தமிழ்நாட்டில் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது கண்டறியப்பட்டது, இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 5500 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு கண்டறியப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இப்போது இரும்பு யுகம் குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுக்க முடியாத ஆதாரத்துடன், ஏறக்குறைய 5,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு விட்டன. இதற்கு முன்பு கற்காலம், அடுத்து தாமிரம், பின்னர் செம்பு, வெண்கலம், இறுதியாக இரும்புக்காலம் இருந்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் எல்லாம் நம்பி கொண்டிருந்தனர். அதனால்தான் துருக்கியில் உள்ள கி.மு. 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரும்பு உருக்கு தொழில்நுட்பத்தை பார்த்தவுடன் இரும்பு ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு வந்தது என நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று 5,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு உருக்கு தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருந்தது, சிவகளையில் கி.மு. 11ஆம் நூற்றாண்டில் சிவகளையில் இரும்பு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் உலக தொல்லியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர் என்றால், பழைய கால வரிசையே தவறு என்கின்றனர்.
வடஇந்தியாவில் சிந்து சமவெளியில் செம்பு, வெண்கலம் பயன்பாட்டில் இருந்த அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இரும்பு நாகரிகம் இருந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதேபோல் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஹரப்பா நாகரிகத்தின் தொடர்ச்சி என்றும், அது 18 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவி இருந்தது என்றும் நினைத்தனர். ஆனால் தற்போது, குஜராத்தில் உள்ளது சமகாலத்தில் இருந்த மற்றொரு நாகரிகம் என கூறுகின்றனர். இதன் மூலம் இந்தியாவில் ஒரே நேரத்தில் பல நாகரிகங்கள் இருந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது உலகம் முழுவதும் திருக்குறளை பரப்புவேன், திருவள்ளுவர் கலைக்கூடத்தை உலகம் முழுவதும் கொண்டுவருவேன் என்று சொல்லும் பிரதமர் மோடி, ஏன் இந்த இரும்பு யுகம் குறித்து வாய் திறக்கவில்லை?. அப்போது தமிழர்களுக்கு ஒரு பெருமை என்றால், அதனை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? தமிழர்களுக்கான பெருமை என்பது இந்தியாவுக்கான பெருமை தானே?
இதைதான் ராகுல்காந்தி சொல்கிறார். இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் இப்படி ஒரு பண்பாடு, நாகரிகம் இருந்திருப்பது நிருபிக்கப்பட்டிருப்பது இந்தியர்களான நாம் அனைவருக்கும் பெருமை என்று சொல்கிறார். இந்திய நாட்டின் அரசியல் தலைவர் என்று யாராவது தங்களை சொல்லிக்கொண்டால் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது இந்த உண்மைதான். தமிழ்நாட்டிற்கான பெருமை, கர்நாடகாவிற்கான பெருமை என்பது அந்த மாநிலங்களுக்கானது மட்டுமில்லை. இந்தியாவுக்குமானதும் தான். இதனை நாம் உணர்ந்துகொண்ட அளவிற் பிரதமர் மோடி உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சிதான்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களை அரசியல், கார்ப்பரேட் மயமாக்குவது மிகவும் தவறானது. நெல்லையில் எம்.டி.டி இந்து கல்லூரி என்ற ஒரு கல்லுரி உள்ளது. அங்கு படித்தவர்களில் 6 பேர் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளனர். அப்படி என்றால் அந்த கல்லுரிக்கு என்று ஒரு பெயர் உள்ளது. அந்த கல்லுரிக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அந்த கல்லுரியின் பள்ளியில் படித்த ஒருவர்தான் புதுமைப்பித்தன். வ.உ.சி அந்த பள்ளியில்தான் படித்தார். சி.சுப்பிரமணிய பாரதியாரும் அந்த பள்ளியில்தான் படித்தவர்தான். அப்படிபட்ட மிக உயரிய நிலை உள்ள ஒரு பள்ளி. அந்த பள்ளியை அடிப்படையாக கொண்டு அமைந்த ஒரு கல்லுரி. அந்த கல்லுரியில் இருந்து 6 சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் வந்துள்ளார்கள் என்றால், எவ்வளவு பெருமையான விஷயம். இதற்கு காரணம் அந்த கல்லுரிக்கு என்று ஒரு தனித்தன்மையை சற்றும் தளராமல் காப்பாற்றி வந்துள்ளார்கள்.
கொல்கத்தாவில் செயின்ட் சேவியர் கல்லுரி உள்ளது. அதற்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்தவன். அதற்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஆங்கில இலக்கியம் படித்த என்னிடம் வந்து அருகில் உள்ள சமணர் குகைகள் போன்ற இடங்களுக்கு சென்று பாருங்கள் நமது பாரம்பரியம் தெரியும் என்பார்கள். அப்படி பிற துறைகளில் இருக்கும் பேராசிரியர்கள், மற்றொரு துறையில் உள்ள மாணவர்களை சந்தித்து பேசுவது வழக்கமாகவும் உள்ளது. அதுபோன்று ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்த பாரம்பரியங்கள் போற்றத்தக்கவை, பாதுகாக்க வேண்டியவையாகும். இந்தியாவில் ஒன்று யூனிட்டி இருக்கும், இல்லாவிட்டால் யூனிபார்மிட்டி இருக்கும். ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்காது. யூனிட்டி வேண்டும் என்றால், யூனிபார்மிட்டி குறித்து யோசிக்கக்கூடாது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மற்ற தனித்தன்மைகளை இழக்க வைக்கும் யூனிபார்மிட்டி இந்தியாவின் ஒற்றுமையை வளர்க்காது. அதை நோக்கிதான் மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.