சீமானுக்கு கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர் இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோணி விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சீமான் தங்களை ஒருமையில் பேசியதாகவும், சாட்டை துரைமுருகன் தான் கட்சியை நடத்துவதாகவும் தெரிவித்து அக்கட்சியின் நெல்லை மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் சீமானுக்கு கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அவர் இப்படியே கட்சியை வைத்து ஆதாயம் காண முயற்சிக்கிறார் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அந்தோணி விஜய் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- நெல்லை மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட, இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது குறித்து, மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வீன் தனது கருத்துக்களை சீமானிடம் தெரிவிக்க முற்பட்டார். அப்போது, சீமான் அவரை ஒருமையில் பேசினார். மேலும் இது தன்னுடைய கட்சி என்று வெளியே போ நாயே என கூறினார். இதனால் அவர் அவமானத்துடன் வெளியேறினார்.
அவர் வெளியேறியதற்கான காரணம் குறித்து நான் கேட்டபோது, சாதிய ரீதியாக அணி திரட்டுவதாக குற்றம்சாட்டினார். மற்ற தலைவர்களின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் நாம் தமிழர் கட்சி, காமராஜர் பிறந்தநாளை கொண்டாடது ஏன் என பர்வீன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதனை குறிப்பிட்டு என்னிடம் சீமான் தெரிவித்தார். கட்சியில் 10 ஆண்டுகளாக இருந்தால் என்ன? இது என் கட்சி. பேகிறதென்றால் நீயும் போ என கூறினார். அப்போது, சாட்டை துரைமுருகன் தனது சமுதாய அடையாளத்தை வெளிப்படுத்து குறித்து கேட்டபோது, எங்களை வெளியேற்றினர்.
நாம் தமிழர் கட்சியில் தென்மாவட்டங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை. நெல்லை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு கிளை கட்டமைப்பே கிடையாது. தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்யவே ஆட்கள் இல்லை. இந்த நிலையில் முன்பு ஒரு தொகுதியை 3 ஆக பிரிக்க சொன்னார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒரு தொகுதியாக 30 ஆக பிரித்து நிர்வாகிகளை நியமிக்க சொல்கிறார். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சிவகுமாருக்கு பட்டியல் வழங்கியபோதும், அவர்கள் நியமிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் நிர்வாகிகளை நியமிக்க சொல்கிறார். கட்சிக்காக உழைத்த எங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து ஊக்குவித்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தன்னை சுற்றி 4 பேரை வைத்துக்கொண்டு, மற்றவர்களை போஸ்டர் ஒட்டுவது, கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்துவது என கீழ் நிலையிலேயே வைத்திருக்க முயற்சிக்கிறார்.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை எதுவாக இருந்தாலும் வழக்கறிஞர் சிவகுமார், தாசில்தார் ஆகியோரை கேட்டுத்தான் முடிவுகளை எடுப்பார். கட்சி நிர்வாகிகளிடம் எதையும் ஆலோசிக்க மாட்டார். நாம் தமிழர் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற விருப்பம் சீமானுக்கு இல்லை. கட்சியை இப்படியே வைத்திருந்து ஆதாயம் காண முற்படுகிறார். நெல்லையில் நடைபெற்ற தீபக் ராஜா கொலை தொடர்பாக சாட்டை துரைமுருகன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இதில் தீபக் ராஜா குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்தால் கட்சியில் இருந்து பலர் விலகிச்சென்றனர். சாட்டை துரைமுருகன் மன்னிப்பு கோராததால் பண பலம், அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் கட்சியை விட்டு விலகிச் சென்றனர். சீமான் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த விரும்பவில்லை. கடைசி வரை அதனை வைத்து ஆதாயம் தேட பார்க்கிறார்.
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் கூறியதை பார்த்தால் சீமான், ஒருகட்சியின் பி டீம் போன்று செயல்படுவதாக தோன்றுகிறது. என் மீதோ, பர்வீன் மீதோ அவர்கள் வைத்த குற்றச்சாட்டை நிருபிக்க முடியவில்லை. இதுவரை தங்களுக்கு கட்சியில் இருந்து நீக்கியதற்கான கடிதமும் வரவில்லை. பழைய ஆட்களை வெளியேற்றி விட்டால், புதிய நபர்களை வைத்து கட்சியை நடத்தலாம் என நினைக்கின்றனர். எங்கள் மாவட்டத்தில் நடந்ததால் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
கட்சியை வளர்த்து ஆட்சியை பிடிக்கும் ஆசை சீமானுக்கு முற்றிலும் இல்லை. ஏன் கட்டமைப்பையே பலத்தப்படுத்தவில்லை. நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சமுகத்தின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நிலையில், வெற்றி பெறும் எண்ணமே இல்லாமல் வேட்பாளர்களை அறிவிக்கிறார். சாட்டை துரைமுருகன் மன்னிப்பு கேட்டிருந்தால் கட்சி நிர்வாகிகள் கட்சியிலேயே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்களை அரவணைத்துச் செல்லும் திட்டம் சீமானிடம் இல்லை. எங்கள் மீதான சாட்டை துரைமுருகனின் சாதிய ரீதியான குற்றச்சாட்டுக்கு நாங்கள் பதில் அளிக்க தயாராகவே உள்ளோம்.