2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்ஜிஆர் – ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறாததற்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் முழுமையான பின்னணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- முன்னாள் அமைச்சர் செங்ககோட்டையன் எழுப்பியது போர்க்குரல் அல்ல. வழக்கத்திற்கு மாறான குரல். அது எடப்பாடிக்கு எதிரானதும் அல்ல. ஏன் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்தை ஏன் போடவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான விவசாயிகளிடம் 4 நாட்களுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டேன் என்கிறார். அதில் உள்ள எதார்த்ததை புரிந்துகொண்டு, அந்த விஷயம் நியாயமானது. இதனை யாரும் தவறு என சொல்ல முடியாது.
அப்போது, எடப்பாடி பழனிசாமியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான வேலுமணியும் என்ன செய்திருக்க வேண்டும். விவசாயிகள் செய்த நிகழ்ச்சி என்றால் அவர்களிடம் கூப்பிட்டு சொன்னால் மாற்றிவிட போகிறார்கள். இதேவிவசாயிகள் முதலமைச்சருக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் செலவு செய்தார். நிகழ்ச்சிக்கு முதல் நாளில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜெயலலிதா படம் இருக்கிறதா என ஆய்வு செயய வேண்டாமா? நிகழ்ச்சி நெருங்கும் போது மேடை வரை கட்சியினர் வைத்த விளம்பரங்களில் எங்கேயும் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு படம் இல்லை. முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி படம்தான் இருந்தது. செங்கோட்டையன் ஒரு சரியான விஷயத்தை கையில் எடுத்துள்ளார்.
எந்த கால கட்டத்திலும் தன்னைவிட ஜுனியரான எடப்பாடியின் தலைமையின் கீழ் அமைச்சராக இருந்தபோதும், வரை மீறி செங்கோட்டையன் எதையும் சொல்லவில்லை. எல்லா விஷயங்களை முதலமைச்சரை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றுதான் சொல்லுவார். அப்படிபட்ட செங்கோட்டையன் பொதுவெளியில் வெளிப்படையாக ஆமாம் நான் இதற்காக தான் சென்றேன் என்கிறார். அப்படி என்றால் அவர் எதோ ஒன்றை சொல்ல வருகிறார். கட்சி நன்றாக இருக்க வேண்டும், 2026ல் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும், அந்த ஆட்சியில் நீங்கள்தான் முதலமைச்சர் என்று சொல்லத்தான் சென்றார்கள். அவர்கள் சென்றது போர்க்குரல் எழுப்ப அல்ல. எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர், நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் கட்சி பலமாக இருக்க வேண்டும். தெற்கில், டெல்டாவில் கட்சி இல்லாமல் போய்விட்டது என்று சொல்லத்தான் போனார்கள். அந்த இடத்தில் ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்டத்தில் 2 மாதம் அமைதியாக இருந்துவிட்டு, 6 பேர் என்று விவாதம் வருகிறபோது ஒரு கட்டத்தில் தலைமை அலுவலகத்தில் வைத்து அப்படி ஒரு சந்திப்பே நடைபெறவில்லை என கூறினார்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளாததுடன், கட்சி வளர்ச்சிக்காக சொன்ன கருத்துக்களை எடப்பாடி பொய் என்று சொன்னதால் இவர் இந்த ஜென்மத்தில் திருந்தமாட்டார் என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கலாம். எடப்பாடி ஏன் இப்படி இருக்கிறார்? என்று அனைவரிடமும் ஆதங்கம் உள்ளது. அடுத்த 15வது நாளில் செங்கோட்டையன் வெளிப்படையாக போட்டு உடைத்தார் ஆமாம் சந்தித்தோம் என்றார். எடப்பாடி பழனிசாமி இன்று வரை அதை மறுக்கவில்லை. அவருடன் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர். அவர்களும் பொய் சொல்கிறார்களா?. இதைதான் துக்ளக் விழாவில் குருமூர்த்தி, அவர் நல்லதுக்காக சொன்னாலும் கேட்க மறுக்கிறார். அவரும் நல்ல கணக்கு போட் மாட்டேன்கிறார். தலைமைக்கு உரிய பண்புகள் அவரிடம் இல்லை என்று சொன்னார். இப்போது, செங்கோட்டையன் தன் இயல்புக்கு மாறாக இப்படி பேசுவதை பார்த்தால், ஏதோ நடப்பதற்கான தொடக்க புள்ளியாக தோன்றுகிறது.
ஒன்றுபட்ட அதிமுக என்பதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் எல்லை மீறி தலையிட்ட பாஜக, இன்று எதர்க்காக திரைக்கு பின்னால் இருந்து தலையிடுகிறார்கள் என்றால், அதிமுக பலப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதிமுகவை உடைத்தும், வேல் யாத்திரை நடத்தியும் தமிழ்நாட்டில் பாஜக வளரவில்லை என்ற உண்மையை புரிந்துகொண்டனர். அப்போது, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுக வலிமையாக இருக்க வேணடும். இதனை ஏற்க மறுக்கும் எடப்பாடிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க வேண்டும் என அவர்கள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் எடப்பாடியின் நெருங்கிய உறவினர் வீட்டில் மிகப்பெரிய அளவில் சோதனை நடைபெற்றது. அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இந்த நேரத்திலும் அந்த வழக்கு உயிரோட்டமாக உள்ளது. சும்மா கிடந்த இரட்டை இலை வழக்கை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்படுகிறது. இது அதிமுககார்களுக்கே அதிர்ச்சி தான். இப்படி அங்கு அங்கு நடக்கும் புள்ளிகளை இணைத்து பார்த்தால் ஏதோ நடப்பதற்கான ஆரம்பம் என தோன்றுகிறது. வரும் வாரங்களில் அதிமுகவை மையப்படுத்தி அரசியலில் சில திருப்பங்கள், ஆச்சரியங்கள் நடைபெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி இந்த எதார்த்ததை புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர் புரியவைக்கப்படுவார். அல்லது மிரட்டப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எப்படியாகினும் அதிமுக என்ற கட்சிக்கு நன்மை நடந்தால் நல்லதுதான்.
சசிகலா இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டுகளை செய்வதாக தெரியவில்லை. அவர் 2 வருடங்களுக்கு முன்பே இதை செய்ய தொடங்கி இருந்தால் அரசியலே வேறு மாதிரி மாறி இருக்கும். அவர் ஆக்டிவ் அரசியலே செய்யவில்லை. அதிகாரமிக்க அரசியின் பின்னால் சசிகலா இருந்தார். இன்று அதே சசிகலாவை மிதித்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வளவு துரோகங்களை எடப்பாடி தொடங்கி வைத்தார். அவருக்கு பயந்துகொண்டு எல்லாரும் அமைதி காத்தனர். இதனால் இந்த விவகாரத்தில் சசிகலா பின்னால் இருப்பார் என்று தோன்றவில்லை. ஆனால் பாஜக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்களிடம் தான் அதிகாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு நிகராக எங்களுக்கு இரட்டை இலை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என சொல்கிறார்கள் என்றால் அதற்கு பாஜகதான் காரணமாகும்.
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிமுக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இதனால் தேவர் சமுதாய மக்கள் கடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தனர். கள்ளர்கள் கணிசமாக உள்ள தஞ்சாவூரில் திமுக எப்படி ஜெயிக்கிறது?. முக்குலத்தோர் இந்த தேர்தலில் இன்னொரு கட்சிக்குதான் வாக்களித்தார்கள். அடுத்த தேர்தலில் வேறு கட்சிகளுக்கே சென்றுவிடுவார்கள். இந்த ஆபத்தை எடப்பாடி பழனிசாமி உணர மறுக்கிறார் என்பதுதான் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் உள்ளக்கிடக்கை. ஆனால் தனியாக வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள். அப்படி உள்ளவர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.