Homeசெய்திகள்கட்டுரைபாஜகவின் குரலாக மாறிய சீமான்... பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- எந்த சீமான் இப்படி பெரியார் மீது திடீரென பாய்கிறார். பெரியார் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான். அவர் மீது ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நல்ல விமர்சனங்கள் இருக்கும். அதை பெரியாரும் ரசித்தார். என் பேச்சை நீ கேட்க வேண்டும் என்று அவர் என்றும் சொன்னதில்லை. பெரியார் அப்படி பேசினார் என்று ஒரு நல்ல விஷயத்தை எப்போது வேண்டு மானாலும் நாம் கோட் பண்ணலாம். ஆனால் உரிய ஆதாரம் இல்லாமல் ஒரு தப்பான விஷயத்தை கோட் செய்வது என்பது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சீமான் போன்ற பல லட்சம் இளைஞர்கள் ஆதர்ஷபுருஷனாக கருதும் ஒரு நபர். அவருடைய இயக்கம் பதிவுபெற்ற கட்சியாக இருந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட சீமான் எப்படி ஒரு நபரை விமர்சிக்க வேண்டும். அது அவசியமா? என்று யோசிக்க வேண்டும். கட்சி தொடங்கியபோது பெரியாரை தன்னுடைய கொள்கை வழிகாட்டியாக அறிவித்தவர் சீமான். இப்போது விஜய் அந்த வார்த்தையை சொல்லும்போது அவர் மீது பாய்கிறார். அப்போ நீங்கள் யார். பெரியார் குறித்த புரிதல் பின்னர்தான் ஏற்பட்டதாகவும், அதனால் அவரை பேசுவது இல்லை என்றும் சீமான் சொல்கிறார். அவர் கட்சி தொடங்கியபோதே பெரியார் உயிருடன் இல்லை. அவரது எழுத்துக்கள் மட்டும் தான் இருந்தன. அதில் கிடைக்காத புரிதல், தெளிவு என்ன உள்ளது. நமக்கு இதில் தான் சந்தேகம் வருகிறது. அவர் பார்வையில் கொள்கை சார்ந்த அரசியல் பேசும் சீமான் தேவையில்லாமல் எதற்காக பெரியாரை இழுக்கிறார். 2 பேர் தான் பெரியாரை எதிர்ப்பவர்கள். ஒன்று பிராமணர்கள். 2வது பாஜகவினர். அவர் மதவாதத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்தவர்.

குடும்பத்திற்குள்ளேயே பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்வது என்பது பேசுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது. அது உண்மையா பொய்யா என்று பின்னால் பார்க்கலம். உங்களது நோக்கம் என்ன? அமைதியாக சென்று கொண்டிருக்கும் சமூகத்தில் எதை பற்ற வைப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள். 1973 டிசம்பர் 17 ஆம் தேதி பெரியார் இறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார். அந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சுக்களை புத்தகமாகவே போட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது என்பது அந்த புத்தகத்தின் பெயர். அந்த புத்தகத்தில் சீமான் சொன்ன கருத்துக்களை பெரியார் பேசியுள்ளார். சில இந்து கடவுள்களை குறிப்பிட்டு, அவர்களுடைய உறவுகளை சொல்லி எந்த புராணங்ளில் இருந்து சொன்னார்களோ, அந்த புராண கதைகளை எடுத்துச்சொல்லி இந்தமாதிரி உறவிகளுக்குள்ளேயே சில நடந்திருக்கிறது. அதை இப்படி நியாயப்படுத்து கிறார்களே இது சரிதானா? என கேள்வி பெரியார் எழுப்புகிறார். இது முறையற்றது என்றும் பெரியார் அந்த கூட்டத்திலேயே கேட்டுள்ளார். அப்படி சொன்ன பெரியாரை, சக குடும்பத்திற்குள் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் என்று சொல்ல என்ன ஆதாரம் உள்ளது. சீமானை ஓடோடி வந்து அண்ணாமலை பாதுகாக்கிறார். இங்குதான் சந்தேகம் எழுகிறது. இன்றைக்குள் ஆதாரத்தை வெளியிடுவேன் என்றார் ஆனால் வெளியிடவில்லை. அப்படி வெளியிடுவதாக இருந்தால் இந்த புத்தகத்தை தான் எடுத்து வர வேண்டும். அதை முழுசாக படித்தால் தெரியும். அவரே அவ்வாறு சொல்வது தவறு என்றுதான் சொன்னார். அந்த காலத்தில் புராணங்களில் உள்ள நம்பிக்கைகளை சொல்லி, ஒட்டு மொத்தமாக 10 சதவிகிதம் பேருக்கு கூட படிப்பறிவு இல்லாமல் வைத்திருந்தனர். அதனால்தான் பெரியார், கடவுளை சொல்லி உன்னை ஏமாற்றுகிறார்கள். நீ பத்திரமாக இரு என்று அறிவை புகட்டினார். அதற்கு இது போன்ற புராண கதைகளை எடுத்து பேசினாரே தவிர, எதையும் அவர்  நியாயப்படுத்த வில்லை.

திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி போதும்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்கின்றனர். ஆனால் பெரியார் அப்படி சொல்லவில்லை. இந்த தமிழ்த்தாயா உனக்கு கல்விதந்தது, காமராஜர் தான் கல்விதந்தார் என்று தான் பதில் கூறினார். இன்று பெரியார் போட்ட பாதையில் நடந்து ஒவ்வொருத்தரும் ஐரோப்பா, அமெரிக்காவிலும் இருக்கின்றனர். அவர்கள் ஜீன்ஸ் போட்டு வந்து அதே கோவில் பிரகாரத்தை சுற்றி வருகிறான். இது ஏதோ முரணாக இருக்கலாம். ஆனால் இதுதான் எதார்த்தம். பெரியாரால் வந்தோம், பெரியாரால் படித்தோம் என்று நன்றி அவன் மனதில் உள்ளது. சீமான் சொல்லிதான் பெரியாரை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இங்கு எவருக்கும் இல்லை. அவரவர் பெரியாரை அவர் அவர் பார்வையில் பார்க்கின்றனர். பெருந்தலைவர் காமராஜர் 10 ஆயிரம் பள்ளிகளை சில ஆண்டுகளில் தொடங்கினார். இதனை பாராட்டி விகடன் எழுதுகிறது காரியம் காமராஜர். காரணம் பெரியார் என்று. அவரை விமர்சிக்க வேண்டிய விகடனே, அவரை கொண்டாடியது. பெரியார் என்ன செய்தார், சமூகநீதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று சீமான் கேட்கிறார். குறைந்த பட்சம் அறிவு உள்ள எவனாவது அதனை காது கொடுத்து கேட்பாரா?. இன்று நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு யார் கொண்டுவந்தது. பெண்ணுக்கு சம உரிமை கொண்டுவர பாடுபட்டவர் பெரியார்.

இடஒதுக்கீடு கிடைக்க காரணமானவர் ஆனைமுத்து என்று தூக்கி கொண்டாடுங்கள் அதில் தவறு இல்லை. ஆனால் மற்றவர்களை கொண்டாடுவதற்காக பெரியாரை ஒதுக்குவது எப்படி நியாயமாகும். அப்போது தான் சந்தேகம் வருகிறது. உங்களுக்கு வேறு ஒரு அஜண்டா உள்ளது என்று. பாஜகவின் குரலை சீமான் ஒலிக்க வேணடிய அவசியம் என்ன?. இனியாவது அவரது கட்சிக்கு வாக்களித்தவர்களை முகம் சுழிக்க வைக்காத அளவிற்கு சீமான் நடந்துகொள்ள வேண்டும். அவரது பேச்சுக்களில் பல முரண்பாடுகள் உள்ளது. பிரபாகரனே சொன்ன பின்னர்தான் தான் பெரியாரை வெறுத்தேன் என்கிறார். அதே சீமான் மற்றொரு பேட்டியில், பிரபாகரனே தன்னிடம் சொல்லியுள்ளார். நாங்கள் செல்லும் பாதை பெரியார் வகுத்து தந்த பாதை என்று. நாங்களும் திராவிடர்கள் தான் என்று. இதில் எது உண்மை. பிரபாகரன் உங்களிடம் சொன்னது என்ன? இவை இரண்டுக்கும் ஆடியோ, வீடியோ ஆதாரம் உள்ளது. அதனால் தான் சீமானை போட்டு கிழிக்கிறார்கள். எதுக்கு இது நடக்க வேண்டும் இதன் நோக்கம் என்ன? அரசியலுக்காக எதையும் செய்யலாமா?

கலைஞர் - அண்ணாதுரை

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று சீமான் கூறுகிறார். அந்த பெரியாரை தலைவராக கொண்ட அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ், ஸ்டாலின் ஆகியோர் தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தினர். இந்த 57 வருட ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறதா? பின்தங்கி இருக்கிறதா?. சீமான் அவர் விரும்பும் 5 வட மாநிலங்களில் சென்று பார்க்கட்டும் அந்த மாநிலங்களை விட கண்டிப்பாக தமிழ்நாடு முன்னேறி இருக்கும். நாட்டிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. யார் போட்ட விதை என்று மனசாட்சி படி கேட்டுப்பாருங்கள். இடஒதுக்கீட்டால் கிடைத்த கல்வியால்தான் அந்த வேலைவாய்ப்பு கிடைத்து. இத்தனையும் தெரிந்து கொண்டு ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக பெரியார் போன்ற தமிழ்நாடு கொண்டாடுகின்ற ஒரு தலைவரை சீண்டிப்பார்ப்பது நேர்மை அற்ற செயல்.

சீமான் பெரியார் குறித்து அவர் திட்டமிட்டே அவதுறாக பேசியுள்ளார். ஏனெனில் அதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே சென்றார். ஏனென்றால் அதற்கு தயாராக அவர் வந்துள்ளார். சரி அப்போது தனக்கு புரிதல் இல்லாததால் பெரியாரை தப்பாக புரிந்து கொண்டு கொள்கை வழிகாட்டி என்று அறிவித்ததாக சீமான் கூறுகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இன விடுதலைக்கு உழைத்த பெரியார், ஈழ விடுதலைக்கு உதவிய எம்ஜிஆர் என்ற தலைப்பில் சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் சிறப்பு உரையாற்றினார். அப்போது, அவர்  தெரியாமல்  பெரியாரை பாராட்டி பேசி விட்டாரா அல்லது கண்ணை கட்டி, காதை பொத்தி பேசுவதற்காக அழைத்துச் சென்றனரா?. இன்று என்னிடம் அந்த நிகழ்ச்சிக்கான நோட்டீஸ் உள்ளது. சீமான் இன எழுச்சி மலர் என்று நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன விடுதலைக்கு பாடுபட்ட 64 பேரின் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் படம் தந்தை பெரியாருடையது. இந்த முரண்பாடு ஏன்? ஒரு 5 வருடம் கழித்து சரியான புரிதல் இல்லாமல், பேசிவிட்டேன் என சீமான் சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. திராவிட கட்சிகள் கொள்கையில் விட்டுக் கொடுத்ததும், முரண்பாடாகவும் பேசியது இல்லை. சமகால தலைவர்களை பேசலாம் மண்ணிப்புக் கேட்கலாம். அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் மறைந்த தலைவரான பெரியாரை இப்படி சீண்டலாமா?

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

பெரியாரின் செயல்பாட்டில் முரண்பாடு இருந்தது. ஆனால் அவரது ஒவ்வொரு முரண்பாட்டிலும் சுய நலன் இருக்காது. அதனால் தான் அவர் பெரியார் என கொண்டாடப்படுகிறார். திராவிட இயக்க தலைவர் கு.அழகிரிசாமி நிதி திரட்டக் கூடாது என பெரியார் கட்சியினருக்கு கடிதம் எழுதினார். பின்னர் அவரே நிதி திரட்டி அழகிரி சாமியிடம் கொடுத்தார். அவரது முரண்பாட்டில் சுயநலம் இருக்காது. 95 வயது வரை வாழ்ந்தவர் பெரியார். அவர் தன்னுடன் எதையாவது எடுத்துச் சென்றாரா? பெரிய செல்வந்தரான பெரியார் ரயிலில் 3வது வகுப்பு பெட்டியில்தான் சென்றார். அப்படி பட்ட தலைவர்கள் இன்று உள்ளனரா? பொதுவாகவே மறைந்த தலைவர்களை பேச மாட்டோம். சீமான் இவ்வளவு படிக்க காரணம் படிப்புதானே. பிராமண ஆதிக்கம் உச்சத்தில் இருந்திருந்தால் இன்று நானும், அவரரும் படித்திருக்க முடியமா. சீமானுக்கு கொஞ்சம் நன்றி உணர்ச்சி வேண்டும். மக்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவரை இவ்வளவு கீழ்த் தரமாக பேசுவது தவறு. தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை என்று பெரியார் சொன்னார். ஆனால் தமிழ் மொழியையோ, திருக்குறளையோ, தமிழர்களை அவமதிப்பு செய்யும் நோக்கம் அவரிடம் இல்லை. பெரியார் தமிழ சமூகத்திற்கு ஒன்றுமே செய்ய வில்லை என்கிறீர்கள். 95 வயது வரை வாழ்ந்த பெரியார், யாருக்காக உழைத்தார். அவர் கடைசி வரை தமிழ்நாட்டிற்காகதான் உழைத்தார். இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்து கொண்டு பெரியாரை போன்ற தலைவர்களை உரசுவது தவறு. உங்களுக்கு எவ்வளவோ ஆயுதங்கள் உள்ளது. அதனை எடுத்து ஆட்சியை கைப்பற்றுங்கள். ஆனால் பெரியாரை சீண்டாதீர்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

எனக்கு பாஜக மீது தான் சந்தேகம் உள்ளது. அவர்கள் என்ன செய்தாவது தமிழ்நாட்டில் அமைதி அற்ற சூழலை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாஜகவின் குரலை ஒழிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது. அவர் எதாவது சொன்னால் அண்ணாமலை ஓடோடி வருவதை பார்த்தால் பெரியாரை பற்றி எதாவது சீண்டினால்தான் கட்சி வளரும். அல்லது பெரியார் மண் என்பதை மாற்றினால் தான் தமிழ்தேசியம் வரும் என்று அவர்கள் நினைக்கலாம். பாஜக என்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என நினைக்கிறதோ அதே ருட்டில் சீமானும் பயணிக்கிறாரோ என்ற ஆதங்கத்தில் பேசிகிறேன். சீமான் செய்தது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்தான். ஆனால் அரசு கைது நடவடிக்கைக்கு போகாது என்று தெரிகிறது. இந்த அவதூறுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. பெரியாரை கொண்டாடுங்கள் என சொல்லவில்லை, அவரை உரசாதீர்கள் என்றுதான் கேட்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ