யார் இந்த தந்தை பெரியார்?
தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என்றும், கடவுள் மறுப்பாளர் என்றும், தத்துவ மேதை என்றும், சாதி, மதத்தை எதிர்த்து போராடிய போராளி என்றும் நமக்கு தெரிந்த சாதாரண அளவீடுகளுக்கும் அகப்படாத ஒரு அபூர்வமான மனிதர் தந்தை பெரியார்.
அவர் யார் என்பதை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்துக் கொள்வது கடினம். அப்படி வரித்துக் கொண்டு அவரை நாம் புரிந்துக் கொள்ளவும் முடியாது.
அவர் தனது சுயத்தை, அகந்தையை, ஆளுமையை, அகத்தின் முகத்தை அழித்துக் கொண்டு தான் யார் என்பதை விட தான் யாருக்கானவர் என்ற அடையாளத்தோடு வாழ்ந்தவர் பெரியார்.
அவர் ஒரு அசாதாரண மனிதர். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்தார். அதில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நம்மோடு பேசினார். நமக்காக எழுதினார். நமக்காக நம்முடன் போராடினார். நம்மோடு சண்டையிட்டார். நமக்காகவே வாழ்ந்தார்.
மனிதனின் நம்பிக்கைகள் பற்றி, மதத்தைப் பற்றி, சாதியைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி, நாட்டுப்பற்றைப் பற்றி, விடுதலையைப் பற்றி, சுதந்திரத்தைப் பற்றி, மொழியைப் பற்றி, பெண் விடுதலைப் பற்றி, விழிப்புணர்வு பற்றி மிகவும் ஆக்ரோஷத்துடன் பேசினார், சில நேரங்களில் கனிவுடன், மிகவும் அக்கறையுடன் பேசினார், எழுதினார்.
அவருடைய பேச்சுகள், எழுத்துக்கள் அனைத்தையும் நாம் ஒன்று சேர்ந்து தொகுத்து பார்த்தால் புத்தரைப் போன்று, சாக்ரடீஸ் போன்று பகுத்தறிவு தீபத்தை பற்ற வைத்தது தெரியும். ஒவ்வொன்றையும் கேள்வியாக்கினார். கேள்வி கேட்டார். அவை அனைத்தும் நம்மை நோக்கி எறியப்பட்ட கேள்விகள், நமக்காகவே எழுப்பப்பட்ட கேள்விகள், நம்மோடு சேர்ந்து தேடிய விடைகள், ஒவ்வொறு கேள்வியும் நமது மூட நம்பிக்கைகளை உடைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒளி விளக்குகள்.
பெரியார் பெரும் தத்துவக் கோட்பாடுகளை எதுவும் நமக்கு விட்டு செல்லவில்லை. காலம் காலமாக, யுகம் யுகமாக நமக்குள், நமது மனக்குகைக்குள் நாமே வரைந்துக் கொண்ட நிழல் கதைகளை, தவறாக கட்டமைத்துக் கொண்ட பொய்மைகளை நம் கண்ணெதிரே போட்டு உடைத்து காட்டினார். நாம் நம்பிக்கொண்டிருந்த அனைத்தும் வெறும் கற்பனைக் கதைகள் என்றும் மாயை என்றும் நிருபித்து காட்டினார்.“உன்னைவிட, உன் கருத்தை விட, கொள்கையை விட , வெங்காயம் விளக்கமாறை விட உன் அறிவு பெரியது, அதை கொண்டு சிந்தித்துப் பார்”, என்று மூளையில் அறைந்து அறிவுறுத்தினார்.
பெரியாரின் பேச்சும், எழுத்தும் சாதாரண எளிய நடையில் தான் இருக்கும். ஆனால் யாரோ பிடரியில் அடித்ததைப் போன்று சுருக்கென்று உரைக்கும்.
மனித குலம் இன்று தன்னைத்தானே அடித்துக் கொண்டு அழித்துக் கொள்கின்ற அணுயுகத்தின் விளிம்பில் நிற்கிறது. தேசத்தின் பெயரிலும் , மதத்தின் பெயரிலும், கொள்கை கோட்பாடுகளின் பெயரிலும் உலகம் பிளவுப்பட்டு, மனித இனம் சிதைந்து கிடக்கிறது. வல்லரசுகள் என்றும், நாடுகள் என்றும், மொழிகள் என்றும், இனங்கள் என்றும், மதங்கள் என்றும், சாதிகள் என்றும், வர்க்கம் என்றும் மானிடம் சிதறுண்டு, முரண்பட்டு மோதிக் கொள்கிறது.
இனவாதம், மதவாதம் என்ற வெறிப்பிடித்த சித்தாந்தங்கள் வன்முறையை தூண்டி வருகிறது. மனிதனை மனிதன் அழித்து வருகிறான். இதற்கெல்லாம் காரணம் என்ன? மனிதனிடம் நேர்மையும், நாணயமும் செத்துப் போனது ஏன்? மனிதன் அன்பானவனாகவும், ஒழுக்கம் உள்ளவனாகவும் முழுமையான மனிதனாக வாழ வேண்டும் என்றால் மனிதனுக்கு பகுத்தறிவு வளர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மனிதன் உருவாக்கிய நாகரீகங்கள் அழிந்து விட்டது. அவன் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம் இடிந்து விழுந்தது. சமுதாய அமைப்பு முறைகள் சிதைந்து வருகிறது. மீண்டும் ஒரு உண்ணதமான சமுதாய அமைப்பை உருவாக்க, கட்டமைக்க மனிதன் முயற்சி செய்து வருகிறான். மனிதன் சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல், அவனுடைய பகுத்தறிவு வளராமல் அவனால் கட்டமைக்கப்படும் சமுதாயம் மீண்டும் முரண்பாடுகள் உள்ள சமுதாயமாகவே அமையும்.
இந்த சமுதாய அமைப்பு தனி மனிதனின் அறிவுக்கு புறம்பானதாகவும், தனி மனிதனை சிந்திக்க விடாமல் ஆட்டிப் படைக்கும் அமைப்பாக உள்ளது.
தனி மனிதனின் கல்விக்கு, தனி மனிதனின் அறிவுக்கு, ஒழுக்கத்தின் முன்னேற்றத்திற்கு இந்த சமுதாயம் இல்லாமல் அந்த தனி மனிதனை நசுக்குவதிலும், அந்த தனி மனிதனை கருத்துக்காகவும், கொள்கைக்காகவும் பலி கொடுத்து வரும் சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக எப்படி இருக்கும்?
சமுதாயம் என்பது எனக்கும் அவனுக்கும், எனக்கும் மற்றவருக்கும் இடையில் உள்ள உறவுகள் தான். மனித உறவுகளில் ஒட்டுமொத்தமும் சிக்கல் நிறைந்ததுதான். அந்த உறவில் தனி மனிதனின் அகமும் புறமும் இருட்டில் பாதை தெரியாமல் தடுமாற்றம் அடையும்போது, மதம் போதித்த கட்டுக்கதைகளில், பொய்மைகளில் புதைந்து குழம்பும்போது, எனக்கும் உனக்கும் புரிதல் இல்லாதபோது முரண்பாடு ஏற்படுகிறது. இப்படி முரண்பாடுகள் உள்ள உறவுகளில் நல்ல சமுதாயத்தை எப்படி உருவாக்க முடியும்?
இந்த முரண்பாடு உள்ள உறவுகளை, முரண்பாடு உள்ள சமுதாயத்தை பார்த்து பெரியார் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்? ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள முரண்பாடுகளை கடுமையாக எதிர்த்தார்.
பெண்கள் பிள்ளைகள் பெரும் இயந்திரமா? பெண்கள் கல்வி கற்க வேண்டும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும், பெண்கள் தன் விருப்பம் போல் வாழ வேண்டும் என்று பெண்களின் விடுதலைக்காக காலம் முழுவதும் பெரியார் பேசினார். அதற்காகவே அவரை தந்தை பெரியார் என்று பெண்கள் அழைத்தார்கள்.
சமுதாயம் மாற்றம் என்பது தனி மனிதனிடம் இருந்து தொடங்க வேண்டும். தனி மனிதன் தன் அறிவை பயன்படுத்தாமல், ஒரு செயலை ஏன் செய்கிறோம் என்று சிந்திக்காமல், ஒரு கருத்து சரியானதா தவறானதா என்று ஆய்வு செய்யாமல் யாரோ எழுதி வைத்த கட்டுக்கதைகளையும், சடங்குகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு பின் தொடர்ந்தால் அந்த சமுதாயத்தில் எந்த மாற்றமும் நிகழாது.
சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் மனிதனுக்கு அறிவு முக்கியம், சிந்திக்கும் ஆற்றல் முக்கியம். ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு முக்கியம் என்று பெரியார் வலியுறுத்தினார்.
இந்த உலகமும் சமூகமும் என்னிடம் இருந்துதான் தொடங்குகிறது. நான் இல்லாதபோது இந்த சமூகமும் உலகமும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த சமூகமும் உலகமும் என் சிந்தனையின் வெளிப்பாடாகவும், என் அறிவின் வெளிப்பாடாகவும், என் ஆசையின் வெளிப்பாடாகவும், என் கனவுகளின் வெளிப்பாடாகவும், என் கோபத்தின் தோற்றமாகவும், என் வெறுப்பின் வெளிப்பாடாகவும், என் எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இந்த சமுதாயம், உலகம் இருக்கிறது.
நானே உலகமாகவும், சமுதாயமாகவும் இருக்கிறேன். நானாகவே உள்ள இந்த சமுதாயத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என்றால் அந்த மாற்றம் என்னிடம் இருந்து தொடங்க வேண்டும். அந்த மாற்றத்திற்கான பகுத்தறிவு புரட்சி என்னிடம் இருந்து தொடங்க வேண்டும்.
இப்படி சமுதாயத்தின் மீது மிகுந்த சிந்தனையும், பகுத்தறிவும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரவேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
ஆயிரமாயிரம் கோயில்களை கட்டினோம். அந்த கோயிலுக்குள் எண்ணற்ற கடவுள்களை கொண்டுவந்து குடியமர்த்தினோம். எதற்காக வாழ்கிறோம் என்று அர்த்தம் இல்லாத வாழ்க்கையில், குழப்பமான வாழ்க்கைக்கு அந்த கோயில் மூலமாகவும், கடவுள்கள் மூலமாகவும் அர்த்தம் பிறக்கும் என்றும் குழப்பங்கள் தீரும் என்றும் நம்பிக்கை வைத்து வணங்கி வந்தோம்.
ஆனாலும் நமது மனப்போராட்டாத்திற்கும், மனக்குழப்பத்திற்கும் தீர்வுகள் கிடைக்க வில்லை. நமது மனம் கனவு உலகில், உண்மைக்கு புறம்பான உலகில், பொய் கதைகளில் அகப்பட்டுக் கொண்ட மனதால், சடங்குகளிலும், சாஸ்த்திரங்களிலும் சிக்கிக் கொண்ட மனதால் உண்மையை கண்டுகொள்ள முடியாமலும், உண்மையை தேடும் முயற்சியில் இறங்க முடியாமலும் தவிக்கிறது.
உண்மையை தேடவும், உண்மை என்றால் என்ன என்பதை கண்டுப்பிடிக்கவும் ஒரு குருவை தேடுகிறோம், ஆசிரமத்திற்கு செல்கிறோம், கோயில் கோயிலாக அலைந்து கடவுள் சிலைகளை கட்டிப்பிடித்து கதறி அழுகிறோம். ஆனாலும் மனக்குழப்பம் தீரவில்லை. நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை.
சுயமாக சிந்திக்காமல், தன் அறிவை பயன்படுத்தாமல், விழிப்புணர்வு இல்லாமல் மற்றவர்களின் கருத்தை, மற்றவர்களின் கொள்கையை, யாரோ, எப்பொதோ பேசியதை, எழுதியதை உள்வாங்கிக்கொண்டு பழைய எண்ணத்தையே மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் நமது மனமும், அறிவும் ஒருவகையில் செத்துப்போன பழைய மனமாகவும்,செத்துப்போன அறிவாகவும் தான் இருக்கிறது. அந்த மனதில் இருந்து எவ்வித மாற்றமும் நிகழாது.
நமது பழைய மனமும், பழைய அறிவும் பயிற்றுவைக்கப்பட்ட மனம், அறிவு. அது செய்த செயலை மட்டுமே மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும். அந்த மனம், அறிவு இறக்க வேண்டும். அந்த மரணத்தில் இருந்து புதிய மனம், புரட்சிகரமான பகுத்தறிவு பிறக்கவேண்டும். அந்த புரட்சிகரமான பகுத்தறிவு மட்டுமே மனித விடுதலையை ஏற்படுத்தும். அப்பொழுதுதான் இந்த சமுதாயமும் விடுதலை அடைந்து பகுத்தறிவு மிகுந்த சமுதாயமாக மாறும். இதுதான் தந்தை பெரியார் விரும்பிய அறிவு புரட்சி.