சீமானை அரசியல் தலைவராக உருவாக்கியது உளவு அமைப்புகள் தான் என்றும், 15 ஆண்டுகளில் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் அம்மக்களின் முன்னேற்றத்தில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி அளித்துள்ள பங்களிப்பு குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு ஜெகத் காஸ்பர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- இந்திய உளவு அமைப்போ, ராணுவமோ ஒன்றரை லட்சம் பேரை உயிர் போகாமல் ஈழ போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானித்திருந்தால் அது சரியாக இருக்கும். ஆனால் தமிழர்களுக்கு எதிரான போர் எந்த வகையிலும் மண்ணிக்க முடியாத அளவுக்கு குரூரமான முறையில் முடிக்கப்பட்டது. இதனை யாரால் செய்ய முடியும் என்றால், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு கொடூரமான மனநிலை வேண்டும். அந்த ஒரு முடிவு நடக்கும்போது உங்களுக்கு எதிரி யார்? சீமானோ, தமிழ் தேசியமோ உங்களுக்கு முதல் எதிரியார்? கலைஞரோடு, பெரியாரோடு நீங்கள் சண்டையிடுங்கள். அதற்கு உங்களுக்கு முழுமையான உரிமை உள்ளது. ஆனால் உங்கள் முதல் எதிரி யார்? அப்போது முதல் எதிரியை நீங்கள் அழகாக பாதுகாத்து விட்டு, இங்கே பெரியாரை அழிக்கிறேன் என்று வருகிறார்கள். அப்படி என்றால் யாருடைய அஜெண்டாவுக்காக இவர்கள் வருகிறார்கள். பெரியாரை, சமூகநீதி அரசியலை பலவீனப்படுத்த வேண்டும், சீர் குலைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஆதரவாக தானே நீங்கள் வருகிறீர்கள். அப்போது நீங்கள் யார்? என்ற கேள்வி கேட்க வேண்டும் தானே? அதனால்தான் கேட்டேன். சீமானிடமே எனக்கு எதிராக அவதூறு வழக்கு போடுங்கள். நான் வந்து பேசுகிறேன் என சவால் விட்டுள்ளேன்.
2009ம் ஆண்டிற்கு பிறகு நடந்த தேர்தலில் அதிமுகவிடம் இருந்து சீமான் பணம் வாங்கினாரா? இல்லையா? என்று அவரிடம் கேளுங்கள். ஒவ்வொரு தொகுதியையும் மையமாக வைத்து அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளரின் ஜாதியை சேர்ந்தவரை எதிர்த்து அந்த சாதியை சேர்ந்த மற்றொருவரை நிறுத்துவது போன்று செய்தார். ஈழ விடுதலை அரசியலையே ஒரு தேர்தல் அரசியலாக மாற்றிவிட்டார். 2009க்கு முன்பு ஈழ பிரச்சினை என்பது தமிழக அரசியலின் மையத்தில் இருந்தது. திமுக, அதிமுக என்ற 2 பிரதான கட்சிகளும் அந்த பிரச்சினையை கையில் வைத்திருந்தார்கள். இன்று அது எங்கே உள்ளது?. இவ்வளவு பெரிய விலைகள் கொடுத்த பிறகும், மாபெரும் போராட்டம், கடைசி கட்டத்தில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதற்காக எத்தனையோ போராளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். ஆனால் இலங்கை தமிழர்களுக்கு, ஒரு மாவட்ட நிர்வாகத்திற்கு இருக்கும் அரசியல் அதிகாரம் கூட வாங்கித் தர முடியாமல் 15 ஆண்டுகளாக தியாகங்களின் நினைவுகளை திருட சீமானுக்கு என்ன தார்மிக உரிமை உள்ளது?.
சீமானை உருவாக்கியதே உளவுத்துறை தான். ஜெயிலுக்கு சீமானை அனுப்பியதும் அவர்கள்தான். தமிழ் சமுதாயத்திற்கு உள்ள தவறான குணம் என்ன என்றால் கதநாயகர்களை கட்டமைப்பதுதான். இங்கு உள்ள ஒருவரை பற்றி பத்திரிகைகளில் தவறாக எழுதிவிட்டால் இந்த ஆளுமைச் சிதைவில் இருந்து அவர்கள் மீண்டு வர 10 வருடங்கள் ஆகும். ஆனால் அதே பத்திரிகைகள் உங்களை புகழ்ந்து எழுதினாளோ, நீங்கள் சிறைக்கு சென்றாலோ நீங்கள் ஒரு சிறு தெய்வம் ஆகிவிடுவீர்கள். சீமானை சிறைக்கு அனுப்பியது உளவுத் துறைதான். இது தமிழ் உளவியலில் உள்ள ஒரு சிக்கல். சீமானை ஒரு ஆளாக மாற்றி தமிழ் தேசிய களத்திற்கு கொண்டு வந்ததும் அவர்கள் தான். இங்கே விடுதலைப்புலிகள் கொடியை வைத்தோ, அடையாளத்தையோ வைத்துக் கொண்டோ வெளியே அரசியல் செய்ய முடியுமா? அப்படி செய்கிறார் என்றால் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம் அவர் மீது பாயவில்லை?. அந்த கேள்வி நீங்கள் ஏன் கேட்பதில்லை.
ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் திருமாவளவனுக்கு, ஒரு மாணவ போராட்டவாதியாக, எத்தனை ஆண்டுகால அரசியல் உழைப்பு உள்ளது. 40 ஆண்டுகள் களத்தில் போராடி இன்னுயிர்களை தியாகம் செய்து, எத்தனை எத்தனை விலைகள் கொடுத்து வந்த ஈழ மக்களின் போராட்டத்தின் நினைவுகளை திருடிக்கொண்டு களத்தில் வந்து நின்றவர் அல்ல திருமாவளவன். அவர் ஈழத்தமிழ் மக்களுக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் தன் வாழ்வை எரித்துக் கொண்டிருக்கிற ஒரு பேராளுமை ஆவார். அதனால் திருமாவளவனையும், சீமானையும் ஒப்பிடாதீர்கள் என்கிறேன். திருமாவளவன் ஒரு மக்கள் திரளின் பிரதிநிதி அவர். அவரை நீங்கள் தொட்டால் உங்கள் புதுடெல்லி அதிகாரத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த கணக்குகள் எல்லாம் தெரியும்.
தமிழ்நாட்டில், தமிழ் தேசியத்திற்கு என்று ஒரு தொகுப்பு எப்போதும் உள்ளது. தமிழ் என்று நீங்கள் அரசியல் செய்தால் உங்களுக்கு 7 முதல் 8 சதவிகித வாக்குகள் உள்ளது. அதேபோல், யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என தமிழகத்தில் 15 சதவிகித வாக்குகள் உள்ளன. அது களநிலையை பொருத்து மாறும். கமலும், விஜகாந்தும் இருந்தால் அது அவர்களுக்கு வந்திருக்கும். அவர்கள் இல்லாமல் 3வது ஆளாக நாம் தமிழர் கட்சி இருந்தால் அவர்களுக்கு 8 சதவிகிதம் வாக்குகள் வந்திருக்கிறது. அதை பெரிய விஷயமாக கருதக்கூடாது. சீமானுக்கு உண்மையில் எது பெரிய வெற்றி என்றால் நாம் தமிழர் கட்சி களப் போராட்டத்தால், ஈழ மக்களுக்கு குறைந்தபட்சம் அரசியல் தீர்வையாவது, 13-வது சட்டத் திருத்தத்தையாவது நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவிடம் 13-வது சட்டத்திருத்தம் பற்றி பேசக்கூட விருப்பமில்லாத மனநிலைதான் இந்தியாவில் உள்ளது. அப்படி என்றால் இங்கே நாம் தமிழர் கட்சி என்ன கிழித்துள்ளது? கேட்டால் அண்ணன் ஊர் ஊராக போய் பேசிதான், பிரபாகரனின் பெயர் தெரிந்துள்ளது என்கிறார்கள். பிரபாகரன் பெயர் இவர்கள் பேசிதான் உலகிற்கு தெரியுமா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.