விதைத்தால் அறுவடை செய்யலாம்
– என்.கே. மூர்த்தி
வாழ்க்கை எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நீங்கள் செய்வதற்கும், சாதிப்பதற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கவே செய்யும்.
– ஸ்டீபன் ஹாக்கிங்
நான் பேசும் போது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம் விதைத்தால் அறுவடை செய்யலாம்.
“நீ என்ன விதைக்கிறாயோ அதை அறுவடை செய்வாய்”
என்னால் எதுவும் முடியாது, நானோ பரம்பரை ஏழை, என்னால் என்ன செய்ய முடியும்? என்று எப்பொழுதும் இயலாமை குறித்தும் வறுமையைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தால் தோல்வியை தான் அறுவடை செய்ய முடியும். பேச்சு, சிந்தனை அனைத்தும் இயலாமையை விதைக்கிறது. மனக்காட்சியில் ஏழ்மையை விதைத்தால் அறுவடை வேறு மாதிரி இருக்க வாய்ப்பில்லை.
”கம்பை விதைத்து விட்டு கேழ்வரகை அறுவடை செய்ய முடியுமா?” அதனால் மனக்காட்சியில் ஏழ்மையை விதைத்தால் பரம ஏழையாக மாறுவீர்கள். இது தான் நடைமுறை விதி.
மனக்காட்சியில் வெற்றியை படமாக காண்போமானால், வெற்றி வாசல் கதவை வந்து தட்டும். மனக்காட்சியில் பணத்தை நினைத்தால் பணம் வந்து குவியும். அன்பை விதைத்தால் எல்லோராலும் நேசிக்கப்படுவீர். இது தான் நடைமுறை விதி.
மனிதகுல வரலாற்றில் மிகச்சிறந்த ராணுவ வீரர்களில் ஒருவர் மாவீரன் நெப்போலியன். 1769இல் பிறந்த அவர், இளம் பருவத்திலேயே ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிந்தார். அப்போது அவருக்கு நெஞ்சில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதயத்தில் அடிப்பட்டிருந்த இடத்தை டாக்டர் கத்தியை வைத்து லேசாக கீறிப்பார்த்தார் அந்த நேரத்தில் நெப்போலியன் டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக கத்தியை விட்டு பாருங்கள் இந்த (பிரான்ஸ்) தேசத்தின் வருங்கால சக்ரவர்த்தியின் இதயம் இது தான் என்று சொல்லும் என்றார்.
ஒரு சாதாரண வீரனாக வாழ்க்கையை தொடங்கும் போதே நெப்போலியன் தனது ஆழ் மனதில் ஒரு நாட்டின் சக்ரவர்த்தி ஆக வேண்டும் என்று விதைத்து விட்டார்.
எதைப்பற்றி நாம் தீவிரமாக சிந்திக்கிறோமோ, பேசுகிறோமோ (மனக்காட்சிப்படுத்துகிறோமோ) அப்படியே மாறுகிறோம். இதுதான் நடைமுறை விதி.
தொடரும்…