தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்து மாநில அரசியல் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திராவிட இயக்க ஆய்வாளளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் நடத்திவரும் போராட்டத்தின் பின்னணி குறித்து வல்லம் பஷிர் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: டிலிமிட்டேஷன் என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை திமுக எம்.பி.க்கள் அணிந்து சென்றதால், சபாநாயகர் ஓம்பிர்லா அவையை ஒத்திவைத்துள்ளார். ஒரு வாசகத்திற்கே மத்திய அரசு இப்படி அஞ்சி நடுங்குகிறது என்றால் இனி வரப்போகும் போராட்டக்களங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது. டிலிமிட்டேஷன் என்கிற பெயரில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமலேயே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை திரைமறைவில் செய்து முடித்து விடலாம் என்று நினைத்தீர்கள். அந்த எண்ணத்திற்கே மூடுவிழா நடத்திவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து மாநில முதலமைச்சர்களையும் அவர் ஒருங்கிணைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. தென்மாநிலங்களின் தலைக்குமேல் கத்தி தொங்குகிறது என்று அவர் சொன்னபோது தென்னிந்தியாவை ஒருங்கிணைக்கப் போகிறார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது பஞ்சாப் மாநில முதலமைச்சர், ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் இப்படி தொகுதி மறுசீரமைப்பால் யார்? பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை எல்லாம் அழைத்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து பேசப்போகிறார். இது நாட்டை ஆளும் பாஜகவுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை இந்த நகர்வுகள் வாயிலாகவே அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
முதல் முழக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு போராடும் என்று. அதைதான் இன்று நாடாளுமன்றத்தில் வாசகமாக அணிந்து சென்றார்கள். அதற்கு ஏன் இவ்வளவு பதற்றமடைய வேண்டும் பேரவைத் தலைவர். இது ஒரு ஜனநாயக மரபு தானே. தங்களுடைய நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறார்கள். டிலிமிட்டேஷன் என்பது எத்தகைய மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. அது தமிழகத்தை எப்படி போராட தூண்டியுள்ளது என்பதை நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்து தமிழக எம்.பிக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கே அச்சப்பட்டுக்கொண்டு ஓம்பிர்லா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கிறார் என்றால் இனி நீங்கள் நாடாளுமன்றத்தை எப்படி நடத்திவிட போகிறீர்கள். அடுத்தக்கட்ட நகர்வு உங்களுக்கு எப்படியானதாக இருக்க வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
யாருமே எதிர்பார்க்கவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படி முழங்குவார் என்று. ஆதிக்க இந்தியை வெட்டிப் புதைப்போம் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார். தமிழ்நாட்டில் இருந்து நாம் போர் புரிய அனுப்பிய வீரர்களை எதிர்கொள்ள முடியாமல்தான் பாஜக திணருகிறது. எனவே இன்றை அவை ஒத்திவைப்பு அரங்கேறியுள்ளது. தொகுதி மறுவரையறை முடிவை கைவிடும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அது தமிழ்நாட்டின் நிலைப்பாடு ஆகும்.
வடஇந்திய ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அமைச்சர் பிடிஆர் வெறுமனே விமர்சனத்தை மட்டும் முன்வைக்கவில்லை.பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் 2014ஆம் ஆண்டு உ.பி.க்கு நீங்கள் ஒதுக்கிய தொகை என்ன? உதாரணமாக 100 கோடி ஒதுக்கினீர்கள் என்றால், தமிழ்நாட்டிற்கு 39 கோடி ஒதுக்குகிறீர்கள். எங்களைவிட 61 சதவிகிதம் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளீர்கள். அதற்கு காரணமாக தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக உள்ளது. உ.பி. வளர்ச்சி அடையாத மாநிலமாக உள்ளது என்று சொன்னீர்கள். தற்போது 2024ஆம் ஆண்டு வந்துவிட்டது. இந்த 10 ஆண்டுகளில் உ.பி. மாநிலம் என்ன வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நியாயமான பதிலை நீங்கள் சொல்வதென்றால், தாராளமாக சொல்லலாம். ஏன் நியாயமான பதிலை சொல்ல முடியவில்லை என்றால் எந்த வளர்ச்சியும் கிடையாது. காங்கிரஸ் அரசு இதைதான் செய்தது. தற்போது பாஜக இன்னும் கூடுதலாக செய்கிறது. அதன் மூலம் என்ன நிருவ முற்படுகிறீர்கள் என்றால்? ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை என்பது, தங்களுக்கு துணைபோகிற மாநில அரசுகளுக்கு மட்டும்தான் நிதியை வாரி வழங்குவோம் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள். அதை பிடிஆர் நேரடியாக டார்கெட் செய்து அடிக்கிறார்.

பிடிஆர் விமர்சனத்தை நீங்கள் இடது கையால் தள்ளிவிடவே முடியாது. நாங்கள் ஒரு கட்டமைப்பை இங்கே ஏற்படுத்துகிறோம். அதற்கு எங்களுக்கு போதுமான நிதியை நீங்கள் கொடுப்பது இல்லை. ஆனால் எந்த கட்டமைப்பையும் உருவாக்காத, இது குறித்த சிந்தனையே இல்லாத வேறு சில மாநிலங்களுக்கு தமிழ்நாட்டை விட கூடுதலாக நிதி ஒதுக்குகிறீர்கள். ஆனால் அது அங்கே பயன்பட்டுள்ளதா? என்று கேள்வி எப்புகிறார். மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2.6 மடங்கு கூடுதலாக தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளோம். தொடர்ந்து தொலைநோக்கு திட்டங்களை தந்து கொண்டிருப்பது இந்த அரசு. ஆனால் பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நிதி ஒதுக்குகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.