கடந்த 70 ஆண்டுகளில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டது இல்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வடஇந்தியாவை சேர்ந்த மோஜோ ஸ்டோரி என்கிற இணையதளத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் பர்கா தத் இந்த நேர்காணலை எடுத்திருந்தார். இந்த நேர்காணலில் அமைச்சர் பிடிஆர் பழனிவோல் தியாகராஜன் கூறியுள்ளதாவது
கேள்வி: மும்மொழி கொள்கை மற்றும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கான நியாயமான காரணங்கள் என்ன?
இந்தியாவில் கடந்த 1968, 1986 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று காலக் கட்டங்களிலும் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2 தேசிய கல்விக் கொள்கைகளிலும், அவற்றை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை தருவோம் என்று மிரட்டல் விடுக்கவில்லை. ஆனால் இந்த முறை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அவர்கள் இதனை தாண்டி நிபந்தனைகைளை ஏற்றுக்கொண்டால் தான் பணம் தருவோம் என்று மிரட்டுகிறார்கள். மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஒருவேளை ஏற்றுக் கொண்டோம் என்றால் வரும் நாட்களில் இது தொடரும். வருங்காலங்களில் பிரதமர் மோடியின் படத்தை பயன்டுத்தினால் மட்டும் தான் பணம் தருவேன் என்பார்கள். எங்களுக்கு இந்தி என்பதோ, 3வது மொழியோ பிரச்சினை கிடையாது. இதை ஆதரித்தோம் என்றால், இனி வருங்காலங்களில் இதேபோன்ற நிலைதான் தொடரும்.
கேள்வி: ஒருபுறம் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறீர்கள், அதேவேளையில் மோடியை எதிர்க்கும் யோகேந்திர யாதவ் மும்மொழி கொள்கையில் எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என்று சொல்லுகிறார். கடந்த 2 தேசிய கல்வி கொள்கைகளிலும் இந்தி கட்டாயம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இதில் கட்டாயம் என்று சொல்லப்படவில்லையே? அப்படி இருந்தும் ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
எந்த காலத்திலும் தமிழ்நாடு புதிய கல்விக்கொள்கை என்பதை ஏற்கவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கல்விக் கொள்கை இருக்கிறது. அது வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுதான் அடுத்த நிலைக்கு போக வேண்டும் என்று கிடையாது.
கேள்வி : புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க தத்துவார்த்த ரீதியாக என்ன காரணங்கள் உள்ளன?
முதல் விஷயம் மும்மொழி கொள்கை. அடுத்து 5 மற்றும் 8ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பில் ஆல் பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. படிப்பு என்பது ஒரு கால கட்டத்திற்கு பிறகுதான் மாணவர்களுக்கு புரிதல் வரும். 5-வது அல்லது 8-வது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்போது அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தினால், மாநிலத்தில் கல்வி வளர்ச்சி இருக்காது. புதிய கல்விக் கொள்கையின் நடைமுறை என்பது தொழிற் கல்விமுறைக்கு மாற்றும் அபாயமும் உள்ளது. இதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெரிய பாதிப்பு எற்படும். கடந்த 70 ஆண்டுகளில் மத்தியில் பாஜக, காங்கிரஸ் என்று யார் இருந்தாலும், மாநிலத்தில் திமுக, அதிமுக என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் இந்த பதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்நாட்டின் கல்வி கொள்கை வெற்றிகரமானதாக உள்ளதால், புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்கிறோம்.
கேள்வி : திமுக அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பதால் அவர்களுக்கு 3 மொழி கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை?
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். 15 லட்சம் மாணவர்கள் மட்டும் தான் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்கள். இது ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 80% Vs 20% என்ற அளவில்தான் உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் கூட நியமிக்க முடியாத நிலை தான் உள்ளது. இந்த சூழலில்தான் மத்திய அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளைவிட தரம் வாய்ந்த சர்வதேச பள்ளிகளும் உள்ளன. அங்கு இரு மொழி கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. அப்போது தரமான கல்விக்கு 3 மொழிகள் இருக்க வேண்டியது அவசியம் கிடையாது.
திமுக அமைச்சர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். பதிலுக்கு நான் கேட்கிறேன் மத்திய அமைச்சர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஒரு எம்எல்ஏ, எம்.பி. என்கிறபோது அவர்கள் சம்பளம் மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிக்கிறார்கள் என்பது அந்த பெற்றோரின் விருப்பமாகும். அதனை யாரும் தடுக்க முடியாது? அதேபோல் ஒரு கொள்கையையும், தனிப்பட்ட நபரின் வாழ்க்கையையும் ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும். இது வெறும் 34 அமைச்சர்களின் பிரச்சினை மட்டும் கிடையாது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயமாகும்.
தமிழ்நாட்டில் சமத்துவம் அற்ற கல்விமுறை உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த கல்வி முறை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளதா? என்றால் கிடையாது. நாடு முழுவதும் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி என்கிற பாகுபாடு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பொருளாதார கொள்கை 1991ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டதாகும். அதற்கு பின்னர்தான் ஏழைகளுக்கு ஒரு மாதியான கல்வியும், பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியான கல்வியும் ஏற்பட்டது. இந்தியாவில் சமத்துவமான கல்வியை கொண்டு வர வேண்டும் என்றால், இந்தியாவில் பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டும். நாட்டில் தனியார் பள்ளிகளே இருக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். அப்படி என்றால் மட்டும்தான் இந்தியாவில் சமத்துவமற்ற கல்விமுறையை ஒழிக்க முடியும்.
கேள்வி: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூ.2,000 கோடி கல்வி நிதி வழங்க வேண்டிய விவகாரத்திற்கு சமரச தீர்வுகள் ஏதேனும் உள்ளதா?
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண முடியுமா என்று ஆலோசித்து வருகிறோம். அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான இந்த நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்தி ஆக வேண்டும்.
கேள்வி : தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரத்தில் வடக்கு Vs தெற்கு என்கிற புதிய விவாதத்தை கிளப்ப விரும்புகிறீர்களா?
இந்த பிரச்சினையை பொருத்தவரை வடக்கு Vs தெற்கு என்று பிரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்தியாவின் வளர்ச்சியை பொருத்தவரை சமச்சீரானதாக இல்லை. தென் மாநிலங்கள் ஒரு விதமான வளர்ச்சியும், வட இந்தியாவில் வேறு விதமான வளர்ச்சியும் இருப்பதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி அடைந்ததற்கு கல்வி, சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது தான் காரணமாகும். குறிப்பாக இளம் தலைமுறையினரின் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமாகதான் இந்தியாவின் வளர்ச்சி என்பது சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது, இவ்வாறு அமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.