20. மனவலிமையின் ஆற்றல் – என்.கே.மூர்த்தி
“இருட்டை சபித்து கொண்டு இருப்பதை வி்ட்டு விட்டு ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்” – கன்பூசியஸ்
இந்த நூலில் இடம் பெற்றுள்ள நடைமுறை விதிகள் அனைத்தும் மிகவும் முக்கியமானது.
அதேபோல் “மனதின் ஆற்றல்” என்பது மிகவும் முக்கியமானது. வரலாற்றில் நாம் படித்து வந்த வீரர்கள், சாதனையாளர்கள், உலகின் பணக்காரப் பட்டியலில் இருப்பவர்கள் என்று எல்லோரும் மனவலிமையினால் சாதித்தவர்களே.
இதுவரை நாம் கற்பனை செய்து வந்ததை செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றால், வெற்றிப் பெற்று சாதனையாளராக வேண்டும் என்றால், நாம் மனவலிமை உள்ளவராக இருக்க வேண்டும்.
மன வலிமை மிக்கவர்கள் மட்டுமே எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக மாற முடியும்.
“ஊசலாட்டம் இல்லாத துணிச்சல்… ” இந்த துணிச்சல் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னர் வருவது. துணிச்சல் இல்லாத தலைமையின் கீழ் இயங்குவது, ஓட்டைப் படகுகளில் பயணம் செய்வதற்கு சமமானது.
உறுதியான முடிவு…. தன்னைப் பற்றி முழுமையாக உணர்ந்தப் பின்னர் தான் எடுக்கும் முடிவிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது வலிமையாலும் புத்திசாலித்தனத்தாலும் ஐரோப்பிய கண்டத்தையே ஆட்டிப் படைத்தவர். எதற்கும் துணிந்தவர் “அஞ்சா நெஞ்சன்” என்று போற்றப்படும் இவர், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல இளம் வயதிலேயே பயம் அறியாதவராய் இருந்தார். அதற்குச் சான்றாகக் கீழ்வரும் சம்பவத்தினை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
நெப்போலியன் பிரெஞ்சு மாகாணத்தின் பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான். போதுமான அளவு கல்வியறிவு எட்டவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்து வந்தான். அப்படி இருக்கையில் ஒருநாள் அவனருகில் இருப்பவனின் பொருள் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை நெப்போலியனை தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது என்று யூகித்த அந்த மாணவன், உடனடியாக ஆசிரியரிடம் நெப்போலியன் திருடியதாக புகார் கூறினான்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர், நெப்போலியனை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பிரம்பால் எவ்வளவு அடிக்க முடியுமோ அந்த
அளவிற்கு அவனை அடித்து விட்டார். நெப்போலியன் ஆசிரியர் அடித்த அடிகளை தாங்கிக் கொண்டு அமைதியாக வெளியே வந்தான். அடுத்த நாளில் அந்த மாணவனின் பொருள் அவனுக்கு கிடைத்துவிட, நெப்போலியன் திருடவில்லை என்பதை ஆசிரியரிடம் வந்து அந்த மாணவன் கூறினான்.
உடனே அந்த ஆசிரியர் நெப்போலியனை அழைத்து ‘’நீ திருடவில்லை என்பதை நான் அடிக்கும் போது என்னிடம் கூறியிருக்கலாம் அல்லவா? தேவையில்லாமல் அடி வாங்கி இருக்க மாட்டாய்’’ என்று சற்று வருத்ததோடு கூறினார்.
அதற்கு நெப்போலியன், “நீங்கள் அடிப்பதற்கு முன்னரே என்னிடம் அதை பற்றி கேட்டிருந்தால் நான் எடுக்கவில்லை என்று கூறியிருப்பேன். ஆனால் நீஙகள் அடிக்கும் பொழுது கேட்டதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வேளை நீங்கள் அடிக்கும் பொழுது நான் திருடவில்லை என்று கூறியிருந்தால் நான் பயத்தில் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள்.
நான் பயந்து விட்டேன் என்று யாரும் நினைக்கக் கூடாது. அது தான் எனக்கு வலிக்குமே தவிர நீங்கள் அடிப்பது ஒன்றும் எனக்கு வலிக்காது” என்று பட்டென்று கூறினான் நெப்போலியன். இந்த அஞ்சாத குணம் தான் அவனை ஐரோப்பியாவை ஆள வைத்தது.
வெற்றிகரமான தலைவன் என்பவன் தனது வேலைகளை திட்டமிட வேண்டும். திட்ட மிட்ட வேலைகளை செயலாக்க வேண்டும். ஊகத்தின் அடிப்படையில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் தலைமை பண்பிற்கு வரவேண்டும் என்று விரும்பினால் எப்பொழுதும் வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
அதுவும் தனக்கு கீழே பணிபுரிகிறவர்களை விட நாம் அதிகமாக வேலை செய்வது தான் அந்த பொறுப்பிற்கு அழகு சேர்க்கும். வேலையில் அலட்சியம் காட்டாமல் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இயங்கினால் மட்டுமே மரியாதைக்குரிய நிர்வாகியாக ஆளுமை செலுத்த முடியும். வரலாற்றில் இடம் பிடிக்கவும் முடியும்.
மனலவலிமை மிக்க பென்னி குவிக் என்னும் மாமனிதரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பென்னி குவிக் பிறப்பால் இந்தியர்தான். இவர் 1841 ஜனவரி 15ல் புனேவில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பென்னிக் குவிக் தலைமை பொறியாளராக பணிபுரிந்தார். அப்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாக க் கடலில் கலப்பதைப் பார்த்து பென்னி குவிக் வேதனை அடைந்தார். இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்ட லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று பென்னி குவிக் எண்ணினார்.
இதற்கான ஒரு திட்ட வரைவை ஆங்கிலேயே அரசின் பார்வைக்கு வைத்து அனுமதியும் பெற்றார்.
முல்லை மற்றும் பெரியாறை இணைத்து அணை கட்ட ஆங்கிலேய அரசு சம்மதித்து 75 லட்சம் ருபாய் நிதி ஒதுக்கியது.
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண அரசின் “கவர்னர் பெயில்பி லாலே’’ முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை அணை கட்டும் பணியை தீவிரமாக மேற்கொண்டது.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு வெள்ளம் போன்ற இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகளில் பாதி அணை கட்டப்பட்டிருந்தது.
அப்போது தொடர்ந்து பெய்த கனமழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் சென்றது. கட்டுமானப்பணியில் இருந்த ராணுவத் தொழிலாளர்கள் மனமுடைந்தனர். இதற்கு மேல் அந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசும் மறுத்துவிட்டது.
இந்நிலையில் கர்னல் பென்னி குவிக் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்தார். எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். பென்னி குவிக் மட்டும் தனியாக நின்றார். அப்போது தீர்க்கமான முடிவிற்கு வந்தார். என்ன செய் தாகிலும், எப்பொருளை விற்றாகிலும், எதை இழந்தாலும் இந்த அணையை கட்டியே தீருவேன் என்று தனிநபராய் முடிவெடுத்தார்.
உடனடியாக இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துகள், நகைகள் என்று அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். தன் சொந்த பணத்தில் கட்டி முடித்தார்.
அதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
1895 ஆம் ஆண்டில் தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று 75 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து முல்லை பெரியாறு அணை என்கிற பாலத்தை கட்டியிருக்கிறார். இது போன்ற பணிகள் செய்வதற்கு ஒருவருக்கு எவ்வளவு பெரிய மனவலிமை வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
பென்னி குவிக் என்கிற அந்த மாமனிதனின் மனவலிமையின் சாதனையால் இன்று கோடிக்கணக்கான மனிதர்கள் பசியின்றி வயிறாற உணவு உண்ணுகிறார்கள்.
ஒருவன் எதை இழந்தாலும் மீட்டு விடலாம். அவனிடம் உள்ள மனவலிமையை மட்டும் இழந்து விட்டால் அதை திரும்ப பெறவே முடியாது.
மனிதயினத்தின் வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான். அத்தனை போராட்டங்களின் போதும் கூடவே நிற்பது அவனுடைய மனவலிமை
மட்டுமே.
மனிதன் எப்பொழுதெல்லாம் மன வலிமையை இழந்து சோம்பல் அடைகிறானோ அப்போதே அவன் தோல்வியின் முதல் படிக்கட்டில் அடியெடுத்து வைக்கிறான் என்பதை கூற முடியும்.
தொடரும்…