தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவருக்கு கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால் இப்படி பேச மாட்டார். தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் போராடி வருகின்றன. அப்படி உள்ளபோது திமுகவை மட்டும் குறிவைத்து இந்த கேள்வியை எழுப்ப வேண்டியதன் தேவை என்ன வந்தது? அரசியல் கட்சிகளை சேர்ந்த தனி மனிதர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து குற்றம்சாட்டுவது ஏன்? மத்திய அரசு என்பது எல்லோருக்கும் பொதுவான அரசு. அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான அரசு. ஆனால் இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் முன்னுரிமை வழங்கி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாட்டின் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முயல்வது அநீதி அல்லவா? மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.
கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் உள்ளபோது, கல்வி தொடர்பாக மாநில அரசு எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது. அப்படி இருக்கும்போது அதை மாற்றி அமைத்து நான் சொல்வதைதான் நீங்கள் கேட்க வேண்டும் என சொல்வது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு கல்விக் கொள்கையை வடிமைத்து, அனைத்து தரப்பு மக்களிடமும் கல்வியை கொண்டுசேர்த்து இன்று நாட்டின் மற்ற பகுதிகளை விடவும் கல்வித் தரத்தில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், ஒரு பிற்போக்குத்தனமாக கல்வி முறையை நம் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் இந்தித் திணிப்பை, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம் என்றால் அதில் ஒரு நியாயம் உள்ளது.
பாஜகவின் சமூக வலைதள பக்கத்தில் மும்மொழி கொள்கையின் கீழ் இந்த மொழிகளை எல்லாம் படிக்கலாம் என பட்டியலை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனரா? என்றால் இல்லை. எந்த மொழிக்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் தான். அப்படி இருக்கும்போதும் மற்ற எந்த மொழிகளில் பிள்ளைகள் படிக்க விருப்பம் தெரிவித்தாலும், அந்த மொழிக்கு ஆசிரியர் இல்லை என்பீர்கள். அப்போது இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் வேறு வழியில்லாமல் மூன்றாவது மொழியாக இந்தியை தான் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நேரடியாக இந்தி என்று சொன்னால் எதிர்ப்பு வருகிறது என்பதால், மும்மொழி கொள்கை என்று முலாமை பூசி மறைமுகமாக இந்தியை திணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம், உருது போன்ற வேற்று மொழிகளை ஏராளமானோர் படிக்கின்றனர். மொழிச் சிறுபான்மையினர் தங்கள் தாய் மொழியை படிக்க தேவையான கட்டமைப்புகளை மாநில அரசு ஏற்படுத்தி தருகிறது. இங்கே மொழியை யாரும் திணிக்கவில்லை. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு நிறைவேற்றி தருகிறது. அதுபோல தமிழ்நாட்டில் உள்ள இந்தி பேசும் மக்கள், தாங்கள் இந்தி படிக்க வசதிகளை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தால் மாநில அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால் மத்திய அரசு, பெரியண்ணன் மனப் பான்மையோடு வந்து மாநிலங்கள் மீது இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று திணிக்கிறது. இதனைதான் நாம் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்
மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்காமல் புறக்கணித்துள்ளது, அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு அங்கமாகவே பார்க்கவில்லை என்பதைதான் காட்டுகிறது. தமிழ்நாட்டில் பிரிவினை வாதம் பேசுவதாக தமிழக மக்கள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் பாஜக முத்திரியை குத்தி வருகிறது. தற்போது பேரிடர் வழங்குவதில் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்காதது யார் மத்திய அரசுதானே. உ.பி., பீகாரை போலதான் தமிழ்நாடு என நினைத்திருந்தால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியது போல தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பார்கள் அல்லவா? அப்படி என்றால் மத்திய பாஜக அரசுக்குதான் தமிழ்நாட்டின் மீது வெறுப்பு வன்மம் உள்ளது. இவ்வளவு இடையூறுகளுக்கு பின்னரும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறது.
பேரிடரின் போது தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக பாராட்டு தெரிவித்தனர். மத்திய அரசின் நிதியுதவி இல்லாதபோதே தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தள்ளது என்றால், நிதியுதவி கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கும் அல்லவா? மத்திய அரசின் நிதி என்பது மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி தானே. ஆந்திரா, பீகாருக்கு வழங்குவது போல வாரி வழங்க கேட்கவிலலை. மாறாக நமக்கு வர வேண்டிய நிதியைத்தான் மத்திய அரசிடம் கேட்கிறோம். தமிழ்நாடு மொழிப் பிரச்சினை, கல்வி பிரச்சினை, பேரிடர் நிவாரண நிதி என அனைத்து விவகாரத்தில் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறது. அதனால்தான் நீதிமன்றத்திற்கு வழக்குகள் செல்லும்போது மாநில அரசுக்கு எதிராக எந்த குறையும் சொல்வது இல்லை. மத்திய அரசின் செயல்பாடு முழுக்க முழுக்க பழிவாங்கும் போக்கு ஆகும். தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
பாஜக என்றைக்கும் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காது. நீட் தேர்வில் விலக்கு கோரி மாணவர்கள் உயிரை விடுகிறார்கள். ஆனால் அண்ணாமலை உயிரே போனாலும் நீட் விலக்கு தர மாட்டேன் என சொல்கிறார். இன்றைக்கு பேரிடர் நிதியை யாருக்கு கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்கு கொடுக்க மாட்டேன் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்போது பாஜக தமிழ்நாட்டிற்கு எதிரான சித்தாந்தங்களையும், செயல் திட்டங்களையும் கையில் வைத்துள்ளனர். அதனால் தான் தமிழ்நாடு பாஜகவை எதிர்க்கிறது. ஏனென்றால் அரசியல் என்று பார்த்தால் திமுக மும்மொழி கொள்கையை எதிர்த்தால், அதிமுக அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பாட்டை எடுக்க வேண்டும். அதேபோல் விசிக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பாமகவும் எதிர்க்கவே செய்கிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கேட்ட பிறகும் கூட பாஜக எதிர் நிலைப்பாடு எடுக்கிறது. அப்படி என்றால் பாஜக தமிழ்நாட்டிற்கு எதிராக உள்ளது என்றுதான் அர்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.