- Advertisement -
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை நினைத்துதான் வருந்துகிறேன். – என்.கே.மூர்த்தி
நாடு முழுவதும் தலைமை பண்புக்கு தகுதியானவர்களின் பற்றாகுறை இருந்து வருகிறது. அந்த நிலைமை ஆவடியிலும் இருக்கிறது.
இளைஞர்கள் படித்து முடித்ததும் தன் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சமுதாயப் பணியில் ஆர்வம் செலுத்த தயக்கம் காட்டுகிறார்கள். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கக் கூடிய சுயநலம் இல்லாத இளைஞர்கள் ஒதுங்கி இருப்பதால் அந்த இடத்தை தவறான சிந்தனை வாதிகளும், ஊழல்வாதிகளும் ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் சேவை மனப்பான்மை துளியும் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் எது கிடைத்தாலும் சுருட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
தன்னைத் தானே சுயப்பரிசோதனை செய்துக் கொள்ளுதல், தவறுகளை திருத்திக் கொண்டு நேர்மையாக வாழ்வதற்கு முயற்சி செய்தல் போன்ற தலைமைப் பண்பிற்கு தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை.
அவர்களின் ஒரே நோக்கம் சுயநலமாக சிந்திப்பது மட்டுமல்லாமல், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் வகுப்பதும் தான். இதுபோன்ற அரசியல் வாதிகளால் நாடு ஒரு பக்கம் கடனில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. மறுப்பக்கம் அரசு கஜனாவில் பணம் இல்லாமல் மக்கள் நலப் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. இந்த நிலை ஆவடியிலும் இருக்கிறது.
இந்த ஆபத்தான நிலையில் இருந்து ஆவடியை மீட்க தைரியமுள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும். இந்த ஊரும், நாடும் நம்முடையது, அதை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். நான் எந்த தியாகமும் செய்ய மாட்டேன், ஒரு மணி நேரத்தைக் கூட பொது சேவைக்காக செலவிட மாட்டேன். எனக்கு என் பணி, என் குடும்பம் மட்டும் தான் முக்கியம் என்று ஒதுங்கிக் கொண்டால் நாடு கொள்ளைப் போகத்தான் செய்யும். ஒரு கட்டத்தில் யார் ஒருவராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும்.
ஆவடிக்கு தலைமைப் பண்புக் கொண்ட இளைஞர்கள் தேவை
நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளை சுயநலவாதிகளும், ஊழல்வாதிகளும் ஆக்ரமித்துள்ளனர். நேர்மையானவர்களும், ஒழுக்கமானவர்களும் ஒதுங்கிக் கொண்டாதால் நாடு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது தன்னலமற்ற இளைஞர்கள் தேவை படுகிறார்கள். நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறையுள்ள இளைஞர்களாள் மட்டுமே இந்த ஊரையும், நாட்டையும் காப்பாற்ற முடியும்.
சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று எல்லோரும் அழைக்கிறோம். ஏன் புலியை சொல்லவில்லை? யானை உருவத்திலும், தோற்றத்திலும் பெரியதாக இருக்கிறது. அதனை ஏன் காட்டிற்கு ராஜா என்று அழைக்க வில்லை. காட்டில் ஆயிரக் கணக்கான உயிரினங்கள் இருக்கிறது. ஆனால் சிங்கத்தை மட்டும் காட்டுக்கு ராஜா என்றும் அரசன் என்றும் அழைக்கின்ற காரணம் என்ன? மற்ற விலங்குகளிடம் இல்லாத சிறப்பு, தலைமைப் பண்பு சிங்கத்திடம் என்ன இருக்கிறது?
சிங்கம் கூட்டமாக வாழுகின்ற உயிரினம். சிங்கம் வேட்டைக்கு சென்று ஒரு மானை வேட்டையாடியதும் அந்த உணவை மற்ற சிங்கங்கள் சாப்பிடுவதற்கு அனுமதிக்கும். மேலும், மீதி இருக்கும் உணவை நாளைக்கு தேவை என்று பதுக்கி வைக்கின்ற பழக்கம் சிங்கத்திடம் இல்லை. வயிறு நிறைந்ததும் ஒதுங்கி நின்று மற்ற விலங்குகளையும் சாப்பிடுவதற்கு அனுமதிக்கும்.
ஆனால், புலி தான் வேட்டையாடிய உணவை தான் மட்டுமே உண்ணுகின்ற சுயநலம் கொண்டது. தான் சாப்பிட்ட உணவில் மீதி இருந்தால் அதை நாளைக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் முள் புதரில் பதுக்கி வைத்துக் கொள்ளும்.
சிங்கமோ, நாளைக்கு தேவையானதை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம். இப்போது என் பசி தீர்ந்து விட்டது. மிச்சம் இருக்கும் இந்த உணவை மற்ற விலங்குகள் சாப்பிடட்டும் என்று அனுமதிக்கும். அதுதான் சிங்கத்தின் சிறப்பு.
தன் தேவைக்கு போக மீதி இருப்பதை பகிர்ந்து கொடுக்கும் குணம் சிங்கத்திடம் இருக்கிறது. அதனால் அது நிரந்தர அரசனாக இருக்கிறது.
பொது வாழ்க்கையில் தலைமை இடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு சுயநலம் இருக்கக் கூடாது.
ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5
பணத்தின் மீதும், நிலத்தின் மீதும் ஆசை உள்ளவர்கள் தொழிலதிபர்களாக வரமுடியும், அதில் வளர்ச்சி அடைய முடியும். ஒருபோதும் பொது வாழ்க்கையில் தலைமை இடத்தை பிடிக்கவே முடியாது. தவறி பிடித்தாலும் நிலை நிறுத்திக் கொள்ள முடியாது.
தொழிலதிபர்கள் நேரடியாக அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டார்கள். அப்படி வந்தாலும் அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அம்பானி, அதானியிடம் நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு பணம் இருக்கிறது. ஆனால் அவர்களால் நாட்டின் பிரதமராக வரமுடியாது. நான்கு முழம் வேட்டி மட்டுமே எனது சொத்து என்றவர்கள் காந்தி, காமராஜர், அறிஞர் அண்ணா போன்ற எளிமையானவர்கள், பொருள் மீது ஆசை இல்லாதவர்கள் தலைவர்களாக வளர்ந்து இருக்கிறார்கள். பணம் , பொருள் என்று தேடி ஒடும் பேராசைக் கொண்ட சுயநலவாதிகள் அரசியலில் நீண்ட காலம் நீடிக்க முடியாது.
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார்போன்ற தலைவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்து தங்களுடைய சொத்துக்களை இழந்து இருக்கிறார்கள். பதவி மற்றும் செல்வாக்கை வைத்து வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளவில்லை. அதனால் அவர்கள் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
பொதுவாழ்க்கைக்கு வருகின்றவர்கள் மனதளவிலும், சிந்தனை அளவிலும் நேர்மையாளராக இருக்க வேண்டும். இடதுசாரி இயக்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலோர் இன்றும் நேர்மையின் சிகரமாக இருக்கிறார்கள்.
நேர்மையாக வாழ்வது என்பது அது ஒரு வாழ்க்கை முறை. அது பயிற்சியால் வருவதல்ல, தன்னை அறிந்து கொள்ளும் முயற்சியால் வருவது.
தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது ”உங்கள் சொந்த நெருப்பில் உங்களை நீங்களே எரித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். சாணி சாம்பல் ஆனாதான் விபூதியாக மாறமுடியும். நீங்கள் முதலில் சாம்பல் ஆகவில்லை என்றால் எப்படி புதியதாக எழ முடியும்?”
இந்த உலகில், நாட்டில், நம்ம ஊரில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் தலைமை பண்பிற்கு நீங்கள் தயாராக வேண்டும். மனதளவில் தயாராக வேண்டும். அது தன்னை அறிந்து கொள்வதில் தொடங்குகிறது. தன்னை அறிந்து கொள்வது என்பது பேரறிவின் தொடக்கம். அதுவே மாற்றம். அதுவே மறுமலர்ச்சியின் ஆரம்பம்.
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்