திமுகவை வீழ்த்த பிரதமர் மோடியின் ஆலோசனையில் உருவான அரசியல் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம் என்கிற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. மோடி தத்தெடுத்த குழந்தைதான் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகிய கூட்டணி இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் சில மாநிலங்களில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரே உருவாக்கிய சிவசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் பதவி மீது உத்தவ் தாக்கரே ஆசைப்பட்டார். அப்போது ஏக்நாத் ஷிண்டேவை தூண்டி சிவசேனா கட்சியை உடைத்து, ஷிண்டேவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்து விட்டது. தற்போது உண்மையான சிவசேனா கட்சி செயலிழந்து போய்விட்டது. அதேபோன்று அந்த மாநிலத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் முடக்கி விட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.,பாஜகவிற்கு கொள்கை எதிரியாகவும், சிம்ம சொப்பனமாகவும் இருந்துவருவது திராவிட இயக்கங்களும், திமுகவும் தான்.திராவிட இயக்க கொள்கைகளை தற்போது நாடு முழுவதும் பேசிவருகிறாா்கள். குறிப்பாக நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயரை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்சரிக்கிறாா். இது ஆர்.எஸ். எஸ். , பாஜக தலைவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று திமுக வில் தேர்தல் அறிக்கையை மகாராஷ்ட்ரா போன்ற பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளனா். திராவிட இயக்கங்களின் கொள்கைகள், அதன் செயல்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பரவிவருகிறது. அதனால் எரிச்சல் அடைந்துள்ள பாஜக, 2026இல் திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பாஜக பல ரகசிய திட்டங்களை தீட்டி வியூகங்களை வகுத்து வருகிறது.
திமுகவிற்கு எதிராக அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி வரிசையில் அமலாக்கத்துறை ஆகிய எதிரிகளை உருவாக்கி அனுப்பிவைத்தது. அவர்கள் அத்தனை பேரையும் பெரியாரின் பேரப்பிள்ளைகள் முறியடித்து விட்டார்கள். திமுகவை வீழ்த்த முயற்சி செய்து வந்த எதிரிகள் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் தந்தை பெரியார் எங்கள் வழிகாட்டி, டாக்டர் அம்பேத்கர் எங்கள் கொள்கையின் தலைவர் என்று பிரகடனம் செய்தார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இந்து மதத்திற்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கடுமையாக போராடியவர்கள். அவர்களை வழிகாட்டியாகவும், கொள்கை தலைவராகவும் விஜய் ஏற்றுக்கொண்டார். அந்த மேடையில் அஞ்சலை அம்மாள், பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, வேலுநாச்சியார் போன்ற தலைவர்களை எதற்காக கொண்டு வந்தார் என்பது தமிழ் மண்ணில் பிறந்த சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். சாதியை ஒழிக்க போராடிய பெரியாரையும் வைத்துக்கொண்டு சாதிக்கு ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து கட்ட அவுட் வைத்த விஜய்யின் கொள்கையை எப்படி எடுத்துக் கொள்வது. கருவாடு, சாம்பாா், ரசம் ஆகியவற்றை கலந்த கலவையை போல் ஆன்மீகம், பெரியார், சாதி என்று அனைத்தையும் கலந்த கலவையான ஒரு கொள்கை திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே தயாரிக்க முடியும்.
சரி, நடிகராக இருந்த விஜய், தவெக தலைவராக உருவெடுத்து விட்டார். அவர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து ஒரு கட்சியின் தலைவராக இதுவரை மக்களுக்காகவும், கட்சி தொண்டர்களுக்காகவும் அவர் செய்தது என்ன? தமிழ்நாட்டில் பெரும் புயல், வெள்ளப்பெருக்கு, பயிர் சேதம், வீடு இழந்தவர்கள், ஆடு,மாட்டை, பொருளாதாரத்தை இழந்தவர்கள் என்று லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தவெக தலைவர் விஜய் என்ன செய்தார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். குறைந்தபட்சம் நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாமல், கண்துடைப்பிற்காக 300 பேரை அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டால் ஒரு கட்சி தலைவரின் கடமை முடிந்து விட்டதா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.
பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு நாள் கேரளாவில் கொண்டாடப்பட்டது. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்றுக்கொண்ட விஜய், அது குறித்து எதுவும் கருத்து சொல்லவில்லை. அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு நாள், அதைப்பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை. மதுரையில் டங்ஸ்டன் பிரச்சனையில் மக்கள் போராடி வருகிறாா்கள், அதைபற்றியும் பேசவில்லை. ஒரு கட்சியின் தலைவர் நாட்டில் நடக்கின்ற எந்த பிரச்சனைக் குறித்தும் பேசாமல் இருக்கிறார்.
இந்தியாவில் மணிப்பூர் என்கிற ஒரு மாநிலம் இருப்பதை பிரதமர் மோடி எப்படி மறந்துப் போனாரோ, அதேபோன்று விஜய்யும் தான் கட்சி தொடங்கியதை மறந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததும் விமர்சனம் செய்து வந்த சில விபரம் அறியாத பாஜகவினர் கூட தற்போது எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார்கள். 2026 தேர்தலில் தவெக வை என்ன செய்ய வேண்டும் , அந்த கட்சியை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று பாஜகவின் மேல் மட்டத் தலைவர்கள் முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.