Homeசெய்திகள்கட்டுரைஆர்.எஸ்.எஸ். பாணியில் கூலிப்படை அரசியல் செய்யும் சீமான்... பெரியார் அவதூறு பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்! 

ஆர்.எஸ்.எஸ். பாணியில் கூலிப்படை அரசியல் செய்யும் சீமான்… பெரியார் அவதூறு பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்! 

-

- Advertisement -

தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்த்து பேச பாஜகவுக்கு கிடைத்த திறமையான கூலிப்படை நபர்தான் சீமான் என தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறு கருத்து தெரிவித்ததன் முழுமையான பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு தோழர் மருதையன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- உயர் நீதிமன்றங்களில் பெருமளவில் பிராமண நீதிபதிகள் நியமிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி போராட்டத்தில் ஈடுபட்டார். யூஜிசி கல்விக் கொள்கை திணிப்பு தொடர்பாக மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளன. இந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் சிலர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக ஓடுவார்கள். முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, கூத்தில் கோமாளி போன்று சீமான் நடுவில் வந்துள்ளார். இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் இயக்கங்கள், திமுகவினர் புகார்  அளித்துள்ளனர். ஆனால் சீமானின் அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ் இன் கூலிப்படை அரசியல். அதற்காக அவர் எதையும் செய்வார். தமிழ்நாட்டில் திராவிட அரசியலை எதிர்த்து பேசிதான் நிலைக்க முடியும் என்பது பாஜகவுக்கு உள்ள நிலைமை. திராவிட இயக்க எதிர்ப்பு நீண்ட காலமாக அவர்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டனர். ஹெச்.ராஜா, ராமகோபாலன் போன்றோரது அரசியல் பிரமணர்கள் என்பதால் எடுபடவில்லை. அதனால் அர்ஜுன் சம்பத் போன்ற கீழ்மட்ட சமூகத்தினரை இறக்கிவிட்டனர். அவர்கள் பேசி பார்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. அதில் திறமையான கூலிப்படையாக வந்து சேர்ந்திருக்கும் நபர்தான் சீமான்.

பாபர் மசூதி பிரச்சினை எதற்காக எடுக்கப்பட்டது என்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை டைவர்ட் பண்ணுவதற்காகதான் இதை எடுத்தார்கள். அதை கைவிட்டால், பாபர் மசூதி விவகாரத்தை கைவிடுவதாக கூறினார்கள். மோடி ஆட்சி வந்த பின்னர் டைவர்ட் பண்ணுவதற்காக இதுபோன்று கையில் எடுப்பார்கள். அதற்காக அந்த பிரச்சினைக்கு பதில் அளிக்காமலும் இருக்க முடியாது. பாஜக என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறார்களோ, அதை பாஜக சார்பில் செய்ய தமிழகத்தில் சீமான் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது பார்ப்பன நீதிபதிகள் நியமனம் விவகாரம், யூஜிசி விவகாரம் உள்ளது. இப்போது சீமானுக்கு என்ன பிரச்சினை என்றால் விஜய் வந்தவுடன் கட்சி களைகிறது. கட்சி பிரமுகர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். இவற்றை டைவர்ட் செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அடுத்து புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞரை இழிவாக பேசினார். அதற்கு சுப.வீ சரியான பதில் அளித்தார். இதன் பின்னர் கடலுரில் பெரியார் குறித்து அவதூறாக பேசினார். அதற்கு ஆதாரம் கேட்டால் நீங்கள் பூட்டி வைத்துள்ளீர்கள் என்கிறார். குற்றச்சாட்டு வைத்து நீங்கள் தான். அப்போது எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெரியார் மீது குற்றம் சுமத்தினீர்கள். சீமானிடம் கேட்டால் அண்ணாமலை தன்னிடம் ஆதாரம் உள்ளது என கூறுகிறார். இதை ஜோக் என்பதா? அல்லது கிரிமினல் நடவடிக்கை என்பதா?

தமிழ்நாட்டின் நிலைமை நினைத்தால் வேதனையாக உள்ளது. திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு வளர்ந்துள்ளது. அந்த இயக்கம் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். கல்வி அறிவு இல்லாத ஒரு கால கட்டத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக, கடவுள் மறுப்புக்கு லட்சக்கணக்கானோரை திரட்ட முடியும் என்று காண்பித்தவர் தந்தை பெரியார். இந்த மண்ணில் பொதுவுடைமை இயக்கம் வளர்ந்துள்ளது. மேலும், திராவிட இயக்கம் வளர்ந்துள்ளது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து பேசி வளர்ந்த இந்த மண்ணில் தற்குறி வந்து அரசியல்வாதி என பேசுகிறார். அப்போது என்னயா இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்க பத்திரிகையாளர்கள் எவருக்கும் அறிவு இல்லையா?. இதுதான் கவலைப்பட வேண்டிய விஷயம். இது போன்று அவதூறாக பேசிவிட்டு ஒருவர் சுதந்திரமாக பொது வெளியில் திரிகிறார் என்றால் இந்த சமுகம் என்ன செய்கிறது. சமுகத்தில் இருந்து கோபம், ஆத்திரம் ஏன் வரவில்லை. இதில் விளக்கம் கேட்க என்ன உள்ளது?. பெரியார் மீது செருப்பை வீசுவது, சாணியை வீசுவது போன்ற செயல்தான் சீமான் செய்தது. அதற்கு அவ்வாறு தான் செருப்பை வீசி, சாணியை வீசி பதிலடி தர வேண்டும்.

அம்பேத்கர் முஸ்லிம்கள் குறித்து விமர்சித்தார் என சங்கிகள் பிரச்சாரம் செய்வார்கள். முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர் சொன்னது என்ன? என்று, ஆனந்த் டெல்டும்டே விளக்கம் அளித்து புத்தகம் எழுதியுள்ளார். அதேபோன்ற வேலையை இங்கே சீமான் செய்கிறார். இப்போது பெரியார், இஸ்லாமியர், கிறிஸ்துவர் குறித்து விமர்சித்ததாக தெரிவித்தார். அவர் அறிவுரை வழங்கி இஸ்லாம், கிறிஸ்துவ மக்கள் ஏற்கும் நிலையில் இல்லை. அறிவுப்பூர்வமாக அரசியல் நடைபெற்ற இடத்தில் இப்படி ஒரு தற்குறி எப்படி அரசியல் செய்ய முடிகிறது. எதை எடுத்தாலும் முரணமாக பேசுவது. ஆனால் இப்படிப்பட்ட தற்குறிகள் எப்படி அரசியல் பேச வந்தார்கள் என்றால், தமிழ் தேசியம். அவர் பேசுவது தமிழ் தேசியம் என அவரே சொல்லிக் கொள்கிறார். சீமானுக்கு தனித்தமிழ் நாடு உருவாக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அவர் ஒரு கூலிப்படை போன்ற நபர்தான். அப்பப்போ அந்த தேர்தலுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு என்ன பண்ணுவதுதான் அவரது வேலை. இதனை தமிழ்தேசியம் என்று நம்ப ஒரு கூட்டம் உருவாகி விட்டது. வலதுசாரி தமிழ்தேசியம் என்பது பாசிசமானது. இது பார்ப்பனத்திற்கு எதிராக தமிழ் தேசியம் எதுவும் பேச மாட்டார்கள். அதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை. ஜனகன மனவில் உள்ள திராவிடத்தை அவர் மாற்ற தேவையில்லை என்கிறார். கழகங்கள் இல்லாத தமிழகம் அண்ணாமலை, திராவிடம் இல்லாத தமிழகம் சீமான். இரண்டயும் சேர்த்தால் அதுதான் பாஜக சீமான் இடையிலான உறவு. பேசுவது எல்லாம் சாதி அரசியல். இடஒதுக்கீடு எல்லாம் பெரியார் தரவில்லை, ஆனைமுத்து கொடுத்ததாக தெரிவிக்கிறார். பாஜக இதே அரசியல் தான் செய்யும்.

பெரியார் நீண்ட பார்ப்பனிய எதிர்ப்பு போராட்ட மரபின் தொடர்ச்சி ஆவார். கருத்தியல் ரீதியாக சொல்லிக் கொண்டு இருந்தவர்களை நடைமுறையில்  போராட்டங்கள் மூலம் செய்து காட்டியவர் பெரியார். அவரை விமர்சிக்கும் சீமான் போன்ற நபர்கள் பைத்தியம் என்பதை முதலில் தெரியப்படுத்த வேண்டும். வ.உ.சி கடிதம் குறித்து சீமான் பேசியுள்ளார். வ.உ.சியின் கடைசி நாட்கள் மிகவும் துயரமானது. அவருக்கு உதவிய நீதிபதி வாலசின் நினைவாக, அவரது மகனுக்கு வாலேஸ்வரன் என பெயர் வைத்தார். அவர் குறித்து பேசுவதற்கு சீமானுக்கு என்ன தகுதி உள்ளது?. மக்களின் பொய்யான தகவலில் இருந்து உணர்ச்சிகளை தூண்டுவது. தமிழ்நாடு 1983 முதல் ஈழத்திற்காக போராடியது. 2008ல் தான் அவருக்கு ஈழப் போராட்டமே தெரிகிறது. 2008ல் பிரபாகரனுக்கு தெரிந்த உடனே சீமானை கூப்பிட்டு தமிழ் தேசியத்தை கொடுத்துவிட்டார். அதுவரை அவருடன் இருந்த தலைவர்கள் எல்லாம் பிரபாகரன் கண்ணுக்கு தெரியவில்லை. இதை வழி மொழிய நிறைய தமிழ் தேசியவாதிகள் இருந்தனர். கலைஞரை இனப்படுகொலைவாதி என்று கூறுகிறார். ஆனால் இனப்படுகொலையை ஆதரித்த ஜெயலலிதா, அதிமுகவை ஆதரிக்க செய்கிறார். தங்களது அரசியலுக்கு தெலுங்கர்கள், கன்னடர்களை பலியாக்குவது சீமானின் அரசியல். சகல வேலைகளுக்கும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவது அதுதான் அவர்கள் திட்டம். ஒவ்வொரு நபருக்கும் பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவரது டிசைனை பொதுமக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்ய விடாமல் வைக்க சிலர் வேலைகள் செய்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ