சிறுபான்மை மக்கள் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லாதபோதும் அவர்களை நம்பவில்லை என்றும், தற்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததன் மூலம் அந்த எண்ணம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்
அண்ணாமலை நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்படுவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலையை கொண்டு வெற்றி பெற்றவிடலாம் என பாஜக நினைக்கிறது. ஒரு கணமான கூட்டணி அமைத்தால், மக்கள் பார்வையில் திமுகவுக்கு கடும் போட்டியளிப்போம் என்று மக்கள் நினைப்பார்கள். அப்போது விஜய், சீமானை ஓரங்கட்டிவிட்டு திமுகவை தோற்கடிக்க சரியான கூட்டணி இதுதான் என்று மக்கள் நினைப்பார்கள். திமுக மீது இனி பல பிரச்சாரங்கள் வரும். திமுக இந்துக்களின் எதிரிகள், நாத்திகவாதிகள், கோவில்களில் கொள்ளையடிக்கிறார்கள் என்றெல்லாம் பல விஷயங்களை பாஜகவினர் சொல்வார்கள். அதேவேளையில் அமலாக்கத்துறை சோதனை போன்றவற்றை கையில் எடுத்து திமுக அரசுக்கு எந்த அளவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஏற்படுத்துவார்கள். ஆனால் அதிமுகவை பக்கத்தில் வைத்துக்கொண்டு பாஜக ஊழல் பற்றி பேசுவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் திமுக தரப்பில் இருந்தும் அதிமுக, பாஜக மீது குற்றம்சாட்டுவார்கள். அதிமுகவில் ஏற்கனவே 8 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றின் மீதான விசாரணைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதிமுக – பாஜக கூட்டணி விவகாரத்தில் அதிமுகவுக்குள்ளே 2 விதமான கருத்துக்கள் உள்ளன. தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் பாஜகவோடு விட்டுக்கொடுத்து போவது நல்லது என்று நினைக்கிறார்கள். பலர் இருவரும் சேர்ந்தால் வெற்றி பெற்று விடலாம் என்றும் நினைக்கிறார்கள். அதேவேளையில் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக பாஜகவுக்கு இங்கே ஒரு கெட்ட பெயர் இருக்கிறது. அந்த அடிப்படையில் திமுக வலிமையாக உள்ளது. இந்த 2 கூட்டணிகளும் மோதும் போது விஜய், சீமான் போன்றவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள். அமித்ஷா சொல்வது போல தொகுதி மறுவரையறை என்பது திசை திருப்பும் விஷயம் கிடையாது. நீட் விவகாரம் என்பது தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான விஷயமாகும். நீட் விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளனர். பாஜகவை தவிர அனைத்துக்கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. திமுக உண்மையில் பிரச்சினைகளை தான் பேசுகிறார்கள். நீட் விவகாரத்தில் நீங்கள் உறுதியாக உள்ளீர்கள் என்றால் பத்திரிகையாளர்களிடம் சொல்ல வேண்டியது தானே.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக பலமான பிரச்சாரத்தை திமுக மேற்கொள்ளும். அதேவேளையில் அதிமுகவின் நம்பிக்கை என்ன என்றால்? திமுக எதிர்ப்பு வாக்குகளும், இந்துத்துவா வாக்குகளும் நமக்குதான் வரும் என்று நம்புகிறார்கள். அது ஓரளவு சரியான அணுகுமுறைதான். அந்த வாக்குகளை வாங்குவதற்கான முயற்சிகளில் அவர்கள் இறங்குவார்கள். நயினார் நாகேந்திரனை எதற்காக மாநில பாஜக தலைவராக போட்டிருக்கிறார்கள் என்றால், முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதற்காக தான். ஓபிஎஸ்-ஐ ஏன் கண்டு கொள்ளாமல் கைவிட்டார்கள் என்றால்? ஓபிஎஸ் இல்லாவிட்டாலும் நயினார் மூலமாக முக்குலத்தோர் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.
பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமக்கப்படுவது ஏன் என்றால்? தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மக்களுக்கு அதிமுக மீது அதிருப்தி உள்ளது. அதனால் குறைந்தபட்சம் பாஜகவில் தலைவராக முக்குலத்தோரை போட்டால் அந்த கூட்டணிக்கு முக்குலத்தோர் மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான் நயினார் நாகேந்திரனை தேர்வு செய்திருக்கிறார்கள். நயினாரை பொருத்தவரை அதிமுக கூட்டணியை சுமூகமாக எடுத்துச் செல்வார் என்று நினைக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் அனைத்து தலைவர்களுடனும் நட்பாக பழகுபவர். அண்ணாமலை போன்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் பேச மாட்டார். அதனால் சுமூகமாக ஒரு நிலையை கொண்டுவருவார் என்று நயினாரை போட்டிருக்கிறார்கள். அதேசமயம், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரும் அண்மை காலமாக பாஜகவுக்கு வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். புதிய தமிழகம், ஜான் பாண்டியன் போன்றவர்களை கூட்டணியில் வைத்திருப்பதன் மூலமாக அவர்களை சமாளித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள்.
பாமக, என்டிஏ கூட்டணியில் இருந்தபோதும், கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்றைக்கு அன்புமணி, அமித்ஷாவை சந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் கூட்டணிக்கான வாய்ப்பை திறந்தே வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் எந்த கூட்டணி நமக்கு சரியாக வரும் என்றும் பார்த்து கூட்டணி வைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். திமுக கூட்டணியில் விசிக இருப்பதால், வேறு வழியின்றி பாமக பாஜக கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி உள்ளிட்ட அனைத்து வாய்ப்பகளையும் திறந்துவைத்துள்ளனர். தவெக உடனும் கூட்டணிக்கான கதவுகளை திறந்துவைத்துள்ளார். பாமகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு கூட்டணி காரணமல்ல. குடும்பத்தில் சில பிரச்சினைகள் உள்ளதே தவிர, கூட்டணியில் எந்த பிரச்சினையும் கிடையாது. அதேபோல், தேமுதிக இடையில் திமுக கூட்டணிக்கு முயற்சி செய்தார்கள். அவர்களை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக சிக்னல் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் தற்சமயத்திற்கு அதை வெளியிடாமல் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணி வந்துவிட்டதால், திமுக கூட்டணி வெற்றி எளிதாகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. திமுக அரசுக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தினகரன் போன்றவர்கள் இருந்தால் பலமான கூட்டணியாகும். அப்படி கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு கடும் சவால் அளிக்கும். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பெரிய சவால் என்ன என்றால்? தமிழ்நாட்டிற்கு எதிரான பல செயல்களை மத்திய அரசு செய்வதுதான். 16-17 சதவிகிதம் வரையிலான சிறுபான்மையினர் வாக்குகள் எடுத்த உடனே திமுக கூட்டணிக்கு கிடைத்துவிடும். அதை தாண்டி அதிமுக – பாஜக கூட்டணி வேலை செய்ய வேண்டி உள்ளது. திமுக கூட்டணிக்கு எதிரான நிறைய விமர்சனங்களை கொண்டு வருவார்கள். மத்திய அரசு எப்படி எல்லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. ஆளுநர் வாயிலாக மசோதாக்களை கிடப்பில் போடுகிறார்கள். இந்தி திணிப்பு முயற்சி போன்றவற்றை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி திமுக எதிர்ப்பு வாக்குகளை பெறலாம் என அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அப்படி எனில் நான் சொன்ன கூட்டணி அமைந்தால்தான் அது சாத்தியமாகும்.
அதிமுக , பாஜக கூட்டணியில் இல்லாத போதும் அவர்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பினார்கள். அதிமுகவும், பாஜகவும் இயல்பான கூட்டணி என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் அதிமுக மென்மையான இந்துத்துவா கட்சி, பாஜக அதிதீவிர இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சிகளாகும். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்கிறார்கள். அவர்கள் பிரிந்திருந்தபோதும் கூட, சிறுபான்மை மக்கள் எப்படி இருந்தாலும் அதிமுக பாஜகவோடு சேர்ந்துவிடும் என்று எண்ணினார்கள். அதனை தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி அதிமுகவினர் உள்ளனர். அதனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழக்கம் போல் திமுகவுக்கு போகும். அதில் கொஞ்சம் விஜய் இழுக்க பார்ப்பார். ஆனால் சீமானுக்கு அந்த வாக்குகள் போகாது. ஏனென்றால் அவர் சிறுபான்மை மக்களை கடுமையாக பேசி விட்டார். விஜய் கொஞ்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரித்தால், திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும். அதனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு நன்மை தான். அதனால் விஜயை தனியாக விட்டு விடுவார்கள். அவர் தனியாக சென்று எந்த அளவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பாரோ, அந்த அளவுக்கு அதிமுக – பாஜக கூட்டணிக்கு நல்லதாகும், இவ்வவாறு அவர் தெரிவித்தார்.