தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சீமானின் ஈழ ஆதரவு மற்றும் பெரியார் மீதான விமர்சனத்தின் பின்னணி குறித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சீமானை அழைத்துச் சென்று கலைஞரிடம் அறிமுப்படுத்தியது நான்தான். இப்போது நான் மணியரசனிடம் கருத்தியல் ரீதியாக எவ்வளவோ வேறுபட்டு நிற்கிறேன். என்னைப்பற்றி அவர் கடுமையாக சொல்கிறார். ஆனாலும் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டதை மறுப்பது இல்லை. ஆனால் சீமான் ஒருமுறை கூட நன்றி உணர்ச்சியோடு எதையும் சொன்னது இல்லை. என் அரசியல் வாழ்வியலில் இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை. ஆனால் சீமான் பற்றி பேசும்போது கடும் கோபம் வருகிறது. வாழ்த்துக்கள் பட பாடல் வெளியீட்டின்போது, எனக்கு ஐயாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் அண்ணே, நீங்கள்தான் கூட்டி செல்ல வேண்டும் என்று சீமான் சொன்னார். 2007 அல்லது 2008 கால கட்டத்தில் இது நடந்தது. ஐயாவிடம், வாழ்த்துக்கள் என்பதற்கு க் போடலாமா? வேண்டாமா? என கேட்டார். அதற்கு கலைஞர் க் வேண்டாம். க் போட்டால் கிக் வந்துவிடும் என்றார். சீமான் என்னிடம் இது ஏன் என கேட்டார். அப்போது, க்கள் என்று சொன்னால் கள் பானம் என்றாகிவிடும் என்றேன். இதை மாலை கூட்டத்தில் பேசிய சீமான் வாழ்த்துக்களா? வாழ்த்துகளா? என்று சந்தேகம் இல்லை. வாழ்த்துகள் தான் என்று தமிழே சொல்லிவிட்டது என்று சொன்னார்.
ஒருமுறை சிஐடி நகரில் உள்ள கனிமொழி வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது தளபதி மு.க.ஸ்டாலின் கேட்கிறார் ஏன் நம்மை சீமான் இவ்வளவு கடுமையாக பேசுகிறார் என்று. அதற்கு கலைஞர் சொன்னார். அதை சுப.வீயிடம் தான் கேட்க வேண்டும். அவர்தான் தம்பி என்று அறிமுகம் செய்தார். நான் கலைஞரின் சட்டைப் பையில் இருந்து பேனாவை எடுக்கும் அளவுக்கு நெருக்கமானவன் என்று சீமான் சொல்வது உண்மை இல்லை. நான் சீமானை 2 அல்லது 3 முறை தான் கலைஞரை பார்க்க அழைத்துச் சென்றேன். கலைஞரை காண சீமான் தனியாக சென்றதில்லை. தன்னை உயர்த்தி கொள்வதற்காக அவர் என்ன வேண்டும் எல்லாம் சொல்லலாம். பேராசிரியர் அன்பழகன் கூட கலைஞரின் பாக்கெட்டில் பேனாவை எடுக்க மாட்டார்.
கலைஞரை விமர்சனங்கள் வைக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆயிரம் விமர்சனங்கள் அவர் இருக்கும் காலத்திலேயே வந்தன. அதிமுக மேடையில் கலைஞரை விமர்சித்து பாடினால் அதை நீ பாடுவாயா? காமராஜர் மீது எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. ஆனால் நான் அவர் குறித்து மரியாதைக் குறைவாக பேசக்கூடாது. அவர் குறித்து பேச ஒரு தகுதி வேண்டும். கலைஞராகட்டும், பக்தவத்சலம் ஆகட்டும், ராஜாஜி ஆகட்டும் அவர்கள் எல்லாம் பெரிய தலைவர்கள். ராஜாஜியின் கருத்தில் இருந்து வேறுபட எனக்கு உரிமை உள்ளது. ஆனால் ராஜாஜியை அவதூறாக பேசக் கூடாது. கலைஞரை யாரோ பேசலாம். ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் நீ கண்ணியமாக பேச வேண்டாமா? அந்த கோபம் எனக்கு இருந்து. அதனால் மேடையில் கோபமாக பேசினேன்.
ஈழ இறுதி யுத்தத்தின்போது கலைஞர், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நானும் கலந்துகொண்டேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய கலைஞர் நான் இதை சகோதர யுத்தமாக பார்க்கிறேன். நான் இப்படி சொல்லுவது வேறு யாருக்கும் இல்லா விட்டாலும் என் தம்பிகள் சுப.வீக்கும், திருமாவுக்கும் வருத்தமாகத்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும் என்று சொன்னார். வன்னியரசு தான் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகளிடம் இருந்து கேசட் கொண்டு வந்தார். திருமாவளவன் அதை சி.எம் இடம் எப்படியாவது சேர்த்துவிட வேண்டாம் என்று சொன்னார். நான் கலைஞரிடம் கொண்டு சென்று கொடுத்தேன். அன்றைக்கு சீமான் அந்த இடத்திலேயே இல்லை.
நான் பிரபாகரனை சந்தித்தது இல்லை. நான் ஈழத்துக்கு சென்றதில்லை. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிட்டுவை, உலக அளவில் பொறுப்பாளராக இருந்த மனோவை சந்தித்து உள்ளேன். தலைவரை நான் சந்தித்தது இல்லை. ஆனால் அவருக்கு என்னை தெரியும். கோவை ராமகிருஷ்ணன் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து இந்த புத்தகத்தை மொழிப் பெயர்த்து தமிழில் வெளியோட வேண்டும் என உங்களுக்கு யார் சொல்லியுள்ளார் தெரியுமா என்றார்? நான் யார் என கேட்டபோது, அது தலைவர் பிரபாகரன் என்று சொன்னார். எக்சோடஸ் என்ற பாலஸ்தீன போராட்டம் குறித்த நூல் அது. நடேசன், தமிழ்செல்வன், சூசை ஆகியோரும் என்னிடம் பேசியுள்ளனர். 2009 மே 18 இறுதிப் போரின்போது கஸ்பர், கனிமொழி, நான் தான் எல்லோரிடம் பேசி கொண்டிருந்தேன். கனிமொழி தான்ப.சிதம்பரத்திடம் பேசிக் கொண்டிருந்தார். செய்தவர்கள் எல்லாம் சொல்லவில்லை. என்னுடைய வாழ்க்கை குறிப்புகள் வந்ததும், வாழ்வதும் என்ற புத்தகம் எழுதியுள்ளேன். முதலில் வந்ததும், போவதும் என்றும் வைத்திருந்தேன். கலைஞர் ஏன் இப்போது போவது? குறித்து பேசுகிறாய் என்றார். அதனால் வேறு பேர் வை என்றார்.பின்னர் அவர்தான் வந்ததும், வாழ்வதும் என்று பெயர் வைத்தார்.
1997 மே மாதம் ஆனையிரவு முடிந்து உயிர் காக்கும் மருந்துகள் 100 யூனிட்டுகளாவது வேண்டும் என விடுதலைப்புலிகள் அமைப்பினர் கேட்டார்கள். என்னுடைய அண்ணன் மருமகன் ஒரு மருத்துவர். அவரிடம் சென்று கேட்டேன். அவர் இந்த மருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுவது. இது குண்டு துளைத்தவர்களுக்கு கொடுத்து வலியின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் மருந்து. இதை வாங்கினால் தெரிந்துவிடும் என்கிறார். நான் பல்வேறு இடங்களில் முயற்சித்தும் எனக்கு 8 மருந்துகள் தான் கிடைத்தது. பின்னர் திருச்செங்கோட்டில் மதிமுகவில் இருந்த மருத்துவர் பழ.பாலகிருஷ்ணன் மருந்துகளை கொடுத்தார். மேலும் நடிகர் மன்சூர் அலிகானும் அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் உதவினார். ஒட்டு மொத்தமாக எனக்கு 67 தான் மருந்துகள் தான் கிடைத்தது.
அதுவே போதும் என்றும், முடிந்தால் நீங்கள் கொண்டு வாங்கள் என விடுதலைப்புலிகள் அமைப்பினர் சொல்கிறார்கள். ஒரு கடற்கரைக்கு போய் கொடுத்துவிட்டு, இரவு வருகிறேன். அப்போது என் அப்பா உடல் நல குறைவால் மருத்துவமனையில் இருந்தார். எனது அண்ணன், தந்தை என்னை பார்க்க வேண்டும் என அழைப்பதாக சொன்னார். நான் முக்கியமான வேலையாக இருக்கிறேன். காலையில் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். மறுநாள் காலையில் சென்றபோது அப்பா இறந்த செய்தி வந்தது. அப்போது, வருத்தமாக இருந்தது. எனினும் நான் சென்றிருந்தாலும் என் அப்பாவை காப்பாற்றி இருக்க முடியாது. ஆனால் ஒரு 67 உயிர்களை காப்பாற்ற முடிந்தது என்று ஆறுதல் அடைந்தேன்., இவ்வாறு அவர் தெரிவித்தார்.