பொன்முடியை நீக்கியதன் மூலம் திமுகவில் ஜனநாயகம் மேலும் வலுப்பெற்றிருப்பதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அண்மையில் த.பெ.தி.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டார். திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பொன்முடி, அந்த நிகழ்ச்சியில் பேசியபோது அந்த கால திராவிட இயக்க பட்டிமன்றங்களில் பேசப்பட்டதாக கூறி ஒரு வாதத்தை முன்வைத்தார். அதில் பாலியல் தொழிலாளி வீட்டிற்கு ஒரு ஆன்மீகவாதி செல்வதாகவும், அவரிடம் அந்த பாலியல் தொழிலாளி பேசுவதாகவும் அவர் சொல்கிறார். அவருடைய பேச்சுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்து வெளிப்படையாக எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்தார். இந்நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கொஞ்சமும் தயங்காமல் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சருமான பொன்முடியின் பதவியை பறித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் இதுபோன்ற விவகாரங்களை ஒருபோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று தெளிவுபடுத்தி உள்ளார். மேடைப் பேச்சாளராக இருந்தாலும் சரி, கட்சியின் மிக மூத்த அமைச்சராக இருந்தாலும் சரி பொதுவெளியில் கண்ணியக்குறைவாக பேசக்கூடிய நபர்கள் மீது தான் நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி, ஏற்கனவே இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை ஓசி பஸ் என்று பேசி இருந்தார். ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை குறித்து வேறு விதமாக கமெண்ட் அடித்திருந்தார். இவை எல்லாமே கடும் கண்டனத்திற்கு உரிய வார்த்தைகளாக மாறின. இன்றைக்கு திருநங்ககைள், திருநம்பிகள் குறித்து என்ன விதமான சொல்லாடலை பயன்படுத்துகிறோம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் 20 வருடங்களுக்கு முன்னர் என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்? அந்த வார்த்தைகளை இன்றைக்கு பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாது. பேச முடியாது. பேசக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் குறித்த வார்த்தைகளுக்காக இன்றைக்கு துரைமுருகன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஏன் என்றால் அவர் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசுகிறபோது பொது புத்தியில் உறைந்திருக்கிற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இதுவும் பாராட்ட தக்க ஒன்றாகும். மூத்த அமைச்சரும், மிக மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகன் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அதற்கு பெருந்தன்மை வேண்டும். கலைஞரின் சீடனாக இருந்த நானே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை நினைக்கிறபோது எனக்கே வெட்கமாக உள்ளது என்று சொல்லியுள்ளார். பொதுபுத்தியில் உறைந்துள்ள வார்த்தைகள் நம்மை அறியாமல் வெளிப்பட்டு விடுகிறபோது, அதற்கு வருத்தம் தெரிவிக்கிற மாண்பு, பண்பு திமுகவிடம் உள்ளது.
பொன்முடி, துரைமுருகன் போன்றவர்களின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால் போதாது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் போதாது என்று சிலர் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போமானால் கொஞ்சம் பேர் நாம் தமிழர் கட்சியினர். சொந்த கட்சியினர் போனில் பேசினாலே அவர்களை அவதூறு, ஆபாச வார்த்தைகளால் பேசுகிற சீமானை ஆதரித்துக்கொண்டு பொன்முடி இப்படி பேசலாமா? என்று கேட்கிறார்கள். பொன்முடி பேசியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாதக மேடைகளில் நின்றுகொண்டு இதைவிட கீழ்த்தரமாக பெண்களை பேசிய பேச்சாளர்களின் வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அவர்கள் மீது குறைந்தபட்சம் நடவடிக்கை எடுத்திருப்பாரா சீமான்? சொந்த கட்சியை சேர்ந்த சகோதரிகளை பிசிறு, மசிறு என்று சொன்னாரே அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளாரா?
இன்றைக்கு சொந்த கட்சிக்காரராக இருந்தாலும் பொன்முடியை, கனிமொழி எம்பி கண்டித்திருக்கிறார். ஆனால் கனிமொழியை தேர்தல் பொதுக்கூட்ட மேடையில் கண்ணியக்குறைவாக பேசியவர் ஜெயலலிதா. திடீரென இந்த விவகாரத்திற்குள் பாஜகவினர் வருகின்றனர். பாஜகவுக்கும், நாகரிகத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? அண்ணாமலை பேசாத பேச்சா? பிரபாகரன் அண்ணன் மகன் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளரிடம் கொச்சையாக பேசியவர் சீமான். இவர்கள் வந்து பொதுவெளியில் எப்படி நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று திமுககாரர்களுக்கு சொல்லித்தருகிறார்கள். பத்திரிகையாளர்களை குரங்கு போன்றவர்கள் என்று சொன்னார் அண்ணாமலை. பாஜகாவல் நியமிக்கப்பட்ட ஆளுநர், பெண் பத்திரிகையாளரின் கண்ணத்தை பிடித்து கிள்ளினார். அதனால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறார் என்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பண்பு, மாண்பு பாராட்டத்தக்கது. பொன்முடி திராவிட இயக்க பின்னணியில் இருந்து வந்தவர். அவர் உளப்பூர்வமாக பெண்ணடிமைத்தன பார்வை, சிந்தனை கொண்டவராக இருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆயினும் பொதுவெளியில் பேசுகிறபோது இன்னும் நூரு மடங்கு விழிப்புடன் பேச வேண்டும். அதைதான் துரைமுருகன் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் பண்பட்ட அரசியல் உள்ளது. அதுவரை ஊனமுற்றோர் என்று இருந்த வார்த்தையை மாற்றுத் திறனாளி என்று மாற்றியவர் கலைஞர். திருநங்கைகளையும், திருநம்பிகளின் உரிமைகளுக்காக ஒரு வந்தது என்றால் கலைஞரின் குரலாகும். அதுதான் தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. கற்பழிப்பு என்கிற வார்த்தைகளை இன்றைக்கு எந்த ஊடகமும் பயன்படுத்தாது. காரணம் திராவிட இயக்கம். இவை எல்லாம் அங்கிருந்து வந்ததுதான். அப்போது அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புகிறார். அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு பொன்முடி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு திருச்சி சிவா வந்துள்ளார். இவர்கள் வளர்ந்த காலகட்டத்தில் இவர்கள் பார்த்த சமூகத்தில் இருந்து இன்றைக்கு உள்ள சமூகம் வேறாக மாறியுள்ளது. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சிரமப்படு ?–பவர்கள், இந்த சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. மீண்டும் சொல்கிறேன் திமுக என்பதால் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு கட்சியாக இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கப்பட்டிருக்காது. திமுகவுக்குள் ஜனநாயகம் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது திமுக மட்டும் அல்ல அனைத்துக்கட்சிகளுக்கும், கண்ணியமாக உரையாட வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாகும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.