தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு பதில் அளித்து பிரபல சேனலுக்கு பழ.கருப்பையா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெரியாரின் இயக்கத்திற்கு பின்னர் தான் தமிழர்கள், தங்களை தமிழர்களாவே உணர்ந்தனர். திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை அவர் உருவாக்கியது வரலாற்றில் மிகப்பெரிய பணி. இந்தியா இனவழியாக பிரிக்கப்படுகிறது. அதை புரிந்துகொள்ள தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கு நேரமில்லை. நீங்கள் கல்லில் மோதி தலையை உடைத்துக்கொள்வதும், இந்த முட்டாள்களுடன் பேசுவதும் ஒன்றுதான். தாய், சகோதரியுடன் உறவு கொள் என்று பெரியார் சொன்னதாக சொல்லும் சீமான், அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். பெரியாரின் நூல்கள் தற்போது பொது உடைமை ஆகாத நிலையிலும், சீமான் எதை பார்த்து பெரியார் அப்படி பேசினார் என்று தெரிந்து கொண்டார்? என சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் யூகித்து இதுபோன்று சொன்னாரா?. நீயாக ஒன்றை யூகித்து பேசுகிறாய். பெரியாரை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இதனை செய்கிறார்.
சீமான் இப்படி சொல்வதற்கான காரணம் என்ன என்று யோசித்து பார்த்தபோது, ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது. இந்துத்துவம் காந்தி காலம் வரை தலைதூக்க வில்லை. அதன் பிறகு தலை தூக்கிவிட்டது. பெரியார் கடவுள் மறுப்பு, பிராமணிய எதிர்ப்பை முன்வைத்தார். இப்போது மோடியின் தலைமையில் இந்துத்துவா தமிழ்நாட்டிற்கு உள்ளே வருகிறது. முன்பு இங்கிருந்த 3 சதவீதம் பேருடன்தான் மோதிக் கொண்டிருந்தான். தற்போது பிராமணத்துவம் வடநாட்டில் ஊன்றி தலைமை ஏற்றுவிட்டதால், மைய அரசு துணையோடு சேர்ந்து வருகிறான். பெரியார் சந்தித்த பார்ப்பன எதிர்ப்பை விட இன்றைய எதிர்ப்பின் தன்மை கூடுதலானது. பெரியார் ஒரு சமூகத்துடன் மட்டும்தான் மோதினார். ஆனால் இன்று அவர் பணம், அரசியல் அதிகாரம் என அனைத்து ஆயுதங்களுடன் வருகிறான். ஏன் வடமாநிலங்களில் இந்துத்துவா ஊடுருவ முயன்றபோது, இங்கே ஊடுருவ முடியவில்லை என யோசிக்கின்றனர்.
இதுவரை ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு பிராமணர்கள் தான் தலைவராக இருந்தார்கள். அவர்கள் இருக்கும்போது தமிழர்களிடம் செல்ல முடியாது என அக்கட்சியினருக்கு தெரிந்தது. இதனால் தான் அவர்கள் தமிழரான அண்ணாமலையை பிடித்தார்கள். பார்ப்பனர் அல்லாதவரை தலைவராக போட்ட பின்னரும், பாஜக தள்ளாடுகிறது. எதாவது திராவிட கட்சியை பிடித்து ஆட்சிக்கு வரலாம் என மத்திய அரசை வைத்து மிரட்டுகிறார்களோ தவிர, அவர்கள் தனியாக வளர முடியாததற்கு காரணம் இங்கே வேறு ஒரு கருத்து உள்ளது. பெரியாரின் கருத்துக்கள் ஆழமாக இந்த மண்ணில் வேரூன்றி உள்ளதால் அண்ணாமலை, தமிழிசை, எல்.முருகன் போன்ற பார்ப்பனர் அல்லாதவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டுவந்த போதும் கட்சி வளரவில்லை. தமிழர்களுக்கு, தாங்கள் தமிழர் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. திராவிடம் என்ற சொல்லின் மீதும், பெரியார் மீதும் இவ்வளவு பகை என்றால், முதலில் ராமானுஜரை பகை. அவர் நாலாயிரம் திவ்விய பிரபந்தத்தை திராவிட வேதம் என்று சொல்லுகிறார். இந்த சொல்லை அவர் எங்கிருந்து கண்டுபிடித்தார்?
வ.உ.சி. இவருக்கு பாட்டன், வேலுநாச்சியார் இவரது பாட்டி என்கிறார். அப்போது நாமெல்லாம் யார்? இவர் மட்டும் தான் தமிழரா? ராமானுஜர் திராவிட வேதத்தை முன்னால் வைத்தார். ஆரிய வேதத்தை பின்னால் வைத்தார். திருஞானசம்பந்தரை, திராவிட சிசு என்று பழிக்கிறார் ஆதி சங்கரர். பிராமணராக பிறந்து அவர்களது அத்வைத மதத்தை ஆதரிக்காமல், சைவ சமயத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறான். இவன் ஆரியனாக பிறந்த திராவிட சிசு என்று சாதி மாற்றம் செய்துவிட்டார் ஆதிசங்கரர். இதெல்லாம் சீமானுக்கு தெரியாது. அரசியலில் ஆளுங்கட்சியாகாமல் பணம் அடிக்க சீமானுக்கு தெரிந்திருக்கிறது. சீமானிடம் அறியாமை காரணமாக கூட்டம் சேர்கிறது. அவர்கள் தெளிவு தெளிவு பெற சீமானிடம் இருந்து வெளியேறுகின்றனர். அது நல்லது. பெரியார் சொல்வதை விடுங்கள். ராமாநுஜர், ஆதி சங்கரர் போன்றோர் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறாரே அதற்கு என்ன சொல்கிறார் சீமான்.
பின்னால் கால்டுவெல் ஆராய்ச்சி செய்து, நூல் வெளியிட்டு வரலாற்றுப்பூர்வமாக திராவிடம் என்பதை மெய்ப்பிக்கிறார். பெரியார் அதனை திராவிட இயக்கமாக்கி, திராவிட நாடு என்றும், நீ தமிழன் என்றும் அவர் சொன்ன பிறகுதான் இந்த கருத்து தமிழ்நாட்டில் ஊடுருவுகிறது. முதன் முறையாக மொழி, இன வழியாக சிந்திக்கின்ற பாங்கை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் பெரியார். ஜெயலலிதா இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என சீமானை ஒரு கூலி ஆளாக பயன்படுத்தினார். அதுபோல பாஜக பெரியாரின் பிம்பத்தை தமிழ் மண்ணில் அழிக்காவிட்டால், நாம் இங்கே நுழைய முடியாது. அதற்கு சீமானை பயன்படுத்துகின்றனர். பெரியாரின் போராட்டம் காரணமாகத்தான் காங்கிரசுக்கு பார்ப்பனர் அல்லாத தலைவர் நியமிக்கப்பட்டார். அதே அடிப்படையில் தான் பாஜகவுக்கு தமிழிசை, அண்ணாமலை போன்றோரை தலைவராக போட்டு பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. தற்போது தமிழ் என்று பேசிக்கொண்டு ஏமாற்றிக்கொண்டு திரிகிற சீமானை பிடித்து, அவனை வைத்து பெரியாரின் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பெரியார் தமிழர்களுக்காக பாடுபட்ட முன்மாதிரியான தலைவர். அவரை பிராமணனோ, அண்ணாமலையோ சொன்னால் அந்த இழிவு ஒட்டாது. அதனால் பாஜகவின் நிறத்தை பெறாத தனிக்கட்சி வைத்திருக்கும் ஒருவரை அரசியல் கூலியாக மாற்றி, அவர் மூலமாக பெரியாரின் பிம்பத்தை உடைக்கும் வேலையை செய்தால் அது நடக்கும் என்று நினைத்தார்கள். பெரியாரோடும், அவரது கருத்துக்களோடும் மோதி எதிர் நிற்பதற்க சீமானுக்கு எந்த அறிவும் கிடையாது. பெரியாரின் வாதங்களை திரும்ப திரும்ப பேசி அதை உடைப்பதற்கான அறிவும் அவருக்கு கிடையாது. அதனால் அவர் பேசாததை பேசியதாக சொல்லி, அவதூறுகளை பரப்பி அவரது பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னார் என சீமான் கூறுகிறார். பெரியாரின் கருத்தால் நாம் யாரும் வருத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படவில்லை. அப்படி ஏன் சொன்னார் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. பெரியாரின் கருத்து குறித்து விளக்கம் அளித்த அண்ணா, ஒரு பூனை தனது குட்டியை கவ்வுகின்ற விதம் வேறு, அதே பூனை எலியை கவ்வுகின்ற விதம் வேறு என்று சொன்னார். எங்களை பெரியார் சொன்னது பூனை குட்டியை கவ்வுவது போன்றது. அதில் பல் பதியாது. ஆனால் ஆரியத்தை அவர் பேசுவது எலியை கவ்வுவது போன்றது என்று வேறுபடுத்தி காட்டினார்.
வள்ளலாரையும், பெரியாரையும் ஒப்பிடுவது மிகவும் தவறானது. வள்ளலாரையும், கார்ப்பரேட் சாமியார்களையும், மடாதிபதிகளையும்தான் ஒப்பிட வேண்டும். நாம் இந்து மதம் அல்ல, சைவ மதம் என்று சொல்ல எந்த மடாதிபதிக்கும் தெரியவில்லை. அவர்கள் செய்ய வேண்டிய பணியை, பெரியார் செய்தார். அப்படி சொல்லாவிட்டால், நாமும் வடநாட்டினர் போல இருந்திருப்போம். தமிழ்தேசியம் என்றும், தமிழ் என்றும் சொல்லித்திரிகிற சீமான் போன்ற ஒருவர்தான் கூலி ஆளாக கிடைப்பார்கள். இவரை அரசியல் கூலியாக வைத்து பெரியாரின் பிம்பத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவரது வாதங்களோடு எதிர்த்து மோதுகின்ற ஆற்றல் சீமானுக்கு இல்லாததால், பொய்மையின் மீது அந்த வாதங்களை கட்டமைக்கிறார்கள். பெரியார் சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறி, இது போன்ற மோசமான நபர் தான் பெரியாரா? என்ற கேள்வி வைக்கப்பட்டால் பிறகு இந்துத்துவா நுழைய வசதியாக இருக்கும் என சீமானை வைத்துள்ளார்கள். உங்களுக்கு நோக்கம் அரசியல் நடத்துவது இல்லை. பணம் சம்பாதிப்பது, வசதி தேடிக்கொள்வது தான். சினிமா சரிபடவில்லை, அரசியல் நல்ல லாபம் தருகிறது என்றுதான் இங்கு வந்தார். அரசியலை வணிகமாக ஆக்கிவிட்ட தன்மையின் காரணமாக தமிழ் என்று பேசுகின்ற ஒருவனை வைத்து, தமிழ் மொழி, இனம் என்று பேசிய ஒருவரின் உருவை சிதைக்க வேண்டும்.
தந்தை பெரியார் திருவள்ளுவரை அவதூறாக பேசியதாக என்று சீமான் சொல்கிறார். திருக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார். திருவள்ளுவரை வெல்ல முடியாதவர்தான் பெரியார். ஆனால் அவர் திருவள்ளுவரின் பழமையான கருத்துக்களோடு மோதுவார். தமிழர்களுக்கு இருப்பதற்குள் மிகச்சிறந்த வேதம் திருக்குறள்தான் என்று சொன்னவர்தான் பெரியார். பெரியார் திருக்குறளை விமர்சிக்கலாம். ஏன்னெறால் அவர் தமிழர்களின் மேம்பாட்டிற்காக அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால் சீமானுக்கு அதனை சொல்ல தகுதி இல்லை. இவற்றை எல்லாம் தெரிந்துதான் சீமான் பெரியார் மீது அவதூறு பரப்பச் செய்கிறார். சீமான் இப்போது பாஜகவின் கைகளில் உள்ளார். தன்னையே விற்றுக்கொள்கிற ஒரு நபர்தான் சீமான். பெரியார் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் செய்துள்ள அளப்பறிய தொண்டு இனம் விழிப்படைவதற்கு காரணமாக இருந்தது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.