நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வதே ஒரு வாய்ப்பு என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதா அனுப்பப்பட்ட நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள ஒரே வாய்ப்பு என்பது நீதிமன்றம்தான். வழக்கு தொடரும் போது சம்பந்தப் பட்டவர்களிடம் பேசினீர்களா என கேட்பார்கள். நாம் தேவையான அளவுக்கு பேசி விட்டோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை குடியரசு தலைவருக்கு அனுப்பினார்கள். அங்கு எந்த விதமான ஆதரவான நடவடிக்கைகளும் இல்லை.
ஒரு காலத்தில் நீட் தேர்வின் ஆபத்தை உணர்ந்தவர்களாக தமிழ்நாடு மட்டும்தான் இருந்தது. தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பில் அந்த காலத்தில் இருந்தே வலுவானதாக உள்ளது. காமராஜர் காலத்தில் இருந்து அது தொடங்கியது. திமுக அதனை விரிவுபடுத்தியது. மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஏழை மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தனியார் கல்லூரிகளிலும் 50 விழுக்காடு இடம் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது. அப்படி படிக்கும் மாணவர்கள், 2 ஆண்டு காலம் கிராமப்புற பகுதிகளில் பணிபுரிய வேணடும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்தது. அப்படி கிராமப்புற பகுதிகளில் சேவை புரிந்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிடப்படும் என்று அறிவித்தார்கள். இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் இருந்த சுகாதார கட்டமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது.
இன்றைக்கு நீட் தேர்வு பயிற்சிகு 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை முன்பு திருட்டுத்தனமாக வாங்கிய நிலையில் இன்று வெளிப்படையாக செய்கிறார்கள். இதை விட முக்கியமானது என்ன என்றால் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இடம் வழங்குவது கிடையாது. நீட் தேர்வு ஒருவர் 82 % மதிப்பெண்களும், மற்றொருவர் பாஸ் மட்டும் செய்திருக்கிறார்கள் என்றால், பாஸ் செய்த நபரிடம் பணம் இருக்கும்பட்சத்தில் அவருக்கு மருத்துவ இடம் கிடைத்துவிடும். ஆனால் 82% எடுத்த மாணவரிடம் பணம் இல்லாவிட்டால் அவருக்கு படிப்பு கிடைக்காது. நீட் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்று முதலில் தமிழ்நாடு அரசு உணர்ந்து கொண்டது. அடுத்து வசதி இல்லாத மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாது. அதனால்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் எப்படி படித்து மருத்துவர்கள் ஆவார்கள் என்று சிலர் முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு முதல் வருடம் தான் சற்று தடுமாறுவார்கள். 2வது வருடம் தடுமாற்றம் போகும். 3வது வருடம் இயல்பான போட்டி உணர்வு வரும். 4வது வரும் தலைச்சிறந்த நபர்களுடன் இவர்களும் போட்டியிடுவார்கள். மிகச் சிறந்த மருத்துவர்களாக இருப்பார்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு மருத்துவர் ஞானசம்பந்தம் 5 லட்சம் டாலர்களை வழங்கினார். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த அவர், 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர். இன்றைக்கு புற்றுநோயியல் துறையில் மிகச்சிறந்த மருத்துவராக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். எத்தனை உதாரணங்களை வேண்டுமானாலும் சொல்லலாம். இதெல்லாம் நீட் தேர்வு வந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகும் என்று முதலில் உணர்ந்தோம். ஆனால் தற்போது, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இன்றைக்கு நாம் வழக்கு தொடர்ந்தால் நமக்கு ஆதாரங்கள் அதிகமாக உள்ளது. நீட் தேர்வினுடைய தாக்கம் என்பது நன்மைகளை விட தீமைகளே அதிகமாக உள்ளது. பாஜக அரசு இதனை தெரிந்து கொண்டுதான் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அதனால் நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.
நீட் தேர்வு விலக்கு பெறும் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் நிறைவேற்ற முடியாத சில வாக்குகளை அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது. பாஜகவின் 12 ஆண்டு கால ஆட்சியை எடுத்து பார்த்தோம் என்றால், அவர்களது தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏழைகள் இன்னும் ஏழைகளாக ஆகி இருக்கிறார்கள். பணக்காரர்கள் இன்னும் பணக்கார்கள் ஆகி இருக்கிறார்கள். திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியை பார்த்தோம் என்றால், மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்குகிறது, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம என்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள். இவற்றை எல்லாம் மீறி நீட் தேர்வில் நடைமுறை படுத்த முடியாத வாக்குறுதியை சொல்லி விட்டார்கள் என்றால் உண்மைதான். நாம் மத்தியில் அரசு மாறும் என்று நினைத்தோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறலாம் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக திமுகவின் போராட்டம் ஓயாது என்று சொல்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ளாமல் எடப்படி பழனிசாமி, சீமான் போன்றவர்கள் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார்கள்.
வடஇந்தியாவில் அர்னாப் கோஸ்வாமி போன்ற பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள் என்றும். இந்தி மொழியை ஏற்க மறுக்கிறார்கள், இலவசங்களை கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள், வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என்று வட இந்திய ஊடகங்கள் விவாதம் நடத்துகிறார்கள். நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தையுமே அவர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள். இதுபோன்று தான் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக, முற்போக்காக இருக்கிறபோதே வட இந்திய ஊடகங்கள் இதனை பின்னடைவாகவும், விமர்சனமாகவும் முன்வைககிறார்கள்.
ஜெயலலிதா இருந்தபோது ஒரு வருடம் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கினார்கள் கொடுக்கிற அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளபோது, அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு வழங்கினார்கள். இன்றைக்கு ஸ்டாலினுக்கு கொடுக்க மாட்டார்கள். அதிமுக அவர்களது காலில் விழுவதற்கு தயாராக இருந்ததால் ஜல்லிக்கட்டு ஆதரவாக உத்தரவை வழங்கினார்கள். இதெல்லாம் தூக்கி போடப்படுகிற ரொட்டிதுண்டுகளாகும். அடிப்படையை சரிசெய்யாமல் அதிகாரம் எங்கள் கையில் உள்ளது. நான் நினைத்தால் பிச்சை கொடுப்பேன் என்று சொல்வது எதேச்சதிகாரம். அதைதான் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. தொகுதி மறு வரையறை விவகாரத்தில் எப்படி அனைத்து இந்திய அளவுவக்கு கொண்டு சென்றரோ அதேபோல் நீட் விவகாரததையும் தேசிய அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் . பாதிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.