வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த சீமானின் அருவருக்கத்தக்க அவதூறு பேச்சின் பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு, பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஈரோடு இடைத்தேர்தலில் திமுக – நாம் தமிழர் கட்சிகள் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த முறை பெரியார் குறித்து சீமான் அவதுறாக பேசியுள்ளார். கடந்த முறை ஈரோடு இடைத் தேர்தலில் அருந்ததியர் சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். ஈரோடு பெரியார் மண், பெரியார் குடும்பம் வசிக்கும் தொகுதி ஈரோடு கிழக்கு. அங்குள்ள மக்கள் என்ன ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியவில்லை. பெரியார் பற்றி சீமான் பேசியது, மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று நினைத்தால் சீமான் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவார். ஆனால் அவர் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற மாட்டார்.
பெரியார் குறித்து சீமான் அவதுறாக பேசியது என்பது பாஜகவின் அசைன்மெண்ட். பாஜகவை எதிர்க்கிறேன் என்றுதான் அவர் வெளியே சொல்வார். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும், சீமானை கண்டிக்கவில்லை. பெரியார் பற்றி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எவ்வளவோ பேசி உள்ளனர். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்கள் பொன்னையன் போன்றோர் கூட ஏன் இது குறித்து பேசவில்லை. பெரியாரை அடித்து காலி செய்வது என்பது பாஜகவின் அசைன்மெண்ட். பெரியாரை கையாளுவதில் அதிமுகவுக்கு குழப்பம் உள்ளது. அதனால் அவர்கள் கண்டனம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. கேரளாவில் நாராயண குருவையோ, பஞ்சாபில் பகத் சிங்கையோ, குரு கோவிந்த் சிங்கையோ, உத்தர பிரதேசத்தில் கன்ஷிராமையோ கேவலமாக பேசிவிட்டு நீங்கள் பொதுவெளியில் நடமாடவே முடியாது. ஆனால் தந்தை பெரியார் குறித்து ஒருவன் கேவலமாக பேசுகிறான். அதை பார்த்துக்கொண்டு திமுக சும்மாதான் இருக்கிறது. திமுக அடிக்க வேண்டும் அல்லவா, ஆனால் தபெதிகதான் அடிக்கிறது. பெரியாரை பேச அவருக்கு யார் உரிமை கொடுத்தது. அவர் பேசியது பொய் அல்லவா?. அதிமுக அறிக்கை கூட விடவில்லை, விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் அறிக்கை வெளியிடவில்லை. ஆனால் இதை கண்டித்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக அறிக்கை வெளியிடுகிறது.
அதிமுகவுக்கு ஸ்டாலின் சொல்கிற திராவிட மாடல் என்ற வார்த்தையை கேட்டால் ஒவ்வாமை. சரி திராவிட மாடல் என்ற சொல்லாடலை எதிருங்கள். ஆனால் பெரியார் சாதி பெயர் அற்ற சமுதாயத்தை கொண்டு வந்தவர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, பெண்கள் விடுதலை என்பது திராவிட இயக்க சாதனையாகும். இது அதிமுக இல்லாமல் நடந்து விட்டதா?. பெரியார், அண்ணா இல்லாமல் இது நடந்து விட்டதா? இப்படி ஒருவன் பேசும்போது சும்மா இருக்கலாமா? சீமான் பாஜக சொல்லி பேசுகிறார். இதனை பாஜக அந்த காலத்தில் இருந்தே செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அது எடுபடவில்லை. தற்போது சீமான் பேசினாலும் அது எடுபடாது. பாஜகவுக்கு இன்னொரு பிரச்சாரகர் கிடைத்துள்ளார் அவ்வளவுதான். முன்பு துக்ளக் சோ இருந்தார். அப்புறம் குருமூர்த்தி வந்தார். பின்னர் ஆனந்த விகடன் அந்த ரோலை எடுத்தனர். ஆட்கள் மாறுகின்றனர். ஆனால் தத்துவம் மாறவில்லை. இப்போ பெரியாரை விமர்சிக்கும் சீமான், அன்று பெரியாரை புகழ்ந்து பேசியவர் தான்.
சீமான் வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் நிதி வாங்குகிறார். அதில் நிறைய பேர் சட்ட விரோதமான தொழில் செய்பவர்கள். அந்த நிதியின் விவரங்கள் எல்லாம் மத்திய அரசிடம் உள்ளது. அவர்கள் நினைத்தால் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்து, வெளியவே வர முடியாத வகையில் சிறையில் அடைத்து விடலாம். உபா சட்டத்தில் அடைத்தால் அவர் வெளியே நடமாட முடியாது. சமீபத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. அப்போது, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட சிலர் வீடுகளில் தான் நடைபெற்றது. ஆனால் சீமான் வீட்டில் சோதனை நடத்தி, வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தால் அவர் உபா சட்டத்தில் வாழ்நாள் முழுவதும் வெளியே வர முடியாது. அதனால் தற்போது அவர் பாஜகவின் குரலாகத்தானே ஒலிப்பார். சிறையில் இருப்பதை சீமான் விரும்ப மாட்டார். அதனால் பாஜக சொல்வதை அவர் பேசுவார். அவர்கள் பேசுவதை அவர் பேசுகிறார். சீமானின் முதலாளிகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இதற்கு அவர்கள் பயன்படுத்துவது தமிழீழ படுகொலைகளையும், மக்கள் செய்த உயிர் தியாகத்தையும் அதற்கான உரமாக பயன்படுத்தி சொகுசான வாழ்க்கை, சொகுசாக சொத்து சேர்த்தல் போன்ற வேலைகளில் சீமான் ஈடுபடுகிறார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியை போன்றே ஒரு கொடியை கொண்டுள்ள கட்சி செயல்பட முடியும்?. அப்படி செயல்படுகிறது என்றால் அது ஆளும் பாஜகவுக்கு எதிராக இருந்தால் அனுமதிப்பார்களா?. அப்படி அனுமதிக்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் சீமான் பாஜக சொல்வதை கேட்டு பேசுகிறார் என்பதுதான். திமுக கூட்டணியை இன்று வரை உறுதிபடுத்தி வைத்திருப்பது பாஜக எதிர்ப்பு தான். தமிழகத்தில் அந்த அளவுக்கு பாஜகவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது. மார்க்சிஸ்ட், விசிக, திக எல்லாம் பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ளன. அதனால் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமல், சீமான் வெளிநாட்டில் இருந்து பணம் பெற முடியாது. புலிகள் கொடி வைத்து கட்சியை நடத்த முடியாது. இதுபோன்று அவதுறுகளை பேசி சர்வைவ் ஆக பார்க்கிறீர்கள். இதுபோல பேசிய அண்ணாமலை எங்கே சென்றார். அண்ணாமலை இப்படி பேசி இருந்தால், எந்த கட்சி தலைவரும் அவருக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டார்கள். சீமானை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது. பெரியாரை பேசியவரை நடமாட விட்டது திமுகவினர் செய்த தவறு.
தந்தை பெரியார் 96 வயது வரை தியாகம் செய்து, இந்த மக்களுக்காக உழைத்தார். தனது சொத்துக்களை எல்லாம் அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கினார். மணியம்மை திருமணம் என்பது சொத்துக்களை முறைப்படுத்துவதற்காக நடைபெற்றது. அவர் மூத்திரப் பையை தூக்கிக்கொண்டு வலியோடு தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். பெரியாரின் கருத்துக்களில் முரண்பாடுகள் உள்ளன. நான் சொல்வதை நீ நம்பாதே, நீயே யோசித்துவிட்டு பேசு என்கிறார். பிராமணர்களில் விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்கும் முறை பெரியாரால் ஏற்பட்டது. சீமானுக்கு அரசியலில் வெற்றி பெற மாட்டோம் என நம்பிக்கை இழந்துவிட்டார். 8.2 சதவிகித வாக்கு சதவீதம் பெற்று மாநில கட்சியாகி விட்டது. ஆனாலும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை. இது தமிழக இளைஞர்களுக்கு கிடைத்த அடிதான் என்று சொல்லுவேன். தமிழீழ படுகொலை என்பது மிகப்பெரிய தவறு. அது யார் செய்தாலும் தவறுதான். அதற்காக சீமான் போன்ற ஒரு நபரை வளர்த்துவிடுவது ஈழ மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். அந்த மக்களின் உண்மையான பிரச்சினை என்பது போர்க்குற்றம். அது முன்னுக்கு வரமால், மற்ற விஷயங்கள் வருவது தவறு. தமிழ்தேசிய உணர்வு என்பது இருக்க வேண்டியது தான். ஆனால் நீங்கள் ஒரு தவறான நபரை ஹீரோ ஆக்கினீர்கள். ஆட்டை கடித்து, மாட்டை கடித்து தற்போது பெரியாரையும் கடித்துள்ளான். நீங்கள் வெறிநாயை வளர்த்தால், இதுதான் நடக்கும்.
சீமான் செய்தியாளர்கள் சந்திப்புக்கு செல்லும் செய்தியாளர்கள் விர்ச்சுவலாக மிரட்டப்படுகின்றனர். இதனை நல்லவர்கள் பார்த்துவிட்டு ஒதுங்கி செல்லக்கூடாது. அமர்பிரசாத் ரெட்டி, ஆருத்ரா கேசில் மாட்டுகிறார். அவனை கைது செய்ய முயற்சிக்கும் போது, என்னை கைது செய்ய முயன்றால் நான் பெரியார் சிலையை உடைப்பேன் என்றார். பெரியார் மீது கை வைத்தால் இலவச விளம்பரத்தில் நனையலாம் என நினைக்கின்றனர். இது ஆபத்தானது என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.