பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக – நாம் தமிழர் கட்சியினரிடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு ஆய்வாளர் கிருஷ்ணவேல் அளித்துள்ள சிறப்பு நேர்கணாலில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக Vs நாம் தமிழர் என்று சொல்வதே நகைப்புக்குரியது. தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அதிமுக தான். பாஜகவை ஒரு பெரிய கட்சியாக பார்க்க முடியாது. கடந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலா 10 ஆயிரம் வாக்குகள் தான் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டில் பெரியார் குறித்து யார் பேசினாலும், அனைவரும் சேர்ந்து அடிப்பார்கள் என்பது தான் வழக்கம். அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்கள் பெரியார் குறித்த புத்தகங்களை அதிகளவில் வாங்கிப் படிக்கின்றனர். சீமான், அண்ணாமலை போன்றவர்கள் எல்லாம் தொடர்ந்து பெரியாரை விமர்சிக்கும்போது, அவர் யார் என தெரிந்து கொள்வதில் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். மோடியின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் பெரியார் மிகப்பெரிய வெளிச்சத்திற்கு வந்துள்ளார். பாஜகவினர் எதையாவது உளறி வந்ததால் அவர் யார் என்பதை அறிய எல்லோரும் தேட ஆரம்பித்து விட்டனர்.
மற்ற கட்சிகளில் தொண்டர்கள் எதையாவது பேசினால், கட்சி தலைமை அது அவர்களது கருத்து என்று கூறும். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமானின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என்று அக்கட்சியின் நிர்வாகி ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். இது எவ்வளவு பெரிய நகைப்புக்குரியது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி கலகலத்து போய் உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடந்த முறை வாங்கிய 10 ஆயிரம் வாக்குகளைக்கூட சீமானால் வாங்க முடியாது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நிற்காததால் அந்த கட்சிகளின் வாக்குகள் சீமானுக்கு வராது. 2023ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக 64.5 சதவீதம் பெற்றது. நாம் தமிழர் 6.35 சதவீதம் பெற்றது. திமுக 20 சதவீதம் அதிகம் பெற்றிருந்தது. நாதக ஒரு சதவீதம் குறைவாகவே பெற்றிருந்தது. அவர் கடந்த முறை பெற்ற 6 சதவீத வாக்குகள் கூட தற்போது வராது. நீங்கள் பெரியாரையே திட்டிவிட்டு ஈரோட்டில் போய் போட்டியிட்டால் யார் வாக்களிப்பார்கள். கொங்கு பகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது ஏற்கனவே தகர்க்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 65 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. இது அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பு இல்லை. திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் திட்டம் போன்ற புரட்சிகர திட்டங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
ஈரோட்டில் திமுக எதிர்ப்பு வாக்குகளும், இளைஞர் வாக்குகளும் சீமானுக்கு விழும் என்பது தவறு. இடைத்தேர்தலில் விஜய் போட்டியிடாததால் அவருக்கான வாக்குகள் சீமானுக்கு விழும் என்பதை சீமானே கூட நம்ப மாட்டார். பெரியாரை திட்டினால் பக்திமான்கள் எல்லாம் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என சீமான் நம்புகிறார். இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பாஜகவையே நாம் அங்கீகரிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியினர் நாள்தோறும் பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களை மதிப்பதில்லை, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது, பாஜக செய்யும் அதே வேலையை தான் நாம் தமிழர் கட்சியும் செய்கிறது. சீமான் இப்போது தந்தை பெரியாரையே அவதூறாக பேசியுள்ளார். அவரை பேசிவிட்டு, அவர் சொந்த மண்ணிலேயே நீங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். ஈரோடு மக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளரையே விரட்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெரியார் முஸ்லீம்களை விமர்சிக்கவில்லை. ராஜாஜியுடன் கூட்டணி வைத்த முஸ்லீம் லீகையும், திமுகவையும் தான் விமர்சித்தார். மாறாக சீமான் தான், முஸ்லீம்களை சாத்தான்களின் பிள்ளைகள் என விமர்சித்தார்.
சீமான் என்பவர் பார்ப்பனர் அடிவருடி ஆவார். அவர் பேசுவது எல்லாம் பார்ப்பனர்களின் நலனுக்காகத்தான். அப்படி என்றால் சாவர்கருக்கு சிலை வையுங்கள். அவரிடம் அது ஒன்று மட்டும் தான் பாக்கி உள்ளது. ஐயா வைகுண்டர், அருட்பிரகாச வள்ளலாரை தாண்டி யார் என்ன செய்துவிட்டார்கள் என சீமான் கேள்வி எழுப்புகிறார்கள். பெரியாரை திட்ட வேண்டும் என்பதற்காக, இவர்கள் வைகுண்டரையும், வள்ளலாரையும் கையில் எடுத்துள்ளார்கள். மற்றபடி அவர்கள் மீது சீமானுக்கு என்ன பாசமா? பெரியார் மீதான வெறுப்புக்காக இவர்களை கையில் எடுத்துள்ளார்கள். வள்ளலாரின் 6ஆம் திருமுறையை புத்தகமாக வெளியிட்டதே தந்தை பெரியார்தான். யார் பேசுகிறார்கள் என்கிறபோதே அதன் உள்நோக்கம் தெரிந்து விடும். சீமான் வள்ளலாரை புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு என்ன உள்நோக்கம் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இவர் ஒரு காலத்தில் பெரியாரையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தவர் தான்.
சீமானுக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. எங்கு காசு வாங்கலம், யாரிடம் காசு வாங்கலாம் என்பதுதான் அவரது கொள்கை. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் தன்னுடைய கட்சியினரையே தோற்கடிப்பதற்கான வேலைகளை சீமான் பார்த்தார். இவற்றை எல்லாம் பார்த்துதான் நாம் தமிழர் கட்சியினர் மொத்த மொத்தமாக அங்கிருந்து கிளம்பி விட்டனர். சீமான் முதலில் ஈழத் தமிழர்களிடம் வசூலித்துக் கொண்டிருந்தார். அந்த வசூல் கட்டாகிவிட்டது. பின்னர் புழம்பெயர் தமிழர்களிடம் வசூலித்தார். தற்போது அதுவும் கட்ஆகி விட்டது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள லோக்கல் கட்சி நிர்வாகிகளிடம் வசூலிக்கலாம் என பார்த்தார். தற்போது அவர்களும் கிளம்பி விட்டனர். இனி யாரிடம் சென்று நிதி வசூலிப்பார் என தெரியவில்லை. அடுத்தபடியாக பாஜகவிடம் வாங்குவதற்காக தான், சீமான் தற்போது பெரியார் குறித்து அவதூறுகளை பரப்பி கொண்டிருக்கிறார். இது எப்படி இருந்தாலும், சீமான் 2023 தேர்தலில் வாங்கிய 6 சதவீத வாக்குகளை இந்த முறையும் வாங்கி விட்டால், அவர் தனது காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். நாம் இன்னும் தேர்தல் ஆட்டத்தில் இருக்கிறோம் என்பதற்காக. ஆனால் அந்த வாக்குகளை கூட அவரால் பெற முடியாது. இந்த தேர்தலில் அவர் வாங்குகிற வாக்குகளை பார்த்து பாஜகவே ஏதவாது தரலாமா என்று யோசித்தால்தான் உண்டு, இவ்வாறு அவர் தெரிவித்தார்.