தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில் நிகழ்ச்சியில் பேரலை சேனலின் நிறுவனரான ஆழி செந்தில்நாதன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: எதை பேசினாலும் சுற்றி சுற்றி தமிழ்நாட்டில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு நாம் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். 2013இல் 7 மாநிலங்களை சேர்ந்த நண்பர்கள் இணைந்து டெல்லியில் பல்வேறு மொழிகளுக்கான இந்தியா என்ற இயக்கத்தை தொடங்கினோம். பின்னர் அது கிளியர் என்ற அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு 40 மொழிகளின் பிரதிநிதிகளின் அமைப்பாகியது. 2015ல் சென்னையில் மொழிப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டில் ஒரு மாநாட்டை நடத்தி சென்னை டிக்ளரேஷன் ஆஃப் ரைட்ஸ் என்ற அறிக்கையை வெளியிட்டோம். இந்தியாவின் மொழிக் கொள்கையின் மோசமாக உள்ளது குறித்து விமர்சித்தோம். பின்னர் பல்வேறு மாநிலங்களுக்கு பயணப்பட்டபோது, எல்லோரும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி, அதெப்படிங்க தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும் தப்பித்துவிட்டீர்கள் என்று கேட்டார்கள். ஏன் என்றால் தந்தை பெரியார் இருந்தார், அண்ணா இருந்தார், கலைஞர் இருந்தார். அதற்கு முன்பாக மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாராதியார் போன்ற தமிழ் அறிஞர்கள் எச்சரித்து இருந்தார்கள்.
தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆள்கிறார். அண்ணாமலை அல்ல. மோசமான மொழிக்கொள்கையோடு தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல பேர் வாங்கிய ஒருவரை காட்டுங்கள் பார்ப்போம். காங்கிரஸ் கட்சியே பிற்காலத்தில் மாறத்தான் செய்தது. அன்று அண்ணா எந்த நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி பேசினாரோ. அன்று தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது என்று அண்ணா சொன்னார். அது நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் உள்பட இன்றைய மோடி வரை யாருடைய காதிலும் விழவில்லை. ஆனால் அதே நாடாளுமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல்காந்தி பேசுகிறார். தமிழ்நாட்டை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது என்று ராகுல் சொல்கிறார். அவர் மட்டும்தான் தமிழ்நாட்டு வரலாறு படித்துள்ளார்.

சிவகங்கையில் இருந்துகொண்டு ஜம்புத்தீவு பிரகடனம் மருது சகோதரர்கள் எழுதியபோது அவர்கள் டெல்லியை பார்த்துதான் எழுதினார்களா? யாரிடம் வந்து தேச பக்தியை பற்றி பேசுகிறார்கள். இந்த நாடு ஒரு காலத்தில் திராவிடர்களின் நாடு. அடுத்தடுத்து வரும் அனைத்து ஆய்வுகளும் அதைதான் காட்டுகிறது. இந்த ஒட்டுக்குமே, ஒட்டுமொத்த நாடுமே சொந்தக்காரர்கள். இதைதான் அண்ணா பேசினார். இந்தி மொழியை நாம் குறை சொல்லவில்லை. அதை திணிப்பதைதான் நாம் எதிர்க்கிறோம் என்று அண்ணா சொன்னார். தமிழரின் 4 ஜீவநாடிகள் என்று அண்ணா சொன்னது. மொழி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இந்து பரிபாலன சட்டம், இனாம் சட்டம். இதனை 90 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்னார். இன்று வரை சனாதனவாதிகளுக்கும், நமக்குமான போராட்டம் இதில்தான் உள்ளது. இன்றைக்கும் மொழிப் போராட்டம் நடத்துகிறோம். இடஒதுக்கீட்டை காப்பாற்ற போராடி கொண்டிருக்கிறோம். இன்றும் கோவில்கள் நமது கட்டுப்பாட்டில் இருக்கனும் என்று போராடி கொண்டிருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்து செய்த மிக முக்கியமான செயல்பாடு இருமொழி சட்டம். 1937ல் பேசியதை தான் 1967ல் அண்ணா செயல்படுத்தினார். 100 வருட சண்டை இது. வெளிமாநில நண்பர்கள் கேட்டார்கள் அல்லவா? நீங்கள் மட்டும் எப்படி இந்தியிடம் இருந்து விழித்துக் கொண்டீர்கள் என்று. ஏனென்றால் எங்கள் தலைவர்கள் வரலாற்றை படித்தார்கள். தமிழ்நாடு என்பதற்கு தனித்தும் இருக்கிறது. ஆனால் எப்போதும் உலகத்தோடு கூடி கூலாவிய நாடு. அந்த தனித்துவம் என்பது எல்லோரும் சமம் என்கிற உரையில் இருந்து வருகிறது. ஆரியம் என்பது அடிப்படையில் சமத்துவமின்மை. 4 வர்ணங்களை கொண்டது. மொழிகளிலும் அதுபோல படிநிலைகள் வைத்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்இன் நீண்ட கால திட்டமாகும். சமஸ்கிருதத்தை கொண்டுவரும் வரை இந்தியை வைத்துக்கொள்ளலாம் என்பதும் அவர்களது திட்டம். மாநில மொழிகளுக்கு எல்லாம் எந்த முக்கியத்துவமும் கிடையாது. இந்தியராக இருந்தால் இந்தி படிக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஏன் அவர்கள் வருணாசிரமத்தை மொழியில் கொண்டு வருகிறார்கள் என்றால், தமிழ்நாடு என்பது 2,500 ஆண்டுகளில் வளர்ந்த வளர்ச்சியை ஏன் உ.பி.யும், பிகாரும் பெறவில்லை. எவ்வளவு பேரரசுகள் இருந்தன. வருடம் 365 நாட்கள் ஓடக்கூடிய ஜீவநதிகள் உள்ளதே?. இந்தியாவின் ஒட்டுமொத்தமாக கனிமவளங்கள் பிகாரிலும், ஜார்க்கண்டிலும் தானே இருக்கிறது. இன்று இந்தியாவின் ஆட்சியாளர்கள் அங்கு தானே இருக்கிறார்கள். மொத்த எம்.பி-க்களும் உங்களிடம் தானே உள்ளனர். என்ன குறை? இதற்கு மேல் ஏன் வளர முடியவில்லை. ஏன் என்றால் உன் மனுதர்ம சிந்தனை, வர்ணாசிரம சிந்தனை மக்களுக்கானது கிடையாது. அந்த சிந்தனைகளுக்கு நேர் எதிராக சாதாரண மக்களை படிக்க வைத்து, வளர்த்து அவர்களை உலக அளவில் புகழ்பெற வைத்த கல்வி முறையை தமிழ்நாடு கண்டறிந்தது. அந்த கல்வி முறையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக்கொள்கை அல்லது மும்மொழி திட்டம். எப்படியாவது தமிழ்நாடு மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.