Homeசெய்திகள்கட்டுரைபெரியார் மீதான சீமானின் விமர்சனம் அதர பழசு... பண்பாட்டு தளத்தில் நாதக என்ன செய்தது?... பத்திரிகையாளர்...

பெரியார் மீதான சீமானின் விமர்சனம் அதர பழசு… பண்பாட்டு தளத்தில் நாதக என்ன செய்தது?… பத்திரிகையாளர் சுகுணா திவாகர் கேள்வி!

-

- Advertisement -

 

அரை நூற்றாண்டு காலம் பொதுவாழ்வில் இருந்த பெரியாரை, அவரது ஒரு சில முரண்பாடுகளை சொல்லி அவரை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என சீமான்  நினைப்பது நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் தெரிவித்துள்ளார்.

பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்து பிரபல யூடியூப் சேலனலுக்கு  பத்திரிகையாளர் சுகுணா திவாகர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பெரியார் குறித்து சீமான் தொடர் அவதூறுகளை பரப்புவதற்கு பாஜகவின் அஜெண்டா என்பதிலும், விஜய் கட்சியை பார்த்து அச்சம் என்ற இரண்டுமே காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்றது. அதற்கு காரணம் என்ன என்றால்,  திமுக வெறுப்பு வாக்குகள் மற்றும் திமுக – அதிமுக வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் சிதறின. தற்போது அனைத்துக் கட்சிகளும் திமுக, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதால், திமுக எதிர்ப்பு மற்றும் இவ்விரு கட்சிகளுக்கும் போடாதவர்கள் சீமானுக்கு போட்டனர்.

திமுக, கலைஞர் வெறுப்பை தொடர்ச்சியாக அதிமுக அறுவடை செய்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி திமுக எதிர்ப்பாளர்களை கவரும் விதமாக செயல்படவில்லை. அதனால் சீமானுக்கு, அவர்கள் வாக்களித்தனர். இப்போது அரசியலுக்கு வந்துள்ள விஜயால், இழப்பு இவர்கள் இருவருக்கும் தான். விஜயும் திமுகவை எதிர்க்கிறார். அதனால் திமுக எதிர்ப்பாளர்கள் நாம் தமிழருக்கு பதிலாக, விஜய்க்கு வாக்களிப்பார்கள். அதிமுக வாக்குகளும் கணிசமான அளவு விஜய்க்கு செல்லலாம். விஜயின் பெரிய இலக்கு என்பது அதிமுக, நாம் தமிழர் கட்சிதான். நாதகவின் வாக்கு பெரிய அளவில் விஜய்க்கு சென்று கொண்டிருக்கிறது. அதனால் சீமான் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். விஜயை வேறு யாரும் பெரிய அளவில் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் விஜயின் மாநாட்டிற்கு பின்னர் அவரை சீமான் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதனால் அவருக்கு விஜய் ஃபோபியா வந்துவிட்டது. தன்னுடைய கட்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் பெரியாரை பற்றி பேசினால் மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்று பேசுகிறார். பெரியாரை விஜய் கொள்கை தலைவராக அறிவித்துள்ளதால், அவரை பற்றி விமர்சித்து வருகிறார்.

பெரியார் மீது, அவரது கொள்கைகள் மீது விமர்சனம் வைப்பதில் தவறு இல்லை. ரஜினி உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் சங்கி என்று கூறும்போது சிரித்துக்கொண்டே சக நண்பர் என பதில் அளிக்கிறார். ஆனால் பெரியார் பற்றி, திராவிடம் பற்றி பேசினால் ஆவேசமாக பதில் அளிக்கிறார். அவர் பெரியாரை விமர்சிக்கும்போது ஆர்எஸ்எஸ், பாஜகவினர்தான் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவரது அரசியல் பாஜகவுக்கு தான் சாதகமாக போகும் என்பதால் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் வாக்குகளை கவருவது அவருடைய நோக்கமாக இருக்கலாம். ஆனைமுத்து தான் மண்டல் கமிஷன் அமைக்க முழுக்க முழுக்க காரணம் என சீமான் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தமானது. ஆனைமுத்து முயற்சி மேற்கொண்டார் அவ்வளவுதான். 69 சதவீத இடஒதுக்கீடு என்பது தாமிழ்நாட்டில் உள்ளது. அது கலைஞர் கொண்டுவந்தது. அரசியலமைப்பில் சேர்த்து அதற்கு சட்ட பாதுகாப்பு அளித்தவர் ஜெயலலிதா. மண்டல் கமிஷன் என்பது மத்திய அரசு பணியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகும். மத்திய அரசு இடஒதுக்கீடு, மாநில அரசு இடஒதுக்கீடு குறித்து தெரியாமல் சீமான் பேசும் நிலையில், அதனை கட்சியினர் பகிர்ந்து வருவது அபத்தமானது.

பெரியார் தமிழர்களை காட்டு மிராண்டிகள் என்றும், தமிழ் இலக்கியங்களை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த புரட்சி கவிஞர் பாரதிதாசன், பெரியார் அப்படி சொல்வதில் என்ன தவறு என்று கூறினார். தமிழ் அரசர்கள் நாய் விட்டையில் சிவனை கண்டனர். உடனடியாக அதற்கு ஒரு கோயிலை கட்டினர். இப்படி பட்டவர்களை பெரியார் திட்டுவதில் என்ன தவறு உள்ளது?, பின்னர் வந்தவர்கள் நாகரிகமானவர்களாக இருந்தனர். அவர்களை போற்றுங்கள், அந்த தமிழ் அரசர்களை கைவிடுங்கள். அப்படி நீங்கள் செய்தால், பெரியார் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்று பாரதிதாசன் தெரிவித்தார். பெரியார் தமிழ் மீது வைத்த விமர்சனம் என்பது தமிழை செலுமைப்படுத்துவதற்காக தான், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு தமிழை மாற்ற வேண்டும் என்ற புரிதல் பாரதிதாசன் கொண்டிருந்தார். தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதியமும், ஆணாதிக்கமும்தான். இது நமது இலக்கியங்களில் உள்ளது. இதை நீக்க வேண்டும். மொழியில் இருந்து சாதியத்தை நீக்க வேண்டும் என்பது பெரியாரின் எண்ணமாக இருந்தது

திருவள்ளுவரை, அவ்வையாரை படிக்க வைத்தது யார் என்று சீமான் கேள்வி எழுப்புகிறார். பகுத்தறிவு, பொது அறிவு, அரசியல் அறிவு இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள். பொதுக்கல்வி முறை என்பது பிரிட்டிஷ் ஆட்சியில் தான் வந்தது. அதற்கு முன்னர் குடும்ப தொழில்முறைதான் இருந்தது. இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் அறிஞர்களிடம் சென்று கற்றுக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளாளர்களாகவும், முதலியார்களாவும் தான் இருந்தனர். கல்வி நிறுவனம் என்பதை முதன் முதலில் உருவாக்கியது வெள்ளையர்கள்தான். அதற்கு சிலபஸ் வகுத்ததும் அவர்கள் தான். கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் நேரடி தொடர்பு வந்தபோது கற்றதும், வேலைக்கு சென்றதும் பிராமணர்கள்தான். அதனால்தான் பார்ப்பனல்லாதோருக்கான இடஒதுக்கீடு என்பது தேவைப்பட்டது. திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் உள்ளதால் அதனை பெரியார் எதிர்த்தார். ஆனால் அதனை எல்லாம் பார்க்காமல் அவரை கேள்வி எழுப்புகின்றனர்.

திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் கடவுள் மறுப்பை கைவிட்டு விட்டு, தமிழை முன்னிலைப்படுத்தியது. அதுவும் தமிழில் பக்தி இலக்கியங்களை தவிர்த்து, அவைதீக இலக்கியங்களை கையில் எடுக்கிறது. பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்றால், மக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்த்தது திமுக. சிலப்பதிகாரம் என்ற சமண நூலை முன்னிலைப்படுத்தினார். அவர் தூக்கிப்பிடித்ததும் அவைதீக மரபில் வந்த நூல்கள் தான். சாதி பெயர்களை தூக்கி எறிந்த பின்னர், பெயருக்கு பின்னால் படித்து வாங்கிய பட்டங்களை திமுகவினர் போட்டுக் கொண்டனர். கல்வியாளர்  நெ.து.சுந்தரவடிவேல், குஞ்சுதம் குருசாமியின் சகோதரி காந்தம்மாள் என்பரை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்திற்கு கண்டிஷனாக தாலிகட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்கு தீவிர பெரியாரியவாதியான சுந்தரவடிவேல் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்போது அவரிடம் பெண் வீட்டார் சார்பில்  பெரியார் பேசினார். காந்தம்மாள் என்பவர் தாலி மறுக்கப்பட்ட தேவதாசி சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், அவருக்கு தாலி உரிமையாக கருதப்பட்டது. அதனை பெரியார் சுந்தரவடிவேலிடம் எடுத்துரைத்தார். பெரியார் வறட்டுத்தனமாக தாலியை எதிர்த்து பேசவில்லை. இதேபோல் தான் கலைஞர் பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தை அறிவிக்கும்போது, திருமணம் மறுக்கப்பட்ட அதே சமுகத்தை சேர்ந்த மூவாலூர் ராமாமிர்தம் அம்மாளின் பெயரை திட்டத்திற்கு வைக்கிறார். இது எவ்வளவு பெரிய பண்பாட்டு புரட்சியாகும்.

நாம் தமிழர் கட்சி பண்பாட்டு செயல்பாடு என்ன செய்துள்ளது? நாம் தமிழர் கட்சி குறைந்தபட்சம் ஒரே ஒரு எழுத்தாளரையோ, ஒரு கலைஞரையோ உருவாக்கி உள்ளதா? பிரபாகரன் சித்தாந்தம் என்றால் என்ன? 2009 இறுதிப்போரின்போது புலிகள் தோல்விக்கு காரணம் என முன்வைக்கப்பட்டது என்ன என்றால், அவர்கள் ஜேவிபி மீது வைத்த அதே குற்றச்சாட்டுகள் தான். தனது கொள்கையாக சோசலிச தமிழீழம் என்று சொன்ன விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், உலகமயமாக்கலை ஆதரித்தார். அவரது சித்தாந்தம் என்பது தேசிய இன விடுதலை, அதற்காக ஆயுதம் ஏந்திய போராட்டம். மற்றபடி அவர் கருத்தியல் ரீதியான தலைவர் அல்ல, அவர் ஒரு செயல் வீரர். பிரபாகரனுக்காக கோவை ராமகிருஷ்ணன் சிறையில் இருந்தவர். ஆனால் இவர் இலங்கை சென்றுவந்தது முதலமைச்சர் வேட்பாளர் ஆகிவிட்டார். சீமான் முன்வைப்பது இறக்குமதி அரசியல் ஆகும். அவர் பெரியார் அரசியலை விமர்சிக்கலாமா?

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், 1962 முஸ்லீம் எதிர்ப்பு, கீழ் வெண்மணி போராட்டம் போன்றவற்றில் பெரியாரின் நிலைப்பாடு தவறானது தான். ஆனால் அதற்கான அரசியல் காரணங்கள் உள்ளது. பெரியார் பேசிய இந்த அனைத்து விவகாரங்களும் புதிதாக பேசுவது இல்லை. விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். இது எதுவுமே புதிய கேள்விகள் அல்ல. இதனை படிக்காமல் அவர்கள் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். பெரியார் எழுதியதை முழுமையாக படிக்காமல், அதன் பின்னணியை கூறாமல் சொன்னால் சாமானிய மக்கள் ஆத்திரமடையத்தான் செய்வார்கள். 54 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்தவர் பெரியார். அவரிடம் பல முரண்பாடுகள் நடந்துள்ளது. திராவிட நாடு கோரிக்கை, காங்கிரசில் இணைந்தது, திகவில் இருந்து அண்ணா பிரிந்து சென்றது, மீண்டும் திமுகவை ஆதரித்தது என நிறைய முரண்பாடுகள் உள்ளது. இவ்வளவு அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பெரியாரிடம் முரண்பாடு ஏற்பட்டது. சீமான் 2010 அரசியல் கட்சியை தொடங்கினார். இப்போது 14 வருடங்கள் ஆகிறது. இங்கு என்ன பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஜெயலலிதா மறைவு, கலைஞர் மறைவு மற்றும் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். எந்த பெரிய அரசியல் சூழல் மாற்றம் ஏற்படாத நிலையிலும், சீமானின் நிலைப்பாட்டில் எத்தனை முரண்பாடுகள் நிகழ்ந்துள்ளன. இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என எத்தனை முரண்பாடுகள் அவரிடம் உள்ளன. அவர் பெரியார் குறித்து பேச தகுதி வேண்டாமா?

சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

54 ஆண்டுகால பெரியாரின் பொது வாழ்வு என்பது, அவர் முஸ்லிம்கள் குறித்து பேசியதும், இந்தி எதிர்ப்பு மற்றும் கீழ் வெண்மணி விவகாரத்தில் எதிர் நிலைப்பாடு எடுத்தது தானா என்றால் அது நிச்சயமாக இல்லை. அவர் எவ்வளவு பெரிய விஷயங்களை செய்துள்ளார். சீமான் முன்வைக்கும் இந்த சில குற்றச்சாட்டுகளுக்காக அவரை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிடலாமா?. அப்படி எனில் பிரபாகரனையும் குப்பை தொட்டியில் தூக்கி போட்டுவிடலாமா?. யாழ்பாணத்தில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றியவர் பிரபாகரன். பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களை படுகொலை செய்தனர். பெரியாராவது பேசத்தான் செய்தார். ஆனால் அவர் இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர். அதனால் பிரபாகரனையும் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோமா?. பிரபாகரனின் அரசியல் நிலைப்பாட்டில் விமர்சனம் இருந்தாலும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் சீமான் பெரியார் மீது அந்த நிலைப்பாட்டை எடுத்தால், நாங்களும் பிரபாகரனை புறக்கணிக்க தயார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ