டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர் குறித்த அண்ணாமலையின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒரு துறையில் நடைபெறும் ஊழலுக்காக பிரதமரை ஏ1 என்று சொல்லலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு புகாரில் அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் 2026 தேர்தல் கூட்டணி வாய்ப்புகள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: – டாஸ்மாக் முறைகேடு புகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏ1 என்று அண்ணாமலை சொல்வது அதீதமான விஷயமாகும். இது கண்டிக்கத்தக்கது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் எல்லோருக்குமான முதலமைச்சர் ஆவார். மத்தியில் பாஜக 240 இடங்களைத்தானே வாங்கியுள்ளனர். அப்போது மைனாரிட்டி பாஜக என்பீர்களா? மத்திய அரசின் ஏதோ ஒரு துறையில் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் ஏ1 பிரதமர் என்று சொல்ல முடியுமா? அடிப்படையிலேயே அண்ணாமலை சொல்வது மிகவும் அராஜகமான பேச்சு ஆகும். அண்ணாமலை செய்வது வியூ பேங்க் அரசியலாகும். அது வாக்குகளாக மாற வேண்டும் அல்லவா? சரித்திரத்தில் பல தலைவர்கள் வருவார்கள். அவர்கள் மீது விமர்சனம் இருக்கலாம். பெரியார் மீது, அண்ணா மீது, கலைஞர் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்த சாதனைகளை எல்லாம் எந்த வரிசையில் சேர்ப்பார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தில் அரசியல் ரீதியாக ஏதோ பின்னப்படுகிறது என்று எல்லோருக்கு தெரியும். ஆனால் மக்கள் மத்தியில் இருக்கும் பிம்பம் என்பது முக்கியமாகும். மக்கள் தவறாக நினைவித்துவிட்டார்கள் என்றால் கதையே முடிந்துவிடும். எம்ஜிஆர் பற்றிய பிம்பம் என்பது மக்கள் வரைந்ததாகும். அதனால் டாஸ்மாக் விவகாரத்தில் அரசாங்கம் தங்களது பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது கடமையாகும். அண்ணாமலை போன்றவர்கள் அந்த பிம்பத்தை சேதப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். செந்தில் பாலாஜி எதற்காக வேண்டுமென்றாலும் டெல்லிக்கு போயிருக்கலாம். மாலை டெல்லி புறப்பட்டு சென்றால், இரவுதான் அங்கு போய் சேர்வார். இரவில் வழக்கறிஞரிடம் என்ன பேசிவிட முடியும். செந்தில் பாலாஜி, அண்ணாமலை, டாஸ்மாக் ஆகிய மூன்று புள்ளிகளையும் ஒன்றாக இணைத்துதான் கோடு போடுவார்கள். அதுதான் அரசியலாகும். காலையில் திரும்பி வந்துவிட்டார். அதற்கு முந்தைய நாளில் முதலமைச்சரிடம் சட்டமன்றத்திற்கு வெளியே பேசுகிறார். இந்த எல்லா புள்ளிகளையும் இணைத்தால் ஒரு கோலம் வந்துவிடும். அது அலங்கோலமாக கூட இருக்கலாம். ஆனால் கோலம் வந்துவிடும். இப்படியான சூழலில் இதுபோன்ற சர்ச்சைகளை தர்விக்கலாம் என்பது என்னுடைய பார்வையாகும்.
5000 டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் படத்தை ஒட்டப்போவதாகவும், முதலமைச்சர் வீட்டை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் முற்றுகையிடுவோம் என்றும் அண்ணாலை சவால் விடுத்துள்ளார். இதற்கு முன்பு அவர் அண்ணா அறிவாலயத்தின் செங்கலை உருவுவேன் என்று சவால் விட்டார். அதற்கு உதயநிதி அண்ணா அறிவாலயம் அல்ல, அது அமைந்திருக்கும் அண்ணா சாலைக்கு வந்து பாருங்கள் என்றார். ஆனால் இதுவரை அண்ணாமலை போகவில்லை. எதிர்க்கட்சிகள் அப்படிதான் சொல்லும். ஊடகங்களால் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கத்தான் செய்யும். எதிர்கால அரசியல் எதை நோக்கி செல்கிறது. திமுக கூட்டணி, ஒரு வலுவான கூட்டணியாகும். அதில் எந்த உரசலும் இல்லை. ஆன்டி எஸ்டாபிளிஷ்மெண்ட் ஓட்டு கண்டிப்பாக இருக்கும். அது 5 முதல் 10 சதவீதம் வரை இருக்கலாம். அதனால் பழைய ஓட்டுவங்கியை வாங்க முடியாது.
எதிர் அணியை பார்த்தோம் என்றால், விஜய்யின் வாக்கு வங்கியே தெரியாமல், விஜய் இவருடன் சேருவார், அவருடன் சேருவார் என்று பல கூட்டணி கணக்குகளை போடுகிறார்கள். அண்ணாமலை திரும்பும் இடங்களில் எல்லாம் தீயை வைக்கும் அரசியல்வாதி. எந்த கூட்டணியிலும் அவர் சரியாக வர மாட்டார். எந்த பக்கம் திரும்பினாலும் அந்த பக்கம் தீ வைப்பார். சமீபத்தில் அவர் வைத்த தீ என்பது தமிழக வெற்றிக்கழகம். விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட எல்லோரையும் கடுமையாக விமர்சித்துவிட்டார். அதனால் விஜய்க்கு வாய்ப்பு கிடையாது. சரி எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆப்ஷன் வரும் என்று பார்ப்போமானால் அண்ணாமலை அதையும் வந்து வருத்தெடுக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை அண்ணாமலை சொல்கிறார். அந்த சம்பவத்திற்கு பின்னர் நடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. வாக்காளர்கள் எதற்காக ஓட்டு போடுகிறார்கள். எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்பது தனிக்கணக்கு ஆகும். ஊழல் குற்றச்சாட்டு வைப்பதால் மட்டுமே மக்கள் வாக்களிப்பது கிடையாது. 2014ல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2016 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஏன் என்றால் வெவ்வேறு காரணங்களாகும்.
ஒவ்வொரு தேர்தலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். பொது பிம்பம் என்பதுதான் எப்போது முக்கியமானதாகும். அதிமுக என்கிற கட்சி ஜனரஞ்சகமாக உள்ளது. இளைஞர்கள் இன்றும் எம்ஜிஆர் பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருப்பார்கள். திமுக எப்படியான கட்சியாக வளர்ந்து வந்தது என்றால் பொறுப்புணர்வோடு பதில் சொல்வது. அந்த கட்சிக்கு என்று ஒரு பார்வை உள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அந்த பார்வையை காணவில்லை. அண்ணாமலையின் சவாலுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கிறார்.அப்போது அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் சொல்ல வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் சென்று அனைவரும் மாட்டுகிறார்கள். அண்ணாமலை அதையே பெரிதாக நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.