அதிகாரிகளின் ஒத்துழைப்பால் புழல் ஏரிக்கு ஆபத்து
ஆதிகாலத்தில் ‘’நீரின்றி அமையாது உலகு’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நீரை மையப்படுத்தியே உலகம் இயங்கியது. தற்போது நீரை தேக்கி வைத்திருந்த குளங்கள், ஏரிகள் அனைத்தும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் உலகமாக மாறி வருகிறது.
மனிதனின் பேராசையினாலும், சுயநலத்தினாலும் குடிநீருக்கு பயன்படுத்தி வரும் புழல் ஏரியில் கழிவு நீர் கலந்து நாசப்படுத்தி வருகிறார்கள். இதில் அரசின் அணுகு முறை மெத்தனமாகவே இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை சுற்றுவட்டாரத்தில் வாழக்கூடிய மக்களுக்கு குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 1860ல் புழல் ஏரி உருவாக்கப்பட்டதாக பழைய ஆவணங்களின் வாயிலாக அறியமுடிகிறது.
தமிழ்நாடு புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்!
அதனைத் தொடர்ந்து புழல் ஏரியை சென்னை குடிநீருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்து 1962ல் உத்தரவிட்டது. ஏரியில் மழைநீரை சேமிக்கவும், அதன் பாதுகாப்பிற்காக கரையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4200 ஏக்கர் நிலங்களை ஏரிக்கான நீர்பிடிப்பு பகுதியாக மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புழல் ஏரி 20.87 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 5200 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் ஆனது. அதனைத் தொடர்ந்து 1990ல் தமிழக அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் இடையே கிருஷ்ணா குடிநீர் திட்டம் ஒப்பந்தம் ஆனது.
கிருஷ்ணா குடிநீர் சேமிப்பிற்கு பின்னர் 3.300 டி.எம்.சி. நீர் இருப்பு வைக்கும் அளவிற்கு கரை உயர்த்தப்பட்டது. அதனால் கோடைக் காலத்திலும் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது.
ஏரிக்கு நீர் வரும் வழித்தடம் அடைப்பு
ஏரியின் மேல் பகுதியிலும் ஏரியை சுற்றிலும் இருந்த நீர் வரத்து கால்வாய் வழியாக மழைக்காலங்களில் ஏராளமான நீர் வரத்து இருந்தது. சிவா கார்டன், திருமலைநகர் உள்ளிட்ட பல வழித்தடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் அடைத்து வீடுகளும், கடைகளும் கட்டிக் கொண்டு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
புழல் ஏரியில் ரியல் எஸ்டேட்
புழல் ஏரிக்கரையில் உள்ள ஆரிக்கியம்பேடு, பொத்தூர் பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து பல கம்பெனிகள் உருவாகிவிட்டது. மேலும் உருவாகி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் சில ரியல் எஸ்டேட் தரகர் மூலம் புதிய புதிய நகர்கள் உருவாகி வருகிறது. வெளியூரில் இருந்து வரும் அப்பாவி மக்கள் வீடு கட்டுவதற்கு குறைந்த விலையில் நிலம் கிடைத்தால் போதும் என்று வாங்கி வீடும் கட்டி குடியேறி விடுகின்றனர்.
இதுகுறித்து ஒரு ரியல் எஸ்டேட் தரகரிடம் பேசும்போது இந்த இடத்தை விற்பனை செய்து ஊராட்சி மன்றத் தலைவர், வட்டாச்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிளை கவனித்தப் பின்னர் தான் விற்பனை செய்கிறோம் என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியோடுதான் இந்தப் பகுதியில் சாலைவசதி, மின்சாரம், குடிநீர் என்று அனைத்து வசதிகளும் செய்யப்படுவதாக கூறினார்.
புழல் ஏரி கழிவுநீர் தேக்கமாக மாறும் அவலம்
ஏரி ஆக்கிரமிப்பில் குடியிருப்பவர்கள், ஏரிக்குள் கட்டப்பட்டுள்ள கம்பெனிகள், ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது.
இது குறித்து புழல் ஏரி, அராபாத் ஏரியின் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியிடம் பேசும்போது, புழல் ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏரிக்கு மழைநீர் வரும் வழித்தடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏரி சுற்றிலும் உள்ள மழைநீர் கால்வாயில் பகீரங்கமாக கழிவுநீரை திறந்து விடுகிறார்கள். திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர், தென்றலநகர் கிழக்கு, அம்பத்தூர் 79வது வார்டு வெங்கடேஸ்வரா நகர், கள்ளிக்குப்பம், சூரப்பட்டு, சன்முகாப்புரம் மற்றும் காந்திநகர் ஆலமரத்தடி என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியேறுகின்ற கழிவுநீரை ஏரியில் விடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிககை
புழல் ஏரி, அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் இணைந்து புழல் ஏரி தூய்மை பணியை மேற்கொண்டனர்.
அதற்கான துவக்க நிகழ்ச்சி “நம்ம ஏரி நம்ம பொறுப்பு” தலைப்பில் நடைபெறும் தூய்மை பணியை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடி மற்றும் அதனைச் சார்ந்த கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏரி தூய்மை பணிக்கு படகு வழங்கி உதவி செய்தனர். எக்ஸோனரா தலைவர் செந்தூர் பாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு புழல் ஏரி தூய்மை பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் புழல் ஏரி நீரை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் தற்போது ஏரி மாசடையும் விதத்தில் கழிவுநீரை வெளியேற்றுபவர்கள் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா அல்லது ஏரி பாழாவதை கண்டும் காணாமல் இருந்து விடுவார்களா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.