நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் சிறைக்கு செல்வது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான பாலியல் வழக்கின் பின்னணி குறித்தும், இந்த வழக்கில் அவரது ஆவேசமான செயல்பாடுகளுக்கான காரணங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர் காணலில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருந்தபோதும் போடாத வழக்கை இப்போது ஏன் அவசரமாக விசாரிக்கிறீர்கள் என்று
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்கிறார். ஜெயலலிதா ஏன் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை, சீமான் திருமணம் செய்துகொண்டிருந்தார். வழக்குப் போட்டால் சிறைக்கு செல்வோம் என்ற அச்சத்தில் சீமான், அதிமுவிடம் சென்று சமரசம் செய்துகொண்டார். இதனால் நடிகை பாலியல் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாகவே சீமான் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்படவில்லை. இப்போது நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. இது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி விசாரணை நடைபெறுகிறது. முதலில் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று வீரவசனமாக சொன்ன சீமான், மாலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளாது. அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும் தற்போது செல்கிற அரசியல் நகர்வுகளையும் சட்ட நகர்வுகளையும் பார்க்கும்போது கைது செய்வது போன்று தெரியவில்லை. சீமான் ஏன் தற்போது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் இவ்வளவு சவால் விடுகிறார் என்றால்? அவர் மத்திய ஆளும் கட்சிக்கு அரசியல் அடியாளாக மாறிவிட்டார். திமுகவை மட்டுமே எதிர்க்க வேண்டும். பெரியாரின் பெயரை கெடுக்க வேண்டும். பிரபாகரனின் பெயரை கெடுக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சீமான் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க முயற்சிக்கிறார் என்று நாம்தான் முதன் முதலில் வெளிப்படுத்தினோம். சீமான் ஆர்எஸ்எஸ் கும்பலிடம் காசை வாங்கி கொண்டு பெரியாரை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிவிட்டு, இறுதியில் பிரபாகரன் வாழ்க என்று கூறுவார். இதனால் பெரியாரிய இயக்கத்தினர் பிரபாகரனை விமர்சிப்பார்கள். இருரையும் விமர்சிக்கத்தான் அவர் காசு வாங்கினார் என்பதை வெளிப்படுத்தினோம்.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்க உத்தரவிடுகிறது. இதில் தமிழக அரசோ, முதலமைச்சரோ யாரும் இந்த வழக்கை போட சொல்லவில்லை. வழக்கை முடித்து வைக்கக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில்தான் காவல்துறையை நீதிபதி கண்டிக்கிறார். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்துதான் காவல்துறை விசாரிக்கிறது. 3 மாத கால அவகாசம் உள்ள நிலையில் இப்போதே ஏன் விசாரிக்கின்றனர் என சீமான் கேள்வி எழுப்புகிறார். அவர் விருப்பப்பட்ட நாளில் சென்று காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள சீமானிடம், என்று விசாரணை நடத்த வேண்டும், எப்படி விசாரிக்க வேண்டும் என்பது எல்லாம் காவல்துறையின் முடிவு. சீமான் விவகாரத்தில் காவல்துறை சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சீமான் எதற்காக அடித்துக்கொண்டு காவல்துறை விசாரணைக்கு ஆஜராகினார் என்றால்? அவரது வீட்டில் காவலரை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றதை பார்த்துவிட்டுதான். முன்னாள் ராணுவ வீரர் என்றபோதும் தன்னுடைய பாதுகாப்பிற்காக வாங்கி வந்த துப்பாக்கியை சீமானுக்கு பாதுகாப்புக்கு வைத்திருந்தீர்கள் என்றால் நடவடிக்கை பாயத்தான் செய்யும். இந்த வழக்கில் சீமான் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். நடிகைக்கு கருக்கலைப்பு செய்தபோது கணவர் என்ற ஸ்தானத்தில் சீமான் கையெழுத்து போட்டுள்ளார். மேலும், அவருடன் வீடியோக்களும் போட்டுள்ளார். எதற்காக உச்சநீதிமன்றம் செல்கிறார் என்றால் அங்கே லாபி செய்து வழக்கை தள்ளுபடி செய்ய முயற்சிக்கிறார். அதனால் இங்கே உள்ளவர்களை பிடித்துப்பார் என்று மிரட்டினார். காவல்துறை நடவடிக்கையை பார்த்துவிட்டு விசாரணைக்கு ஆஜராகினார்.
இந்த வழக்கில் 6,7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருப்பத்துடன் தான் இருவரும் சேர்ந்து இருந்தோம், மனம் ஒத்து போகாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சீமான் சொல்கிறார். சீமான் திருமண ஆசை காட்டி நடிகையை ஏமாற்றி உள்ளார். சீமான் வெளிப்படையாக 14 ஆண்டுகளுக்கு முன்பு பழகினோம். தற்போது பிரிந்துவிட்டோம். சட்டப்படி அவருக்கான இழப்பீடு வழங்கிவிடுகிறோம் என்று சொல்லி முடித்துவிடலாம். ஆனால் அதை செய்யாமல் ஏமாற்றியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட நடிகை யார் என்றே தெரியாது என்று சொன்னார். பின்னர் திரைத்துறையில் தெரியும் என்றார். அதற்கு பிறகு வேலைக்காரி போன் செய்து அழுதார் என்கிறார்.
வீரப்பனின் மகள் போன்ற அப்பாவி பெண்களை சீமான் ஏமாற்றி கட்சியில் சேர்த்துள்ளார். அவர் எதற்காக அழுகிறார் என்றே தெரியவில்லை. சீமான் எதற்காக பிளான் செய்கிறார் என்றால் அந்த பெண்ணை இறக்கிவிட்டால் வீரப்பனை எல்லோரும் விமர்சிப்பார்கள். மக்கள் திரைப்படத்திற்கு செல்லும்போது ஆபாசமான காட்சிகள் வந்தால் வேறு வழியின்றி பொறுத்துக்கொள்வார்கள். அதுபோல் தான் சீமான் அவதூறாக பேசியபோது அந்த பெண்கள் பொறுத்துக்கொண்டனர்.
திமுக அரசு அனைத்து விவகாரங்களையும் மிகவும் மென்மையாக கையாண்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டு உள்ளது. மற்றொருபுறம் ஜனநாயக ரீதியாக அப்படித்தான் போகும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தீர்ப்பு நாளில், வழக்கு விசாரணை முடிந்து திரும்பிவிடலாம் என ஏமாற்றி பரப்பன அக்ரஹார நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். அதேபோல் தான் தீர்ப்பு நாளில் சீமானுக்கு நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வளவு நாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலக பார்த்து இருப்பீர்கள். 2026ல் நாம் தமிழர் கட்சியில் இருந்து சீமானே விலகிவிட்டார் என்று செய்தி வரும் பாருங்கள். 2026ல் அவரே கட்சியை விட்டு விலகிவிடுவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.