யூஜிசி மூலமாக உயர்கல்வியை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்ள பாஜக முயற்சிப்பதாகவும், அதனை திசை திருப்பவே சீமான் பெரியார் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும் தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சீமானின் தொடர் அவதூறுகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தோழர் மருதையன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டை பெரியார் பிறந்த மண் என்று பெருமையாக பேசுகிறோம். சீமான் அவதூறு பரப்பியபோது எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. பெரியாரை தனது கொள்கை வழிகாட்டியாக கூறிக்கொள்ளும் விஜய் கண்டிக்கவில்லை. பெரியார் இயக்கத்தின் கருத்தியல் ரீதியான செல்வாக்கு என்பது மக்களிடம் குறைவாகவே உள்ளது. மற்றபடி சாமிகும்பிடுபவர்கள், கோவிலுக்கு செல்பவர்கள் பெரியாரை மதிக்கிறார்கள் என்றால், அது சுயமரியாதை இயக்கம், சமூகநீதியால் பெரியார் மீது ஏற்பட்டதாகும். அதிமுக உருவானபோது அது எம்ஜிஆர் ரசிகர் மன்றம், அவர்களால் பெரிய தாக்கம் ஏற்படாது என்று கருதியவர்கள் உண்டு. அதன் பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கிடாய்வெட்டு தடை சட்டம், அயோத்தி கர சேவைக்கு ஆட்கள் அனுப்புவேன் என்றார், ராமர் கோவிலை அங்கே கட்டாமல் எங்கே கட்டுவது என்றார், பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்றெல்லாம் சொன்னவர். இதெல்லாம் அதிமுகவில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்போது பெரியார் குறித்து பேசியபோதும், அவர்களுக்கு சலனமும் ஏற்படவில்லை. இதேபோல் விஜய், விஜய் ரசிகர்களுக்கும் எந்த சலனமும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் இப்படி பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். அவர்களை தன்வயப்படுத்த சீமான் முயற்சிக்கிறார். ஹெச்.ராஜா இப்படி பல முறை பேசி எடுபடாதது, தற்போது சீமான் பேசும்போது எடுபடுகிறது.
2009 இனப்படுகொலைக்கு பின்னர் கலைஞர் மீதான குற்றச்சாட்டு என்பது அளவுக்கு அதிகமாக கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் 23 நாடுகள் இணைந்து தொடுத்த யுத்தம் அது என ராஜபட்சே சொன்னார். ஆனால் ஒரு மாநில அரசாக இருந்து கொண்டு கலைஞரால் இதை எப்படி போரை தடுத்திருக்க முடியும் என்கிற உண்மையை இன்று எல்லோரும் பேசு கிறோம். ஆனால் அன்று யாரும் பேசவில்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஈழத்திற்காக பலவற்றை செய்ததாக சொல்கிறோம். ஆனால் விடுதலைப்புலிகளுக்காக 2 முறை ஆட்சியை இழந்தது திமுகதான். 1990ல் சூளைமேட்டில் ஈபீஆர்எல்எப் கொலைக்காக ஆட்சி கலைக்கப்பட்டது. ராஜிவ் கொலையின்போது, அந்த குற்றச்சாட்டு திமுக மீது சுமத்தப்பட்டு தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த கொள்கைக்காக இடையிறாது நின்றவர்களை கெட்டவர்கள் ஆக்கி, ஜெயலலிதா ஈழத்திற்காக பாடுபட்டவர் என்ற மனச்சான்று இல்லாமல் உயர்த்தினார்கள். அதன் விளைவுகள் எல்லாம் சேர்ந்து இன்று அந்த அரசியலை சீமான் பேசுகிறார். இப்போ பேசும்போது நீங்கள் அன்று கூட இருந்தீர்கள் என்று அவரால் சொல்ல முடிகிறது.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. நாம் கடந்த காலத்தில் என்ன தவறுகள் இழைத்தோம் என பார்க்க வேண்டும். விஜய் பெரியாரை உயர்த்தினால் அதையும் வரவேற்போம் என்கிறோம். இப்படி பொதுவாக பேசுபவர்கள் உள்ளனர். அது தவறு. பெரியார் படத்தை வைத்தால், விஜய் பெரியாரை மதிக்கிறார் என்று அர்த்தம் அல்ல. பிராபகரன் படத்தை சீமான் வைத்திருப்பது போன்றதுதான் அது. எந்த கோரிக்கைக்காக அவர்கள் பேசினார்கள், போராடினார்கள் என்பதுதான் முக்கியம். படத்தை வைத்தால் போதும் என்கிற அளவுக்கு தமிழ்நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்து போய் விட்டது. எழுத்தறிவு இல்லாத அந்த காலத்தில் தமிழர்களை படத்தை வைத்து ஏமாற்ற முடியாது. திமுக படத்தை வைத்தா காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசியல் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று யோசித்து பார்க்க வேண்டும். சீமான் ஒன்றும் எதிர்கொள்ள முடியாத நபர் அல்ல. நாம் தும்பை விட்டுவிட்டதால், இப்போது வாளை பிடிக்கிறோம். தமிழ்நாட்டில் ஒப்பீட்டு அளவில் கடந்த 5, 6 ஆண்டு காலத்தில் பெரியாருக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அதனை உருவாக்கியதற்காக சிறப்பு மோடி, ஹெச்.ராஜாவைதான் சாரும். அவர்கள் பேசியதன் எதிர்வினையாகதான் இளம் தலைமையினர் பெரியார், அம்பேத்கர் குறித்த நூல்களை வாசிக்க தொடங்கியுள்ளனர். அதனால்தான் பெரியார், அம்பேத்கர் குறித்த நூல்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை நாம் முன்பே செய்திருக்க வேண்டும்.
சீமான் பேசும் அரசியல் என்பது பாசிச அரசியல். அவர் அண்டை இனங்களான தெலுங்கு மக்கள், கன்னட மக்கள், மலையாளிகளை எதிரிகளாக காட்டுகிறார்கள். தமிழ் தேசியத்திற்கு உரிமைக்கு எதிராக உள்ளது டெல்லியில் உள்ள இந்து தேசியம். திராவிடம் என்ற ஒன்று இல்லை என ரவி பேசுவதைதான், சீமானும் பேசுகிறார். இந்து தேசியத்தை எதிர்த்து பேசுவதற்கு பதிலாக அவர் திராவிடத்தை எதிராக நிறுத்துகிறார். இது மக்களிடத்தில் செல்வாக்கு பெறாது. ஆனால் சீமான் சேர்த்து வைத்துள்ள கூட்டம் என்பது திராவிட எதிர்ப்பு அரசியலை அடிப்படையாக கொண்டது. அவர்கள் இந்த பிரபாகரனுடன் உள்ள படம் போலியானது என்று நிரூபித்தாலும் திருந்தமாட்டார்கள். சீமான் பின்னால் செல்லும் கூட்டம் என்பது முட்டாள் கூட்டம் மட்டும் அல்ல. அவர்கள் இதனால் பிழைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் தான் செல்கிறார்கள். அதனால் அவர்களை ஒன்றும் அறியா பிள்ளைகள் என்று கருத வேண்டாம். கடந்த காலத்தில் இருந்து மறு ஆய்வு செய்து பார்த்து, இதனை பேச வேண்டும்.
இன்று மத்திய பாஜக அரசு யூஜிசி மூலமாக உயர்கல்வியை மொத்தமாக கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. அதை பற்றிதான் நாம் முக்கியமாக பேச வேண்டும். எதிர்கால தலைமுறை இனி மத்திய அரசு சொல்லும் சிலபசைதான் படிப்பார்கள். அவர்கள் சொல்லும் ஆட்கள் தான் துணைவேந்தர். கல்லுரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அவர்கள் கைகளுக்கு சென்றுவிடும். இடைநிற்றலை ஊக்குவிப்பது என பல பயங்கரமான திட்டங்கள் அதில் உள்ளது. அதை பற்றி பேச வேண்டிய நிலையில் நாம் பெரியார் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படி பட்ட நிலையை உருவாக்கியவர் சீமான். இதில் இருந்து திசைதிருப்ப பெரியாரை துருப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார். அதை நாம் புரியவைக்க வேண்டும். அப்படி புரியவைக்காவிட்டால் சீமானை நாம் வீழ்த்த முடியாது.
சீமான் எந்த மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்பு ஆஜரான சீமான், நான் போராட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்று கூறினார். ஆனால் பல வழக்குகளை எதிர்கொண்ட இடதுசாரி வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் போன்றோர் நாங்கள்தான் போராட்டத்தை நடத்தினோம் என்றனர். அப்போது, அதை சொல்லக் கூட தைரியம் இல்லாத கோழை சீமான். அவர் பெரியார் பற்றி பேச தகுதி இல்லை. இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நிகழ்கால அரசியலில் பாஜகவின் கருவியாகத்தான் சீமான் செயல்படுகிறார்.
நாம் தமிழர் கட்சியை சோ, குருமுர்த்தியோ தனக்கு வாங்கித் தரவில்லை என்கிறார் சீமான். ஆனால் இதனை நாங்கள் சொல்லவில்லை. இதை பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்ற சி.ப.ஆதித்தனாரின் உறவினர்தான் முகநூலில் எழுதியுள்ளார். இதை சீமான் என்றைக்கும் கேள்விக்கு உள்ளாக்கியது இல்லை. அவர் செய்யும் அரசியலில் இருந்தே அவர் பாஜகவின் கையாள் என்பதை புரிந்து கொள்ளலாம். இன்று அவர் பேசுவதை எல்லாம் ஆதரித்து துணை நிற்பவர்கள் ஹெச்.ராஜா, அண்ணாமலை, பாஜக போன்றோர்தான். அதை வைத்து நாம் புரிந்துகொள்ளலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.