அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா தொகுத்துள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில்லை என்று திருமாவளவன் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! — பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்! என குறிப்பிட்டிருந்தார். மேலும் நிகழ்ச்சியை நடத்திய பத்திரிகை மற்றும் இது தொடர்பான செய்தியை முதலில் வெளியிட்ட நாளேட்டின் மீதும் திருமா சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், திருமாவளன் எடுத்துள்ள முடிவு சரியானது என்றும், அவர் தன் கட்சியில் இருந்து பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது :- இன்றைய அரசியல் சூழலில் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில்லை என்று எடுத்துள்ள முடிவு என்பது மிகவும் சரியானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. மேலும், அவர் தமது அறிக்கையில் யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!
— பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்! என தெளிவாக கூறியுள்ளார். இதன் முலம் இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு பின்னால் உள்ள அரசியல் சதி திருமாவுக்கு தெரியும் என்பது புரிகிறது.
இந்த அரசியல் சதி யாரால் வந்தது என்பதும் அவரது மனசாட்சிக்கே நன்றாக தெரியும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நான் ஆதவ் அர்ஜுனாவின் பெயரை குறிப்பிட்டே பேசினேன். நாளைக்கு ஆதவால் திருமாவளவன் வருந்த வேண்டி வரும் என கூறினேன். அதுபோலவே தற்போது நடந்து விட்டது. அவரால் திமுக – விசிக கூட்டணியில் பிரச்சினை வரும் என்று சொல்லியிருந்தேன். அதேபோலவே வந்துவிட்டது.
இது பழைய காலம் போல இல்லை. இப்போது எல்லாமே அரசியல் தான். இன்று புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை கேட்டுவிட்டு திருமா அவரை கட்சியில் வைத்திருப்பரா?. அந்த கூட்டத்தில் திருமா பங்கேற்று, ஆதவ் அவ்வாறு பேசியிருந்தால் திமுக கூட்டணி நிலைமை என்ன ஆகி இருக்கும் தெரியுமா?. எதிர் எதிர் கருத்துக்களை கொண்ட தலைவர்கள் பங்கேற்பதற்கு உதாரணமாக திருமா, கலைஞர் நாணய வெளியிட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடன் ஒரே மேடையில பங்கேற்ற போதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக எதிர்த்தார். எனவே தமது எதிர்ப்பை முதலமைச்சர் தொடரவே செய்துள்ளார்.
ஆனால் விசிக விவகாரத்தில் ஒரு கூட்டணியில் பிரச்சினை செய்து, அந்த கட்சியை பிரித்து அதிகாரத்தில் பங்கு தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்றால் என்னாவது. கடந்த 35 ஆண்டுகளாக அம்பேத்கரின் புகழை பாடுபவர் திருமாவளவன். ஆதவ் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுதான் அவர் தனது அம்பேத்கர் மீதான பற்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் ஒரு சதி உள்ளது. திருமாவளவனின் இன்றைய அறிக்கையிலும் அவர் அதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை.
இந்த விவகாரத்தில் திருமா கூறுவது போல, பத்திரிகைக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றுகிறது. ஆனால் திருமாவளனின் கூடவே இருக்கும் ஆதவ் அர்ஜுனாதான் இந்த ஏற்பாடுகளையும் செய்கிறார். ஆனால் பிரச்சினைகளுக்கு அவர் காரணம் என்று திருமாவளவன் கூறவில்லை. இந்த விவகாரத்தில் நீங்களே அரசியல் சதி உள்ளதாக கூறி விட்டீர்கள். இன்னும் வெளிப்படையாக வாருங்கள். ஆதவ் குறித்து ஒரு முடிவு எடுங்கள். அவர் இன்னும் விசிகவில் தொடர்ந்தால் திமுக – விசிக கூட்டணியில் இன்னும் பிரச்சினை ஏற்படும். விசிகவின் நன்மைக்காக ஒரு முடிவெடுங்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 1999ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலில் உள்ளது. ஆனால் கடந்த 3 தேர்தல்களில் பார்த்த வெற்றியை, அக்கட்சி இதுவரை பார்த்தது கிடையாது. இன்று விசிகவுக்கு 2 எம்.பி-க்கள், 4 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். விசிக இருந்ததால், கூட்டணியின் தலைமையான திமுகவுக்கு ஆதாயம் இருந்தது. அதேபோல் திமுகவால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஆதாயம் இருந்துள்ளது. இருவரும் பரஸ்பரம் பயனடைந்துள்ளீர்கள். விசிக அரசியல் ரீதியாக இன்னும் பலமாக வேண்டிய அவசியம் உள்ளது. எதிரணியில் பலமான கூட்டணி இல்லை. அனைவரும் தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றனர். தற்போதைக்கு கூட்டணி உருவாகவும் வாய்ப்பு இல்லை.
தவெக தலைவர் விஜயும் கூட 2026 தேர்தலுக்கு பின்னர் ஜெயிக்கமாட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்க்க பலமே இல்லாத அணிகள் உள்ள நிலையில், பலமான அணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி எதார்த்த நிலையை அறிந்து கூட்டணியை தொடர்கிறார்கள். ஒரு புத்தக வெளியிட்டு விழாவை அரசியல் ரீதியாக திசை திருப்ப சதி நடந்துள்ளதை திருமாவளனே அறிந்துள்ளார். அதனால் அந்த விழாவில் பங்கேற்பதில்லை என அவரே முடிவெடுத்துள்ளார். இந்த முடிவு சிறந்த முடிவு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.