ஜனநாயகத்திற்கு விரோதமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு காரணமாகவே நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியின் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பு செய்யப்படாததன் பின்னணி குறித்து சுப.வீரபாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- நான் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. நான் தனித்துதான் நிற்கிறேன், தனித்துதான் களம் காண்கிறேன் என்று சீமான் சொல்கிறார். அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாகும். பாஜகவுடன் நின்று பேசினால், அது பயன் இல்லை. ஹெச்.ராஜா எதிர்த்து பேசுவது மட்டுமல்ல. நிர்மலா சீதாராமன் பேசினாலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அப்போதுதான் அவர்கள் கணக்கு பண்ணுகிறார்கள் பார்ப்பனர் சமூகத்தில் பிறந்தவர்கள் பெரியாரை எதிர்த்தால், அது பார்ப்பனர் அல்லாதோரின் ஒற்றுமையைதான் அதிகரிக்கும். எனவே அங்கிருந்து அடியாளை தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு சீமான் ஒன்றும் புதிது அல்ல. அவருக்கு முன்பு பலர் இருந்திருக்கிறார்கள். திமுகவை எதிர்த்து எதிர்த்து பேசி, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டை ஓராண்டு முழுவதும் தமிழ்நாட்டில் நடத்தி, அந்த காலகட்டத்தில் தமிழ் புலவர்கள் எல்லாம் மா.பொ.சி உடன்தான் இருந்தார்கள். கடைசியாக அவர் வந்து சேர்ந்த இடம் எது? என்றும் தெரியும். மா.பொ.சி, தன்னுடைய எனது போராட்டம் என்கிற புத்தகத்தில் எழுதியுள்ளளார், ராஜாஜி என்னை தன்னுடைய அபிமன்யு என்று சொல்வார். நான் நுழைய முடியாத இடத்தில் கூட மா.பொ.சி நுழைந்துவிடுவார் என்று. அதேபோல பாண்டே நுழைய முடியாத இடத்தில் கூட சீமான் நுழைந்து விடுவார். இயக்குகிறவர்கள் வேறு யாரோ. இயங்குகிறவர்கள் இவர்கள். ஆனால் கூலிக்கு வேலை செய்தவர்கள் யாரும் வரலாற்றில் நிற்கமாட்டார்கள்.
நீயா? நானா? நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கை தொடர்பான எபிசோட் ஒளிபரப்பவில்லை. நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையாக இருப்பதற்கு பல மடங்கு வாய்ப்புகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பு இயல்பாகவே ஜனநாயகத்திற்கு எதிரானது. நீயா, நானாவில் ஒரு விவாதம் நடைபெற்றதாகவும், இரு மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியவர்கள் மிக அழுத்தமாக கருத்துக்களை வைத்ததாகவும் சொல்லுகிறார்கள். எனவே எதிர் அணியில் கலந்துகொண்டவர்கள் மேலே போய் சொல்லி அழுத்தம் கொடுத்து, அந்த நிகழ்ச்சியே வெளிவராமல் செய்துவிட்டார்கள் என்று சமுக வலைதளங்களில் சொல்லப்படுகிறது. அது நியாயமாக அல்லது உண்மையாக இருப்பதற்கு ஆயிரம் வாய்ப்புகள் உள்ளது. மிக எளிமையான ஒரு காரணம் எப்போதும் ஆர்எஸ்எஸ் ஜனநாயத்திற்கு எதிரானது. எதிர்க்கருத்து வரக்கூடாது என்றுதான் கருதுவார்கள்.
அண்மையில் ராஜஸ்தானில் போட்டித் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த இளைஞரை ஹோலி பண்டிகை கொண்டாட வில்லை என்பதற்காக அடித்துக் கொன்றார்கள். பட்டியல் இன மக்களை படிக்கக்கூடாது என்று சொன்னவர்கள் இஸ்லாமியர்களா? இல்லை கிறிஸ்தவர்களா? இல்லை சொன்னவர்களும் இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்களும் இந்துக்கள். ஏனென்றால் இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல. அது பல்வேறு மதங்களின், பல்வேறு விதமான கேட்பாடுகளின், பல்வேறு விதமான வழிபாடுகளுடைய கூட்டுக்கதம்பம். தேவை என்றால் எல்லோரும் ஒன்று என்பார்கள். இல்லாவிட்டால் எல்லோரும் சண்டையும் போட்டுக்கொள்வார்கள். இந்த பாசிச தன்மைத்தான் ஆர்எஸ்எஸ் ஆகும். சீமான் அதற்கு பொருத்தமான ஆள். அவருடைய பேச்சில் எப்போதும் ஜனநாயகமே இருக்காது.
பாண்டே, துக்ளக் குருமூர்த்தி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு பகுதி ஆவார்கள். அவர்கள் சேர்ந்துதான் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். அவர்கள் பல தளங்களில் இருப்பார்கள். எல்லோரும் எம்.பி. ஆக வேண்டும் என்றும், எல்லோரும் பதவிக்கு வர வேண்டும் என்றும் ஆசைப்பட மாட்டார்கள். யாருக்கு எந்த இடம் என்று தெளிவாக இருப்பார்கள். இன்று அண்ணன் சீமான், அண்ணன் சீமான் என்று சொல்லுகிறார்கள். நாளையே அவரை தூக்கி கீழே போட்டு விடுவார்கள். அவர்கள் கறிவேப்பிலைகளாக தான் பயன்படுத்துவார்கள், பின்னர் தூக்கி எறிந்து விடுவார்கள். அவர்கள் ராஜாஜியை போற்றுகிறார்களே தவிர, என்றைக்காவது மா.பொ.சியையும், ஆதித்தனாரையும் போற்றியுள்ளனரா? அந்த நேரத்திற்கு பயன்படுத்தி கொண்டார்கள். நாளைக்கு சீமானுக்கும், அவரது பேராசானுக்கும் வரலாற்றில் ஒரு இடமும் இல்லை. சரியாக இருந்தால், ஏற்க வேண்டியவர்களோடு, ஏற்க வேண்டிய கொள்கையோடு இருந்தால் சீமான் என்றைக்கும் போற்றப் பட்டிருப்பார்.
தனித்து நின்றே பல தோல்விகளுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாக சீமான் சொல்கிறார். அது உண்மைதான். நாதகவின் வாக்கு வங்கி ஒரு சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அவ்வளவு தான், இத்துடன் முடிந்துவிட்டது. தற்போதும் சீமானுக்கு பெரிய கெடுதலை செய்தது நாம் இல்லை. அவரது தம்பியாகிய விஜய்தான், சீமானுக்கான கடைசி அத்தியாயத்தை எழுதப் போகிறார். சீமானிடம் இருக்கும் தம்பிகள்தான், அந்த தம்பியிடம் சொல்லப் போகிறார்கள். அங்கே ஒரு கூட்டணி வந்துவிடும் என்று கருதி முயற்சித்தார். ஆனால் முழுமையாக கூட்டணி இல்லை என்றாகிவிட்டது. கூட்டணி இல்லை என்ற பின்னர்தான் அண்ணணாவது, தம்பியாவது என்று சொல்லிவிட்டார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.