தீருவேன் என்று மாறியுள்ளார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது பெரியாரை நீங்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவரையே கொள்ளை வழிகாட்டியாக கொட் கட்சிகள் உருவாகத்தானே செய்கிறது என்று விஜயின் தவெக கட்சியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. சட்டென சூடான சீமான் அதுதான் இவ்வளவையும் பேச வைக்கிறது. என் தம்பி விஜய் பெரியாரின் எந்த கொள்கையை ஏற்கிறார். எந்த கொள்கையை எதிர்க்கிறார் என்று விளக்க வேண்டும் என்கிறார். பூனைக்குட்டி வெளி வந்தது என்பது போல சீமானின் எதிர்ப்புக்கு உண்மையிலாலேயே விஜய் தான் காரணமாகும்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்த விஜய், தனது முதல் மாநாட்டில் 5 தலைவர்களை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்தார். அப்படி அறிவிக்கப்பபட்ட தலைவர்களில் ஒருவர் பெரியார். இது தொடர்பாக மாநாட்டில் பேசிய விஜய் பெரியாரின் பல கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை. எங்களுக்கும் கடவுள் விருப்பு உள்ளது என்று தெரிவித்தார். இப்படியாக விஜயின் வருகையால் இளைய தலைமுறையினர் அவரை உற்று நோக்குகின்றனர். விஜயின் ரசிகர்கள், முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பலம் கூடுதலாகி உள்ளது.
இந்நிலையில் தான், இளைஞர்களின் வாக்குகளை பெரிய அளவில் அறுவடை செய்த சீமான், அந்த வாக்குகள் விஜய் பக்கம் செல்வதை கவனித்து பெரியார் எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்ததாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விஜய் மாநாட்டிற்கு பின்னர் அவரை கடுமையாக எதிர்த்த சீமான், அவரது கொள்கை தலைவரான பெரியாரையும் விட்டுவைக்க வில்லை. சமீப காலமாக விஜய் மீது சீமானுக்கு மீண்டும் சாஃப்ட் கார்னர் வந்துவிட்டாலும், பெரியார் எதிர்ப்பு கூடியிருக்கிறது. இதனை ஏற்கும் விதமாக அதுதான் இவ்வளவும் பேச வைக்கிறது என்று செய்தியாளர்களிடம் போட்டுடைத்துள்ளார் சீமான்.