1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஏன் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், மற்ற போராட்டங்களை விட பெரிதாக பேசப்பட்டது?. இன்றைக்கும் பலருக்கு தெரியாத ஒன்று. 1938-இல் ராஜாஜி இந்தியை திணித்தார். போராடினோம். 1948லும் அப்போது இருந்த காங்கிரஸ் கட்சி இந்தியை திணித்தது. எதிர்த்தோம். 1965 ஏன் வந்தது என்றால்? அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது அதில் ஒரு பிரிவில் இந்தி என்பது இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. விடுதலைபெறும் வரை நாட்டின் ஆட்சிமொழியாக ஆங்கிலம் தான் இருந்தது. இந்தி என்பது கிடையாது. அரசியல் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்டு ஒற்றை வாக்கில் இந்தி என்பது இடம்பெறுகிறது. இவ்வளவு நாள் நமக்கு பழக்கமான ஆங்கிலத்தை முழுமையாக அகற்ற முடியாது. ஏற்கனவே நீதிமன்றங்கள், அலுவலக குறிப்பேடுகளில் ஆங்கிலம் இருப்பதால், 15 ஆண்டுகள் இது தொடரும். ஒருவேளை நாடாளுமன்றம் சட்டம் ஏதும் இயற்றாதபட்சத்தில் ஆங்கிலம் என்பது அகன்று, இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்ற அபாயத்தை உணர்ந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
அண்ணா, நாடாளுமன்றத்தில் இருந்தபோது ஆட்சிமொழி தொடர்பான பிரச்சினையை கடுமையாக பேசி, பின்னர் ஆங்கிலமும் தொடரலாம் என சட்டத்திருத்தம் வந்தது. ஆட்சி மொழி சட்டத்திருத்தம் 1963, பின்னர் 1967-ல் ஆங்கிலமும் தொடரலாம் என வந்தது. ஒருவேளை 1965 போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கும். டெல்லியில் இயற்றப்பட்ட சட்டங்களிலேயே இந்தி முழுமையாக செயல்படுத்த முயற்சிக்கிறபோது, தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு வழங்கிதான் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ளது. இப்போதும் நாங்கள் அதே உணர்வை காட்ட காரணம், எங்கள் மொழியை இழக்கத் நாங்கள் தயாராக இல்லை.

மத்திய அரசு நாங்கள் இந்தியை திணிக்கவில்லை திணிக்கவில்லை என்று சொல்விட்டு அதைதான் செய்கிறார்கள். ஏன் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எல்லாம் இந்தியில் பெயர் வைக்கிறார்கள். ஏன் நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடத்தின் அனைத்து இடங்களுக்கும் இந்தியிலேயே பெயர் வைத்துள்ளார்கள்? அலுவல் ஆட்சி மொழிக்குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் உள்ளார். அவரே சொல்லி உள்ளார் விரைவில் இந்தியாவில் எல்லாமே இந்தியில்தான் மாறும் என்று. இப்போது குற்றவியல் சட்டங்களின் பெயர்கள், சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுள்ளது. இப்போது அதனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?. இவை எல்லாம்தான் தந்திரமாக அதிகாரம் இருக்கிறது என்பதற்காக இந்தியை கொண்டுவர முயற்சிக்கிறபோது, ஒரு கட்டத்தில் நிர்பந்தம் காரணமாக ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். இப்போதும் இந்தி படித்தால் மத்திய அரசின் பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு போன்ற பல்வேறு சலுகைகள் உண்டு. சரி இது வளர்ச்சிக்கு எளிதான வழி என்று போகிறபோது தமிழ் விருப்பப்பாடம் ஆகிவிடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, வடமாநில மொழிகளுக்கு ஏற்பட்ட நிலை வந்துவிடும்.
புதிய கல்விக்கொள்கையின் குறிக்கோள் 2035ஆம் ஆண்டில் உயர்கல்வி சேர்க்கையில் 50 சதவீதத்தை தொட வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாடு இப்போதே 49 விழுக்காடு உள்ளது. நாம் எந்த வகையில் பின்தங்கி விட்டோம். இனி பல்கலைக் கழகங்கள் பட்டம் தர தேவையில்லை. அந்தந்த கல்லூரிகளே பட்டம் வழங்கலாம். எம்.பில் என்பது இருக்காது. தமிழகத்தில் குழந்தைகளை ஏன் குறிப்பிட்ட காலத்திற்கு பள்ளிகளில் பெயில் செய்வதில்லை என்றால், அவர்கள் மனம் தளர்ந்துவிடுவார்கள். ஏழைக் குடும்பங்களில் படித்தது போதும் என்று கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். இது ஒரு கொள்கை முடிவு. அதன் காரணமாக இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர தேவையில்லை. கொள்கையை நடைமுறை படுத்துவதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களான மாநில அரசுகள், ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்துப் பேசினார்களா என்றால் இல்லை.
பி.எம். ஸ்ரீ திட்டம் குறித்து தமிழக தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. சில திட்டங்களுக்கு இசைவு தெரிவிக்கிற போது, இதனுடைய பாதிப்புகள் மறைக்கப்பட்டிருக்கும். அல்லது நாங்கள் முன்வைத்ததை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் கூட இருந்திருக்கும். எங்களை பொருத்தவரை கொள்கையில் குழப்பம் என்பது எந்த காலத்திலும் கிடையாது. எந்த நேரத்திலும் நாங்கள் எங்களை சரண்டர் ஆகியதும் கிடையாது. கல்வி மூலமாகத்தான் ஒருவரின் தரத்தை உயர்த்த முடியும் என்ற அடிப்படையில் தாய் மொழியில் கல்வி, உலக அளவில் தொடர்புகொள்வதற்கு ஆங்கிலம் இதுபோதும். மூன்றாவதாக நீ விருப்பப்பட்டால் எதை வேண்டுமானாலும் படி. இவர்கள் என்ன சொல்வது. நாங்களே சொல்கிறோம். எதை வேண்டுமானாலும் படியுங்கள். இப்போது நான் கேட்பது அவர்கள் எங்காவது மூன்றாவதாக தெலுங்கு படித்திருக்கிறார்களா? உ.பி.யில் யாராவது மலையாளம் படித்திருக்கிறார்களா? ம.பி.யில் யாராவது தமிழ் படித்திருக்கிறார்களா? இதற்கொல்லாம் முன்னால் ஒரு கேள்வி. இதில் எத்தனை பேர் ஆங்கிலம் படித்திருக்கிறார்கள்?. பொறுப்பை வைத்து ஒருவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்போடு இருக்க வேண்டும். எல்லோரையும் அனுசரித்து நடக்க வேண்டும்.
இந்தியாவின் தனித் தன்மைகள், மக்களுடைய தனித் தன்மைகள் இவற்றை எல்லாம் பாதுகாக்கிற அளவிற்கு தான் ஒரு அரசாங்கம் இயங்க வேண்டும். அதனுடைய சட்டங்களும், கொள்கை முடிவுகளும் இருக்க வேண்டும். ஒரு இடத்திற்கு நான் வருகிற போது அந்த இடத்திற்கு தகுந்தார் போல் என்னை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, எனக்கு தகுந்தாற் போல் அந்த இடத்தை மாற்றுகிறேன் என்றால் அது சுயநலத்தின் வெளிப்பாடு. புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப் படுகிறபோது போதிய ஆசிரியர்கள் கிடையாது. போதுமான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் கிடையாது. ஆனால் இதை நீங்கள் உலகத் தரத்திற்கு கொண்டுவர நினைக்கிறீர்கள். அதற்காக வெளிநாட்டில் இருந்து பல்கலைக் கழகங்களை கொண்டு வருகிறீர்கள். அவர்கள் என்ன அளவிற்கு கல்வி கட்டணம் வசூல் செய்வார்கள். அப்போது பணக்காரர்கள் மட்டுமே அங்கே படிப்பார்கள். இப்போது நாங்கள் நீட் தேர்வை எதிர்ப்பது போன்றுதான் கியூட் தேர்வு வரப்போகிறது. சாதாரண கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வரப்போகிறது. நல்ல கட்டமைப்பு, கல்விக் கூடங்கள் உள்ள தமிழ்நாட்டில் கல்வி பயில்வதற்கான போட்டியில் வடநாட்டில் இருந்து வருவார்கள். இங்கிருக்கும் கிராமப்புறத்தில் இருக்கும் பிள்ளைகள், இடஒதுக்கீட்டில் வந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு கல்விக்காக செலவு செய்கிற தொகை 2.5 சதவீதம். நாங்கள் செலவு செய்வது 10.9 சதவீதம். அப்போது நீங்கள் எங்களை சமரசம் செய்து இருப்பதை எல்லாம் கொடுத்திரு என்கிறீர்கள். ஏற்கனவே வாங்குகிற வரியை கொடு நாங்கள் பிரித்துக் கொடுத்துவிட்டு எனக்கு எதாவது இருப்பதை காடுப்போம் என்பது போல, என்னுடைய கல்வியிலும் நீங்கள் கை வைப்பீர்கள் என்றால் நாங்கள் எப்படி விட்டுத்தருவோம். அது அடுத்த தலைமுறையை பற்றியது. என்மொழியை பற்றியது. என் மண்ணை பற்றியது. எங்களுடைய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பொருத்தது. நாங்கள் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். வீழ்ந்து விடவும் மாட்டோம். வெற்றி நமக்குதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.