சென்னை பரங்கிமலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்டு ஹோட்டல்ஸ் நிறுவனம் ரூ. 411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் அண்மையில் புகார் தெரிவித்திருந்தது. பரங்கிமலை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் உள்ள சுமார் 5 ஏக்கர் நிலத்தை அமைச்சரின் மகன்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்த புகார் உண்மையில்லை எனக் கூறி தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை தெரிவித்தாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர், தனது வழக்கறிஞர் சரவணக்குமார் மூலம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலம் அரசு நிலமே இல்லை என்று தெரிவித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு அதிகாரிகள் அரசு நிலம் தான் என்று சொல்லுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், சம்பந்தப்பட்ட நிலம் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை வருவாய் மாவட்டத்திற்குள் வருவதாகவும், ஆனால் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்டு ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அரசு அதிகாரிகள் நுழைய தடையாணை பெற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அரசு அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை ஆணை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திற்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற வரம்புக்குள் வராது என்றும் விளக்கம் அளித்துள்ளதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
எனவே அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் தவறான நீதிமன்றத்தில் போய் வாங்கிய செல்லாத நீதிமன்ற ஆணைகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஜெயராமன், தமிழ்நாடு அரசு இனியாவது இந்த 5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அமைச்சர் ராஜகண்ணப்பன், அவரது மகன்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.