அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்றும், அவர் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அமைச்சர் பொன்முடி மீதான நடவடிக்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 ஆளுநரை ஆதரிப்பதாக சொல்லி வந்தனர். தற்போது அதற்கு காலக்கெடு நிர்ணயம் செய்துவிட்டார்கள். ஆளுநர் செயல்பட தவறியதல் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி எங்கள் அதிகாரத்தை செலுத்தி அந்த மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளார்கள். ஒரு வகையில் அகம்பாவம் பிடித்த ஆணவம் பிடித்த தனி நபர் ஆளுநராக வரும்போது அரசியல் அமைப்பு சட்டம் அவமானப்படுத்தப்பட்டால் அதற்கு சரியான சவுக்கடி வரும். வர வேண்டும். அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
மசோதாவை அறிமுகப்படுத்தப்படுவது. அதை நிறைவேற்றுவது. அதை ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பது. இறுதி ஒப்புதலை ஆளுநரும், குடியரசுத் தலைவரும் வழங்குவதுதான் லெஜிஸ்லேச்சர். அரசியலமைப்பில் லெஜிஸ்லேச்சர், ஜுடிசியரி, எக்சிகுயூட்டிவ் என்று 3 பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் லெஜிஸ்லேச்சரின் உரிமையை நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது ஆபத்தான விஷயமாகும். 142 சட்டப்பிரிவை பயன்படுத்த உரிமை உள்ளது. அதை எங்கே, எதற்காக நேற்று அமல்படுத்தினீர்கள். லெஜிஸ்லேச்சர் செய்ய வேண்டிய வேலையை ஜுடிசியரி எடுத்துள்ளனர்.அது ஆபத்துதான். இந்த ஆபத்திற்கு முழுக்க முழுக்க காரணம் ஆளுநர் ஆர்.என்.ரவிதான். அரசியலமைப்பு சட்டம் பலவீனப்படுகிறது என்றால், அதை ஏற்படுத்தியது ஆளுநரும், பாஜகவும்தான். ஆளுநர் தனிமனிதர் அல்ல. அவர் செய்யும் அனைத்து வேலைகளையும், உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இவர் செய்த அனைத்து தவறுகளுக்கும் மத்திய அரசு வழக்கறிஞரை நிறுத்தி அவர் சொன்னது எல்லாம் சரிதான் என்று வாதிட்டது மத்திய அரசு. நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய தவறினாலும், சரியாக செய்ய வேண்டிய வேலையை செய்யாவிட்டாலும் நீதிமன்றம் தலையிட தான் செய்யும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்பட்ட அவமானம், பலவீனம் என்று நினைத்தீர்கள் என்றால் அதற்கு முழு காரணம் ஆளுநர், பாஜக தான்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடியதாகும். தற்போது அனைத்து மாநில அரசுகளும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்புவார்கள். உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. நாங்கள் 7 மாதத்திற்கு முன்பு மசோதா அனுப்பியுள்ளோம். அதற்கு உடனடியாக ஒப்புதல் தாருங்கள் என்றால், 30 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும்.90 நாட்களுக்குள் அவர் டேபிளில் எந்த மசோதாவும் இருக்கக்கூடாது. அப்போதுதான் இந்த தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பாகும். முகுல் ரோத்தகி, ஜட்ஜ்மெண்ட் ஆப் த டெகேடு என்று சொல்கிறார். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இபோன்ற துணிச்சலான தீர்ப்புகள் வரும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எல்லோரும் அப்படிதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமான தீர்ப்பாகும். சபாநாயகர் அதிகாரம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களும், அதன் வாயிலாக ஆளுநர்கள் செய்து வந்த அழிச்சாட்டியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பில் இவ்வாறு எழுதுகிறார், ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு கெட்டதாக இருந்தாலும், அதை அமல்படுத்தும் இடத்தில் இருக்கிற தனிநபர்கள் சரியாக இருந்தால் அது நல்ல அரசியல் சாசனமாக மாறும். அதே வேளையில் ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதனை அமல்படுத்து தனிநபர்கள் தவாறக இருந்தால், அந்த அரசியல் சாசனமே தவறாக மாறிவிடும் என்று அம்பேத்கர் சொன்னதை எழுதுகிறார். இந்த வார்த்தைகள் மூலம் அற்புதமான அரசியல் சட்டத்தை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தியவர் ஆர்.என்.ரவி என்கிற வார்த்தை அதில் புதைந்து கிடக்கிறது. இந்த தீர்ப்பு வந்து கிட்டத்தட்ட 5,6 நாட்கள் ஆகிறது. இந்நேரம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போயிருக்க வேண்டும். குறைந்தபட்ச சுயமரியாதை உள்ளவர் என்றால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று ட்விட் போட்டிருக்க வேண்டும். ஆளுநர்களை நிர்வாகிக்கும் உள்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். எதற்காக இந்த கள்ள மவுனம். அப்போது தங்களுடைய தவறுகளை இன்னும் அவர்கள் திருத்திக்கொள்ள வில்லையோ என்கிற அச்சம் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டுக்கு செல்வார்கள் என்றால் ஜனநாயகத்தை இன்னும் சிதைப்பதில் இருந்து நாங்கள் இன்னும் பின்வாங்கவில்லை என்றுதான் இதன் பொருளாகும். பொதுமக்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளும் தான் இதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி மீதான நடவடிக்கையை, ஜெயலலிதா பாணியிலான நடவடிக்கை என எல்லோரும் சொல்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாட்டையை முன்பே எடுத்திருக்க வேண்டும். இது திகவில் இருந்து தொடங்கியது தான். அந்த கால கட்டம் வேறு. இந்து மத நம்பிக்கைகளை, கடவுள்களை, அவர்களது பிறப்புகளை இவை எல்லாம் உண்மை இல்லை. கற்பனை என்று சொல்வதற்கான உரிமைகள், அதை மக்கள் காது கொடுத்து கேட்டது சிரித்தது எல்லாம் போய்விட்டது. இப்போது காலம் மாறிவிட்டது. சட்ட திட்டங்கள் கடுமையாக வந்து விட்டது. நீதிமன்றங்கள் கடுமையாக இருக்கின்றன. கலைஞர் ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பினார். அவரது ஆளுமை காரணமாக அது பெரிதுபடுத்தப்படவில்லை. பொன்முடி என்ன சொல்கிறார். ஒரு விலை மாதுவை மட்டும் பற்றி சொல்லி இருந்தால் அவரது தரம் அவ்வளவுதான் என்று கடந்து போயிருப்பார்கள். அந்த விலைமாது சொல்கிற விஷயத்தை சைவம், வைணவம் என்று மதங்களோடு ஒப்பிடுகிறபோது, அது மதநம்பிக்கைகளுக்குள் வந்துவிடுகிறது. அதுதான் இன்று பொன்முடியின் பதவியை பறிக்கும் அளவுக்கு வந்துள்ளது. திமுக தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். நாம் ஒரு தவறு செய்தால் அவர் தண்டிப்பார் என்கிற பயம் கட்சியினருக்கு போய்விட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.