தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தொடர்பாக பத்திரிகையாளர் செந்தில் வேல் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழர்கள் இரும்பை உருவாக்கி பயன்படுத்துவதில் முதன்மையானவர்கள். 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அறிவை பெற்றிருந்தனர் என மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆரியர்கள்தான் முதன் முதலில் இரும்பை பயன்படுத்தும் அறிவை பெற்றிருந்தனர் என்று நமது பாட புத்தகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரலாற்றை முறியடித்திருக்கிறது, மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள். ஆரியம் தொன்மையானதா, தமிழர் நாகரிகம் பெரியதா என்பது தான் போட்டி. இதில் தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என இந்த அகழாய்வு முடிவுகள் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது. அதன் ஒரு அடுத்தக் கட்டம்தான் மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள். நாம் சமஸ்கிருதத்தை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நிலையில், சீமான் சமஸ்கிருதத்தை பாதுகாத்து, தெலுங்கை எதிரியாக முன்னிருத்துகிறார். தமிழை நீஷ பாஷை என்று சொன்ன சங்கராச்சாரியாரை எதிர்த்து இதுவரை ஒரு வார்த்தை பேசியது இல்லை. ஆனால் தமிழுக்கு தொண்டு ஆற்றிய, தமிழில் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்த பெரியாரை எதிர்த்து பேசி கொண்டே இருப்பார். இன்றைக்கு முதலமைச்சர் அதை அடித்து உடைத்துள்ளார்.
கலைஞர் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பூம்புகார் நகரம் இலக்கியத்தில் எப்படி இருந்ததோ அப்படி கட்டி எழுப்பினார். அதேபோல் கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்தார். ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழர்களின் நாகரிகத்தை தொன்மையை உலகிற்கு உரக்க சொல்லுகிறது. எனவே அதனை மூடுங்கள் என்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர் மாநில அரசுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் கீழடி அகழாய்வை தொடர்ந்ததுடன், மிக விரைவாக ஒரு அருங்காட்சியகத்தை அமைத்து திறந்து வைத்தார். அது மட்டுமின்றி இன்று கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகத்திற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே நெல்லையில் பொருநை ஆற்றின் கரையில் பொருநை நதி நாகரிகத்தை எடுத்துரைக்கும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து தமிழர்களின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்து கொண்டிருக்கிறது திமுக அரசு. அதனுடைய ஒரு நீட்சியாக இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த முடிவு. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் அகழாய்வில் கிடைத்த உருக்கப்பட்ட இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் கரிம ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 5,300 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்தது. அப்படி என்றால் ஆரியர்களுக்கு முன்பாகவே நாம் இரும்பை உருக்கி பயன்படுத்தும் அறிவோடு இருந்துள்ளோம்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ஒரு அகழாய்வு முடிவுகள் வெளிவந்தது. முதுமக்கள் தாழியில் இருந்த புதைக்கப்பட்ட நெல், தவிடு ஆகியவை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை முடிவில் அந்த நெல் மணிகள் 3,150 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில் உலகின் பல நாடுகளில் மக்கள் காடுகளில் நாகரிகம் இன்றி சுற்றித்திரிந்தனர். பல நாடுகளில் வேளாண்மை என்றால் என்ன என்று தெரியாமல் ஆதிவாசிகளாக இருந்தனர். ஆனால் 3,100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமூகம் என் உழவு செய்து, முறையான வேளாண் சமுதாயமாக வாழ்ந்தது என்றால் அது நமது தமிழ் சமூகம்தான். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் உலகிற்கு சொல்கிறது.
மதுரை மாவட்டம் புள்ளிமான் கோம்பையில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்படுகிறது. அந்த கல்வெட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட அந்துவன் என்ற ஆடுமேய்க்கும் இளைஞரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டு பேரரசர் அசோகர், சந்திரகுப்த மவுரியருக்கு வைத்த கல்வெட்டைவிட பழமையானது ஆகும். அப்படி எனில் தமிழர்கள் எவ்வளவு பழமையானவர்கள் என கல்வெட்டு வாயிலாக உலகிற்கு அறிவித்தோம். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க நாணயத்தில் கோவை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
தமிழர் நாகரிகம் என்று சொன்னால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆமாம் ஆமாம் நாங்களும் தமிழர்கள் தான் என்று வருவார். ஆரியர்கள் ஒரு பக்கம் வேத நாகரிகம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தமிழர் நாகரிகம் தொன்மையானது என்று சொன்னால் நாங்களும் தமிழர்கள்தான், ஏனென்றால் நாங்கள் தமிழ் பேசுகிறோம் என்று வந்துவிடுகிறார்கள். அப்போது, ஆரியத்திடம் இருந்து தமிழர்களை விலக்கி காட்ட வேண்டி தேவை உள்ளது. எனவே மொழியின் அடிப்படையில் நாம் தமிழர்கள், ஆனால் மரபின அடிப்படையில் நாம் திராவிடர்கள். அந்த அடிப்படையில் இது ஆரிய – திராவிட போர் என்கிறோம். திராவிட நாகரிகம் என்று சொல்கிறோம். இதை சொல்வதால் ஆரியர்கள் அச்சப்படலாம். ஆனால் சீமானுக்கு ஏன் துடிக்கிறது?. ஏனென்றால் ஆரியர்கள் எதை கண்டு அச்சப் படுகிறார்களோ, அதன் மீது சீமானுக்கு கோவம் வருகிறது. திராவிடம் என்ற சொல்லால் தமிழர்களுக்கு என்ன தீங்கு. இது ஆரியர்களை காப்பாற்றும் முயற்சி ஆகும்.
மத்திய அரசு வேதகாலம் தொன்மையான நாகரிகம் என நிருவுவதற்கு ஒரு குழு அமைத்து, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. சமஸ்கிருத வளர்ச்சிக்கு தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் தமிழுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. தமிழ், தமிழர் நிலம் சார்ந்த ஆய்வுகளுக்கு எந்த ஆதரவையும் ஒன்றிய அரசு தருவது இல்லை. மத்திய அரசு மீண்டும் மீண்டும் தங்களது ஆரிய நாகரிகம் தொன்மையானது என நிரூபிக்க முற்படும்போது, நாம் அதை உடைத்து நம்முடைய திராவிட நாகரிகம் தொன்மையானது என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அரசு அதை செய்துக்கொண்டிருக்கிறது. எனவே அரசினுடைய செயல்பாட்டை முடக்குவதற்காகதான் சீமான் போன்ற கைக்கூலிகளை ஆரியம் ஏவிவிட்டுள்ளது.
இன்று தமிழர் வரலாற்றில் மற்றுமொரு மைல் கல்லாகும். இவற்றை பாதுகாக்கதான் பெரியார், ஜீவா, காமராஜர், அண்ணா, கலைஞர் என எல்லோரும் போராடினர். பெரும் பங்கு ஆற்றியவர்களை நிராகரிக்க வேண்டும் என சீமான் உள்ளிட்டவர்கள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழர் நாகரிகம்தான் தொன்மையானது என்று உலகிற்கு ஓங்கி உரைத்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.